Published : 01 Oct 2018 01:45 PM
Last Updated : 01 Oct 2018 01:45 PM

டிடிவி தினகரனுடன் நட்பும் இல்லை; காதலும் இல்லை: திருநாவுக்கரசர் எரிச்சல் பதில்

 

தமிழகத்தில் பாஜக தனித்துவிடப்பட்டுள்ளதால் தேர்தலில் அதன் நிலை மோசமாக இருக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த பின் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்து, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

ஸ்டாலினைச் சந்தித்த நோக்கம் என்ன?

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதற்கு நலம் விசாரித்தேன்.

தமிழகத்தில் கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்புள்ளது. நீதிமன்றத்தில் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் குறித்த தீர்ப்பும் விரைவில் வர உள்ளது. இந்நிலையில் பொதுவான அரசியல் நிலவரம் குறித்துப் பேசினேன்.

அந்தத் தீர்ப்பு எவ்வாறு வரும் என்பதைப் பொறுத்து தமிழக சட்டப்பேரவையின் நிலை, சட்டப்பேரவை தேர்தலும் சேர்ந்து வருமா? வராதா? என்பது சம்பந்தமான ஒரு நிலை உள்ளது. இது தீர்ப்புக்குப் பின் தெரிய வரும்.

டிடிவி தினகரனுடன் உங்களுக்கு நட்பு உள்ளதா?

எவ்வளவு நாட்களுக்கு இதே கதையை கேட்டுக் கொண்டிருப்பீர்கள். இதற்குப் பல முறை முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது என்று சொல்கிறேன். அதன் பின்னரும் டிடிவியுடன் நட்பு இருக்கிறதா? காதல் இருக்கிறதா? என்கிற கேள்வியைக் கேட்டால் எப்படி. அப்படி எதுவும் இல்லை.

தேர்தல் கூட்டணியில் எத்தனை இடங்கள் என்பது குறித்துப் பேசினீர்களா?

இப்போது அது குறித்துப் பேச என்ன அவசியம். அதெல்லாம் தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு தான். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வரணும். அதன் பின்னர்தானே பேச முடியும்.

காங்கிரஸ் போட்டியிடும் இடங்களை முடிவு செய்துவிட்டீர்களா?

காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்ட இடங்கள் உள்ளன. நிற்பதற்கு வாய்ப்புள்ள இடங்கள் உள்ளன. கட்சிக்குள்ளே பேசி முடிவெடுக்க வேண்டும். அதற்கு இன்னும் நாட்கள் உள்ளன. திமுகவோடு திமுக தலைவரோடு பேச வேண்டிய காலகட்டம் உள்ளது.

முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாகக் கூறினீர்களே?

நீங்களாக முதற்கட்டம் இரண்டாம் கட்டம் என்று போட்டுக் கொண்டீர்கள். அதை நான் சொல்லவில்லை. பார்ப்போம் என்றுதான் சொன்னேன். இரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் அரசியல் பேசாமல் இருப்பார்களா?

நீங்கள் பேசியதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொன்னார்?

அதையெல்லாம் உங்களிடம் வரிசையாகச் சொல்ல முடியுமா? அதுதான் சொல்லிவிட்டேனே, பொதுவான அம்சங்கள் குறித்துப் பேசினோம் என்று.

போராட்டங்களில் உங்களோடு இணைந்து போராடும் கட்சிகளுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா?

கண்டிப்பாக இருக்கும். 8 முதல் 10 கட்சிகள் ஒன்றாக இருக்கிறோம். அனைவரும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் பலமான கூட்டணி வர வாய்ப்புள்ளது. பாஜகவில் அப்படி இல்லை. அது தனித்து விடப்பட்டுள்ளது.

அதிமுகவிலும் பலமான எதிர்ப்புக்குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதிமுகவும் தனித்து நிற்பதாக அறிவித்து விட்டார்கள். ஆகவே பாஜகவுக்கும் அதிமுகவும் கூட்டணி இல்லாமல் தனித்து விடப்பட்டுள்ளது.

அதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து செயல்படும்போது தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இறுதிக்கட்ட முடிவுக்கு வரும்.

பாஜக தனித்து நின்றால் அதன் நிலை என்னவாக இருக்கும்?

மிக மோசமான நிலையாக இருக்கும். பாஜகவுக்கு கூட்டணியே கிடையாது. இங்கு அஸ்திவாரமும் கிடையாது. கூட்டணியும் இல்லாமல், அஸ்திவாரமும் இல்லாமல் நின்றால் என்ன ஆகும். ஒரு சதவிகிதம் அல்லது இரண்டு சதவிகிதம் வாக்கு கிடைக்கும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x