Published : 20 Oct 2018 10:52 AM
Last Updated : 20 Oct 2018 10:52 AM

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராசியால் தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளது: அமைச்சர் கருப்பணன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராசியாலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவினாலும் தமிழகத்தில் நல்ல மழை பெய்திருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பணன், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தமிழகத்தை வழிநடத்திவரும் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் நல்லாதரவோடு நல்ல மழை பெய்திருக்கிறது. மூன்றாண்டு காலமாக இல்லாத மழை, இப்போது பெய்து அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. நீர்நிலைகள் நிரம்பி அனைத்து வாய்க்கால்களும் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளன.

அதனால் மக்கள் நல்ல முறையில் விவசாயப் பணிகளைச் செய்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ராசியால் நல்ல மழை பெய்து குளம், குட்டைகள் நிரம்பியுள்ளன” எனத் தெரிவித்தார்.

மேலும், மக்களுக்குப் பயன்படும் பிளாஸ்டிக் தவிர்த்து மற்ற பிளாஸ்டிக் பயன்பாடு வரும் ஜனவரி 1, 2019 முதல் தடை செய்யப்படும் எனவும் அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.

பொதுமக்கள் வீடுகளில் சோப்பு போட்டு குளித்ததால் ஏற்பட்ட நுரை கலந்ததால்தான் நொய்யலாற்றில் நுரை பெருக்கெடுத்து ஓடியது என அமைச்சர் கருப்பணன் கூறிய கருத்து முன்பே விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x