Published : 25 Oct 2018 08:30 PM
Last Updated : 25 Oct 2018 08:30 PM

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக நடந்தாரா சட்டப்பேரவை தலைவர்?- தகுதி நீக்க வழக்கு தீர்ப்பில் நீதிபதியின் வரிகள்

எடியூரப்பா வழக்கு, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீது சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காத காரணம், ஆளுநர் கடிதத்தை வாங்கியபோது கூறியவை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை தகுதி நீக்க வழக்கில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி எம்.சத்யநாராயணன் தீர்ப்பு விவரம்:

''இந்த வழக்கில் தகுதி நீக்க உத்தரவு என்பது அரசியலமைப்பின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பாரபட்சமாகவும், உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை போதுமான ஆதாரங்களுடன் 18 எம்.எல்.ஏக்கள் தரப்பில் நிரூபிக்கவில்லை.

எடியூரப்பா வழக்குடன் இந்த வழக்கை ஒப்பிட முடியாது. ஆவணங்களை ஆராய்ந்தபோது இந்த வழக்கு முற்றிலும் வேறுபட்டுள்ளது. 18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை.

அரசியல் சாசன கடமை மீறியதாகவோ, உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டதாகவோ, இயற்கை நீதியை மீறியதாகவோ கூற முடியாது. 18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சபாநாயகரால் நெறி தவறி பிறப்பிக்கப்பட்டதாகச் சொல்ல முடியாது.

முதல்வருக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தபோது, இதில் தன்னால் தலையிட முடியாது என ஆளுநர் கூறியுள்ளார். ஆனால் இந்தத் தகவலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கவில்லை.

ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேருக்கு எதிராக செம்மலை தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததாலேயே சபாநாயகர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே அவர்களுக்கு (ஓபிஎஸ் அணி) சாதகமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் சபாநாயகர் செயல்பட்டார் என்பதை ஏற்க முடியாது.

தகுதி நீக்கம் செய்ததில் சபாநாயகர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டார் என்பதை 18 எம்.எல்.ஏக்களும் நிரூபிக்கவில்லை.

தகுதி நீக்க விதிகளையும் இயற்கை நீதியையும் முழுமையாக பின்பற்றியே உத்தரவை பிறப்பித்துள்ளார். தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்குகிறேன்''.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x