Published : 26 Oct 2018 12:53 PM
Last Updated : 26 Oct 2018 12:53 PM

அடுத்து என்ன, தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் டிடிவி ஆலோசனை

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எதிராக தீர்ப்பு வந்ததையடுத்து தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை தலைவர் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பு வழங்கினர்.

இந்நிலையில் வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு வழக்கு சென்றது. நேற்று 3 வது நீதிபதி தீர்ப்பை வழங்கினார் தீர்ப்பில் அவர் தலைமை நீதிபதியின் தீர்ப்பினை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் 18 பேர் நீக்கம் என்பது உயர் நீதிமன்ற தீர்ப்பாக அமைந்துள்ளது.

நீதிபதி தீர்ப்பில் ‘‘அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பில் எது சரி எது தவறு என்று நான் விமர்சிக்க விரும்பவில்லை. அதற்குள் செல்ல விரும்பவில்லை. ஆரம்பம் முதல் இந்த தீர்ப்பில் சபாநாயகர் உரிய அவகாசம் கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவரது நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட வாய்ப்பில்லை. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் உறுதிச்செய்யப்படுகிறது. அதில் சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை’’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 சட்டப்பேரவை தொகுதிகளை காலியாக அறிவித்து இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தலாம் என அறிவித்துள்ளார். ஏற்கெனவே தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம். சட்டப்பேரவையில் நம்பிக்கைகோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்ட தடையையும் நீக்கம் செய்து வரும் காலத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டுவந்தால் சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு அதனை அனுமதிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய குற்றாலத்தில் இருந்த 17 எம்.எல்.ஏக்கள் மதுரை வந்தனர். சென்னையிலிருந்த வெற்றிவேல், பார்த்திபன் இருவரும் சென்னையிலிருந்து கிளம்பிச்சென்றனர். டிடிவி தினகரனும் நேற்றிரவே சென்றுவிட்டார்.

இதை அடுத்து இன்று காலைமுதல் ஆலோசனை நடந்து வருகிறது. டிடிவி அணி எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யலாம் என வாதிட்டு வரும் நிலையில் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் அது ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே அமையும் மேலும் 6 மாதம் இதை தள்ளிப்போவது மட்டுமே நடக்கும், வேறு பயன் இருக்காது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே டிடிவி தரப்பில் அதிருப்தியில் உள்ளவர்களை வலைவீசி பிடிக்கும் வேலையையும் ஆளுங்கட்சித்தரப்பில் துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தம்பிதுரை 18 பேரும் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்ளத்தயார் என பேட்டி அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x