Published : 02 Aug 2014 09:00 AM
Last Updated : 02 Aug 2014 09:00 AM

நடப்பாண்டில் 6 கூட்டுக் குடிநீர்த்திட்டங்கள் குறித்து ஆய்வு: பேரவையில் அறிவிப்பு

‘‘நடப்பாண்டில் கடலூர், திருப்பூர், கோவை உள்பட 6 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி ஒன்றியங்களில் உள்ள 17 குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் வழியோர குடியிருப்புகள், நாகப்பட்டினம் மாவட்டம், கொடியம்பாளையம் குடியிருப்புக்கான கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாகக் கொண்டு 27,395 மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம் நடப்பாண்டில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

பவானி ஆற்று நீராதாரம்

அதுபோல, திருப்பூர், பல்லடம் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 155 ஊரகக் குடியிருப்புகளுக்கு 96,247 மக்கள் பயன்பெறும் வகையில் பவானி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் குடிநீர்ப் பற்றாக்குறை உள்ள 8 பேரூராட்சிகள், 949 ஊரகக் குடியிருப்புகளுக்கு 2,69,600 மக்கள் பயன்பெறும் வகையில் பவானி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு 16 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் பவானி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம், தேனி மாவட்டம், கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் கண்டமனூர் மற்றும் எட்டப்பராஜபுரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 16 குடியிருப்புகளுக்கு 10,926 மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம், சிவகாசி மற்றும் திருத்தங்கள் நகராட்சிகளுக்கு 1,41,000 மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவையும் நடப்பாண்டில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நடப்பு நிதியாண்டில் ஈரோடு மாநகராட்சி, அரியலூர், ஆவடி, பட்டுக் கோட்டை, பல்லவபுரம், மறைமலை நகர் ஆகிய நகராட்சிகளில் உள்ள 17 நீர்நிலைகளில் நிலத்தடி நீரைப் பாதுகாக்க, ரூ.12.33 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆழியார் திட்டத்துடன்...

கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் குடிநீர்ப் பகிர்மான குழாய்கள் அமைத்தல் மற்றும் பில்லூர் திட்டம்-2 மற்றும் ஆழியார் திட்டங்களை இணைத்து குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் ரூ.42.55 கோடியில் மேற்கொள்ளப்படும்.

மேட்டுப்பாளையம், கூடலூர், நெல்லிக்குப்பம், வாலாஜாப்பேட்டை, ராணிப்பேட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 நகராட்சிகள் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களுக்காக மொத்தம் 186 குடியிருப்புகள் ரூ.14.82 கோடியில் கட்டப்படும். ரூ.5.10 கோடியில் மணப்பாறை நகராட்சியில் 1.96 ஏக்கரில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

ரூ.30.55 கோடியில் திருப்பூர் மாநகராட் சியில் 3 இடங்களிலும், ரூ.87.43 கோடியில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் 6 இடங்களிலும் தற்போது பயன்பாட்டில் உள்ள இறைச்சிக் கூடங்கள் நவீனமய மாக்கி புதுப்பிக்கப்படும். சுடுகாடுகள், இடுகாடுகளின் தோற்றத்தைப் பொலிவு படுத்தவும், அவற்றில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் 11 மாநகராட்சிகளில் உள்ள 27 மயானங்களில் ரூ.7.50 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பூந்தமல்லி, ராணிப்பேட்டை, திருமங் கலம், கூடலூர் (தேனி), தென்காசி ஆகிய நகராட்சிகளில் ரூ.3.40 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்படும். வீரவநல்லூர், காவேரிப்பட்டணம், இலுப்பூர், அன்னவாசல், படவீடு, தொரப் பாடி, செ.புதூர் ஆகிய 7 பேரூராட்சிகளில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மணமக்கள் அறை, சமையல் கூடம், குடிநீர், கழிப்பிட வசதி, மின்விளக்கு வசதியுடன் கூடிய 8 புதிய சமுதாயக் கூடங்கள் ரூ.3.64 கோடியில் கட்டப்படும். திருக்கோவிலூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், சர்க்கார் சாமக்குளம், நத்தம் ஆகிய 5 பேரூராட்சிகளில் ரூ.8.65 கோடியில் அனைத்து வசதிகளுடன் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

சோளிங்கர், செங்கம், வத்தலக் குண்டு, உத்தமப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய 5 பேரூராட்சிகளில் திடக்கழிவில் (உணவுக் கழிவு) இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு தெரு விளக்குகள் எரிய வைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x