Published : 30 Oct 2018 04:44 PM
Last Updated : 30 Oct 2018 04:44 PM

ரூ.5.78 கோடி ரிசர்வ் வங்கிப் பணம் கொள்ளை வழக்கு: கொள்ளையர்களை 14 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

ரயிலில் வந்த ரிசர்வ் வங்கிப் பணம் ரூ. 5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ம.பி.யில் பிடிபட்ட தலைவன் மோஹர் சிங் உட்பட 5 கொள்ளையர்களை 14 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட ரூ.323 கோடி பழைய, கிழிந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டுவரப்பட்டது.

எழும்பூர் வநத ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5 கோடியே 78 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரிந்தது. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி துப்பு துலங்காத நிலையில் சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

சேலத்திலிருந்து சென்னை வரும் 350 கிலோ மீட்டர் தூரத்தை ஆய்வு செய்ததில் சரியான துப்பு கிடைக்கவில்லை. மின்சார ரயிலாக இருந்தாலும் சேலத்திலிருந்து விழுப்புரம் வரும் வரையில் அது டீசல் இன்ஜின் மூலம் இழுத்து வரப்பட்டது ஆய்வில் தெரிய வநதது.

மின்சார ரயில் கேபிள் வரும் இடத்தில் ரயில் பெட்டியின் மேற்கூரையைப் பெயர்த்து கொள்ளை அடிக்க முடியாது. ஆகவே டீசல் இன்ஜின் வரும் வரையில் உள்ள பகுதிகளிலேயே மேற்கூரையில் துளையிட்டு கொள்ளை அடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என சிபிசிஐடி போலீஸார் சந்தேகித்தனர்.

இஸ்ரோ உதவியுடன் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியத்தில் கொள்ளையர்கள் சிக்கினர். அவர்கள் மத்தியப் பிரதேசம், பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தை சேர்ந்த மோஹர்சிங் என்ற கொள்ளைக்கூட்டத் தலைவனின் ஆட்கள் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீஸாரின் தீவிர விசாரணையில் மோஹர்சிங்கின் கூட்டாளிகள் ரயில் கொள்ளையில் ஈடுபட்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் (38), ரோஹன் பார்த்தி (29) இருவரும் கடந்த அக்டோபர் 12 அன்று சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் நடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு ரயில் சின்னசேலத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கிச் செல்லும்போது மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்த இவர்கள் மேற்கூரையை வெட்டி எடுத்து விருத்தாச்சலத்தில் இறங்கிச் சென்றது தெரியவந்தது.

மோஹர் சிங் தலைமையிலான இந்த குழு பார்த்தி என்று அழைக்கப்படும் பயங்கரமான கொள்ளைக் கும்பலாகும். இவர்கள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களில் பரவி இருப்பவர்கள் ஆவர்.

ஏற்கெனவே 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் 1. மோஹர் சிங், 2. ருசி பார்தி, 3. கலியா (எ) கிருஷ்ணா, 4. மஹேஷ் பார்தி, 5. பில்டியா (எ) ப்ரஜ்மோகன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் 5 பேரும் வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு மத்தியப் பிரதேச சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை தனிப்படை கைது செய்தது.

அங்கு டிரான்சிட் வாரண்ட் போட்டு அவர்களை நேற்று மாலை சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் இன்று காலை சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் பிரகாஷ் முன் ஆஜர்படுத்தினர்.

அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். சிபிசிஐடி சார்பில் குற்றவாளிகள் 5 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்தனர். இதை ஏற்ற நீதித்துறை நடுவர் பிரகாஷ் 14 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

இதையடுத்து ஐவரும் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 14 நாட்கள் போலீஸ் விசாரணைக்குப் பின் வரும் நவம்பர் 12 அன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x