Last Updated : 29 Oct, 2018 04:58 PM

 

Published : 29 Oct 2018 04:58 PM
Last Updated : 29 Oct 2018 04:58 PM

பாரதியார் பல்கலைக்கூடத்தை இளையராஜாவுக்கு தாரை வார்க்கக் கூடாது: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு எதிர்ப்பு

புதுச்சேரியில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தை இளையராஜாவுக்கு தாரை வார்க்கக்கூடாது என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு எதிரிப்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரிக்கு அண்மையில் இசையமைப்பாளர் இளையராஜா வந்திருந்தார். அவர் முதல்வர் நாராயணசாமியைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கூடம் உள்ளிட்ட பல பகுதிகளைப் பார்வையிட்டார். அவர் புதுச்சேரியில் இசை தொடர்பான அமைப்பு தொடங்க உள்ளதாக பேச்சு எழுந்தது.

இந்நிலையில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலர் சுகுமாரன் கூறியதாவது:

“புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஓவியம், சிற்பம் ஆகிய கலை, இசை, நடனம் ஆகியவைப் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் அகில இந்திய தொழில்நுட்பக் கழக (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் பயின்ற பலர் புகழ்பெற்ற கலைஞர்களாக விளங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா புதிதாக இசைக் கல்லூரி ஒன்றை புதுச்சேரியில் தொடங்க இருப்பதாகவும், அதற்குப் பாரதியார் பல்கலைக்கூடத்தைத் தாரை வார்க்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. மேலும், சென்ற வாரம் இளையராஜா நேரில் வந்து பாரதியார் பல்கலைக்கூடத்தைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.

பாரதியார் பல்கலைக்கூடம் 10.5 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது. இதில் ஒரு சென்ட் நிலம் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டாலும்கூட அகில இந்திய தொழில்நுட்பக் கழகம், புதுவைப் பல்கலைக்கழகம் அங்கீகாரம் ரத்தாகும். இதனால், மாணவர்களின் படிப்பு செல்லாததாகி அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

புதுச்சேரி அரசு பாரதியார் பல்கலைக்கூடத்தையும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 10.5 ஏக்கர் நிலத்தையும் தனியாருக்குத் தாரை வார்ப்பது ஏற்புடையதல்ல” என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x