Published : 31 Oct 2018 04:03 PM
Last Updated : 31 Oct 2018 04:03 PM

உதகை இரட்டைக் கொலை வழக்கு: இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

 

உதகையில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் வேலை செய்து வந்தவர் தஸ்தகீர். இவரது நண்பர் ஹயாஸ். இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், சிதம்பரத்தைச் சேர்ந்த காசி விஸ்வநாதன், அவரது நண்பர்கள் சிவசக்தி, 18 வயதுக்குட்பட்ட இரண்டு பேர் என நால்வரும் தஸ்தகீர் வேலை பார்க்கும் விடுதிக்கு வந்து 2011 செப்டம்பர் 4-ம் தேதி அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்த அவர்கள் 4 பேரும் தஸ்தகீரையும், ஹயாஸையும் 2011 செப்டம்பர் 6-ம் தேதி இரவு இரும்புக் கட்டையால் தாக்கியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து காசி விஸ்வநாதன் உள்ளிட்ட நால்வரும் தப்பிச் சென்றுவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து உதகை நகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், கொலை செய்யப்பட்ட தஸ்தகீருக்கு அவரது உறவுப் பெண்ணான இம்ரோஸ் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி இருந்தது தெரியவந்தது. இம்ரோஸும், காசி விஸ்வநாதனும் சிதம்பரத்தில் கல்லூரியில் படித்து வந்தபோதே காதலர்கள் என்பதும், இம்ரோஸை தஸ்தகீரை திருமணம் செய்வதில் விருப்பமில்லாத காசி விஸ்வதநாதன் தனது நண்பர்களுடன் உதகைக்குக் வந்து தஸ்தகீரை கொலை செய்ததும், அதைத் தட்டிக் கேட்ட ஹயாஸையும் அவர்கள் கொலை செய்தததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக நடைபெற்று வந்த விசாரணையில் இரண்டு பேர் 18 வயதுக்கு உட்பட்டோர் என்பதால் அவர்கள் இருவர் மீதும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு, அவர்களுக்குத் தலா 6 மாதம் நன்னடத்தைக்கான சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.

எஞ்சியுள்ள காசி விஸ்வநாதன், சிவசக்தி ஆகிய இருவர் மீது நடைபெற்று வந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் செவ்வாய்க்கிழமை இரவு தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட காசி விஸ்வநாதன், சிவசக்தி இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக மாலினி பிரபாகரன் ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x