Last Updated : 03 Oct, 2018 04:01 PM

 

Published : 03 Oct 2018 04:01 PM
Last Updated : 03 Oct 2018 04:01 PM

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி, முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகன் ஜாமீன் கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கினை கீழமை நீதிமன்றம் தினந்தோறும் விசாரணை செய்து விரைவாக வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உதவிப் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீன் வழங்கக் கோரி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றங்களில் நிர்மலாதேவி மனுத்தாக்கல் செய்தார். இதுவரை 6 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இச்சம்பவம் தொடர்பாக உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி ஏப்ரல் 17-ல் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தபட்ட விசாரணையின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகன் ஆகியோர் ஏப்ரல் 23-ல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தற்போது இவர்கள் மூவரும் மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஜாமீன் கோரிய மனுவினை ஜூலை மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் செப்டம்பர் மாதத்திற்குள் சிபிசிஐடி போலீசார் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணையை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் கீழமை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகன் ஜாமீன் வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கினை கீழமை நீதிமன்றம் தினந்தோறும் விசாரணை செய்து விரைவாக வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகன் ஜாமீன் கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x