Published : 07 Oct 2018 06:19 PM
Last Updated : 07 Oct 2018 06:19 PM

‘நாங்க நாட்டுக்கே செக்யூரிட்டிடா’: போலீஸாக நடித்து வழிப்பறி செய்த நபர் கைது

பாண்டிபஜார் பகுதியில் “போலீஸ்” எனக்கூறி மிரட்டி தங்க மோதிரத்தை பறித்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2.25 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், பக்ஸ் சாலையில் வசிப்பவர் பன்னீர்செல்வம் (57). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி அன்று காலை 7.30 மணியளவில் வடக்கு உஸ்மான் ரோடு, பாரதி நகர் முதல் தெரு சந்திப்பில் பன்னீர் செல்வம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோ ஒன்று அவரை இடை மறித்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நபர் ஏம்பா இங்க வா என்று அருகில் அழைத்து தன்னை போலீஸ் என்று கூறி உங்களை விசாரிக்க வேண்டும் என்று கூறி ஆட்டோவில் ஏறச் சொல்லி வற்புறுத்த “சார் கை வைக்கிற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க நான் செக்யூரிட்டி” என்று பன்னீர் செல்வம் மறுத்துள்ளார்.

“என்னது செக்யூரிட்டியா? நானும் தான் செக்யூரிட்டிதான் நாட்டையே காக்கிற போலீஸ் எஸ்.ஐ என்கிற செக்யூரிட்டி, நீ உன் குற்றத்தை மறைக்க பங்களாவில் வேலை செய்யும் செக்யூரிட்டி ஏறு ஆட்டோவில்” என்று மிரட்டி அழைத்து சென்றார். வழியில் உன் மோதிரத்தில் டிரான்ஸ் மீட்டர் வைத்திருக்கிறாயா, கூட்டாளிகளுக்கு தகவல் கொடுக்கிறாயா? கழற்று என்று பன்னீர்செல்வம் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்துவிட்டு, பன்னீர்செல்வத்தை ஆட்டோவிலிருந்து இறக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றார்.

சுடுகாட்டு காமெடியில் சிக்கிய வடிவேல் போல “அட நாதாரி பயலேபோலீஸே இந்த வேலை செய்கிறதே” என்று புலம்பியப்படி பன்னீர்செல்வம் அருகிலிருந்த பாண்டிபசார் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் விசாரணையில் அது போலீஸ் அல்ல மர்ம நபர் ஒருவர் போலீஸ் போல் நடித்து மோதிரத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.

பன்னீர்செல்வம் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து போலீஸார் மர்ம நபரை தேடி வந்தனர். அப்போது இதே போன்று வேறு காவல் நிலையத்தில் குற்றவாளிகள் கைதாகியுள்ளார்களா? என்று விசாரணை நடத்தியபோது புழல் மற்றும் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையங்களில் இதேபோன்று குற்றச்செயலில் ஈடுபட்டு திருநின்றவூர், முத்தமிழ்நகரைச் சேர்ந்த மகேஷ் (எ) மகேந்திரன், (65), கைது செய்யப்பட்டு தண்டனைப் பெற்றுள்ளது தெரியவந்தது.

உடனடியாக மகேஷ் (எ) மகேந்திரனை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 1/4 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மகேஷ் (எ) மகேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x