Published : 22 Oct 2018 05:36 PM
Last Updated : 22 Oct 2018 05:36 PM

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது: பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய மோட்டார் சைக்கிளும் பறிமுதல்

பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய மோட்டார் சைக்கிளில் சென்று செல்போன் பறித்த இரண்டு இளைஞர்களை பெரியமேடு போலீஸார் கைது செய்தனர்.

சூளை சாமிப்பிள்ளைத் தெருவில் வசிப்பவர் பினய்குமார் (27). இவரது தம்பி ராஜிவ் (25) நேற்று தனது அறையின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், ''எங்களுடைய செல்போனைக் காணவில்லை, உன் செல்போனைக் கொடு'' என ராஜிவ் எதிர்பாராத நேரத்தில் அவரது பாக்கெட்டிலிருந்த செல்போனைப் பறித்துள்ளனர்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத ராஜிவ் செல்போனைப் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்த ராஜிவின் நண்பர் பப்லூ மற்றும் ராஜிவின் அண்ணன் பினய்குமாரும் ஓடிவந்துள்ளனர். இதையடுத்து செல்போனைப் பறிக்கும் முயற்சியில் இருந்தவர்கள் ஆத்திரத்தில் பப்லுவையும், ராஜிவையும் தாக்கியுள்ளனர்.

இதில் ராஜிவுக்கு வலது புருவம் வெட்டப்பட்டு தையல் போடப்பட்டது. பப்லுவுக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்த மூவரும் பெரியமேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் செல்போன் பறிக்க முயன்ற இருவரையும் கைது செய்தனர். காயம்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் சூளை டிப்போ தெருவைச் சேர்ந்த தமிழ்வாணன் (27), சூளை சாமிப்பிள்ளைத்தெருவைச்ச் சேர்ந்த சிரஞ்சீவி (21) என்பதும் தெரியவந்தது. இருவரும் போலீஸில் சிக்காமல் இருக்க தங்களது மோட்டார் சைக்கிளில் பத்திரிகையாளர் என்பதைக் குறிக்கும் வண்ணம் பிரஸ் என்கிற ஸ்டிக்கரை ஒட்டியிருந்தனர்.

போலீஸார் அவர்கள் பத்திரிகையாளர்களா? என்று விசாரணை நடத்தியபோது சில மாதங்களுக்கு முன் மாதம் ஒருமுறை வரும் ஒரு பதிவு செய்யப்படாத பத்திரிகையில் சிரஞ்சீவி வேலை பார்த்ததாகவும் அப்போது பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டியதாகவும், தற்போது அதிலிருந்து விலகி இன்ஸுரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளனர்.

போலீஸார் வாகனச் சோதனையிலிருந்து தப்பவும், குற்றச்செயல்களில் ஈடுபட்டு தப்பும்போது பாதுகாப்புக்காகவும் பிரஸ் ஸ்டிக்கரை அகற்றாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x