Published : 12 Oct 2018 01:09 PM
Last Updated : 12 Oct 2018 01:09 PM

போலி வாக்காளர்கள் விவகாரம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ஒரு வாக்கில் தோல்வியுற்ற திமுக வேட்பாளர்கூட உண்டு என்பதை மனதில்கொண்டு திமுகவினர் வாக்குச்சாவடியில் போலி வாக்காளர்களை களையும் பணியில் ஈடுபட வேண்டும் என தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட கடிதம்:

“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே.

ஹிட்லர் மற்றும் முசோலினியின் வாரிசுகள்தான் இந்நாட்டை ஆள்கிறார்களோ என்று அனைத்துத் தரப்பு மக்களும் அச்சப்படக் கூடிய அளவிலே, ஜனநாயகத்திற்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் விரோதமான செயல்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்களின் இறுதியானதும் உறுதியானதுமான நம்பிக்கையாக இருப்பது தேர்தல் களம் மட்டும் தான்.

அதுதான் அவர்கள் கையில் உள்ள வாக்குரிமை என்கிற வலிமை மிகுந்த ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்தக்கூடிய இடமாகும். ஆனால், அந்த ஆயுதத்தையும் தந்திரமாகப் பறித்து, தேர்தல் களத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஆட்சியாளர்கள் பலமோசடிகளையும் சூழ்ச்சிகளையும் செய்து வருகிறார்கள்.

இவை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எத்தனையோ புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளின்படி அந்த மோசடிகளைக் களைவதில் உரிய வேகமும் போதிய அக்கறையும் காட்டப்படவில்லை. அதனால், மகேசன் தீர்ப்புக்கு நிகரானதும் மேலானதுமான மக்கள் தீர்ப்பையே மாற்றிவிடக் கூடிய தில்லுமுல்லுகளைஅதிகாரத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ள நினைக்கிறார்கள்.

இதனைத் தடுத்து நிறுத்திட நமக்குக்கிடைத்துள்ள வாய்ப்பு தான் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம். அடுத்தவர் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு, மோசடி செய்வதற்கு ஆளுந்தரப்பு அனைத்து வழிகளையும் மேற்கொள்ளும் நிலையில், கழகத்தினர் விழிப்புடன் இருந்து, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு ஊன்றிக் கவனிப்பது போல, இந்த முகாம்களில் செயல்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

கடந்த செப்டம்பர் 8-ம் தேதி நடைபெற்ற கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில், ஆளுங்கட்சியினர், போலி வாக்காளர்களைப் புகுத்தவும், பாரம்பரியமான கழக வாக்காளர்களை நீக்கவும் முயற்சி செய்வதாக பல இடங்களிலிருந்தும் தகவல்கள் வருகின்றன.

அவ்வாறு நடைபெறும் அத்துமீறல்களை – சட்டவிரோத செயல்களைப் பற்றி, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களைக் கொடுத்து உரிய நிவாரணம் பெற்றிட வேண்டும் எனவும், அப்படி புகார் கொடுத்த விவரங்களைக் கழகத் தேர்தல் பணிக்குழுவிற்கும், தலைமைக் கழகத்திற்கும் அவ்வப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனுப்பி வைத்திட வேண்டும்"" என வலியுறுத்தப்பட்டது.

இதனை கட்சி நிர்வாகிகள் சரியாகவும் முறையாகவும் கடைப்பிடித்திட வேண்டும் என மீண்டும் என வலியுறுத்துகிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பான (ஏன்,சட்டமன்றத் தேர்தலுக்கும் என்று கூட சொல்லலாம்) வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புக்கான கடைசி முகாம் 14-10-2018 அன்று நடைபெறுகிறது. கடந்த 7-10-2018 ஞாயிறன்று நடைபெற்ற முகாமின் போது, கொளத்தூர் தொகுதி

யில் நேரில் சென்று பல வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டேன்.

கழகத்தின் சார்பிலான முகவர்களும்,தோழமைக் கட்சிகளைச் சார்ந்த முகவர்களும் அக்கறையுடன் பணியாற்றியதுடன், என்னைக் கண்டதும் ஆர்வத்துடன் வந்து அன்பினை வெளிப்படுத்தினர். கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பைச் சுமக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியில் வெளிப்படும் அக்கறை, ஒவ்வொரு தொகுதியும் நம்முடைய தொகுதி என்கிற எண்ணத்துடன், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் அதில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெளிப்பட வேண்டும்.

கடைசி முகாம் நடைபெறும் அக்டோபர் 14-ம் நாள் அன்று கட்சியினர் மிகுந்த விழிப்போடு இருந்து அந்தப்பணியினை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து தலைமைக் கழகம் ஏற்கனவே விடுத்துள்ள அறிவிப்பில், "மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர,பகுதி, நகரிய, பேரூர், ஊராட்சி, வார்டு கழக செயலாளர், நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள்(BLA-2) ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை அலட்சியப்படுத்திடாமல் அவசியமாகச்செயல்படுத்த வேண்டிய கடமை கழகத்தினருக்குஇருக்கிறது. நாம் காட்டுகின்ற அக்கறையை தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களும் காட்டிட வேண்டும். அப்போது தான், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்கின்றபணி முழுமையாக நிறைவேறிடும். அது நிறைவேறிடக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்தி, போலி வாக்காளர்களைச் சேர்ப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

கடந்த வாரம் நடைபெற்ற முகாமின் போது, கொளத்தூர் தொகுதியில் உள்ள எவர் க்ரீன் பள்ளியின் 16 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் வந்திருக்கவேண்டும். நான் அங்கு பார்வையிடச் சென்ற போது அந்த அலுவலர்கள் வரவில்லை. அதன் காரணமாக, ஆளுங்கட்சியினர் தாங்கள் திட்டமிட்டு நிறைவேற்ற நினைக்கிற தில்லுமுல்லுகளை மேற்கொள்கிறார்கள்.

கொளத்தூரில் மட்டுமின்றி, தமிழ்நாடுமுழுவதுமிருந்தும் கழகத்தினர்-தோழமைக் கட்சியினர்-பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய தகவலின்படி, திமுகவிற்கு ஆதரவான வாக்காளர்களை நீக்குகின்ற வேலையை ஆளுங்கட்சியினர் ஒருசில அதிகாரிகளின் துணையுடன் மேற்கொள்கிறார்கள்.

அதுபோலவே முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின வாக்காளர்களும் நீக்கப்படுகின்றனர். புதிதாகக்குடி வந்தவர்களின் பெயர்களை சேர்ப்பதிலும் அலட்சியம் காட்டப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்படும் புகார்களின் மீது தேர்தல் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை, ஏனோ தயக்கம் காட்டுகிறார்கள்

.இருப்பவர்களை நீக்குகின்ற அதே நேரத்தில், இறந்து போனவர்களின் பட்டியலை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி,அவர்களை நீக்குமாறு கழகத்தினரும் மற்ற கட்சியினரும் எடுத்துச் சொன்னால் அந்த வாக்காளர்களை நீக்கிவிடாதவாறு ஆளுங்கட்சியினர் செயல்படுகிறார்கள்.

வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள தொழிலாளர்களுக்கு உரிய முகவரியில்லாத போதும் அவர்களின் பெயர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சேர்த்து, வாக்காளர் அடையாள அட்டைகளையும் பெற்றுத் தரும் வேலையை ஆளுந்தரப்பு மேற்கொள்கிறது.

இறந்தவர்கள்-இடம் பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்படுவதில் அலட்சியமும், கட்சியினர், சிறுபான்மையினர் தோழமைக் கட்சியினர் ஆகியோர் சார்ந்த வாக்காளர்கள் பெயர்களை நீக்குவதில்அதிதீவிர அக்கறையும் காட்டி ஆளுங்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, 14-ம் தேதி நடைபெறும் சிறப்புமுகாமில் கட்சியின் முகவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் தான், வாக்காளர் பட்டியல் மோசடியைத் தடுத்திட முடியும். புதிய இளம் வாக்காளர்களை சேர்ப்பது என்பதும் மிகவும் முக்கியமான பணியாகும்.

2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியுடன் 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்பதால், அத்தகைய இளைஞர்கள் உரியசான்றுகளுடன் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திட கழக முகவர்கள் துணை நிற்க வேண்டும்.

நம் உயிரினும் மேலான தலைவர் கருணாநிதி சமூகநீதித் திட்டங்களால் பயன்பெற்று வாழ்க்கையில் உயர்வடைந்துள்ள இளையசமுதாயம் அந்த நன்றியினை நெஞ்சில் தேக்கியிருப்பதை தலைவர் அவர்கள் மறைந்த போதுகாண முடிந்தது. அவர்கள் முதன் முதலாகப் பதிவு செய்யும் வாக்குகள் உதயசூரியனுக்குப் பதிவாகி, தமிழ்நாட்டில் புதிய விடியல் ஏற்படும் வகையில் கட்சியினர் செயலாற்ற வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் உள்ளகளைகளை நீக்கினாலே, வெற்றி எனும் பயிர் விரைந்து விளையும். சமுதாய சீர்திருத்தமும் தேர்தல் கள அரசியலும் கட்சியின் இரு கண்கள். நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் இவற்றை நமக்குப்பல முறை வலியுறுத்தியிருக்கிறார்.

அறுவடைக்குப் பின் வீட்டுக்கு வந்த நெல்லை அரிசியாக்கி உலையிலிட்டு சோறு படைத்தல் அரசியல் என்றால் அந்நெல் விளையும் வயலுக்கு நீர் பாய்ச்சி உரமிட்டு,அருகில் வளர் களைகளையும் அகற்றுவதே சமுதாயப் பணி என்பேன் – இது தலைவர் கருணாநிதியின் வாக்கு.

தேர்தல் அரசியல் களத்தில் உலை பொங்கி, அனைவருக்கும் உணவு பரிமாறப் பட வேண்டுமென்றால், அதற்கு முன்பாக, நெல் விளையும் வயல் போன்ற வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் எனும் களைகளை நீக்கி, புதிய வாக்காளர்கள் எனும் உரமிட்டு, பயிர் வளர்ப்பதுதான் நாம் தற்போது மேற்கொள்ள வேண்டிய சமுதாயப் பணி. அதனைச் சரிவரச் செய்தால்தான், விளைச்சல் வீண் போய்விடாமல் வெற்றியினை அறுவடை செய்திட முடியும்.

ஒரு நெல் வீணானாலும்,தேவையற்ற பதர்கள் பெருகினாலும் அதுவெற்றியினைப் பாதிக்கும். இளையான்குடி தொகுதியில்கழக வேட்பாளர் மலைக்கண்ணன் ஒரேயொரு வாக்கில்வெற்றி வாய்ப்பை இழந்தததை தலைவர் கருணாநிதி பல முறை சுட்டிக்காட்டி நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். அந்த விழிப்புணர்வுடன் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் முகாமில் கவனம் செலுத்திட வேண்டும்.

இன்று நீங்கள் காட்டும் அக்கறை, நாளை நம்மை வெற்றிக் கரை சேர்க்கும். விழிப்புடன் செயல்பட்டு,வெற்றியினை உறுதி செய்வீர்.”

இவ்வாறு ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x