Published : 13 Oct 2018 12:07 PM
Last Updated : 13 Oct 2018 12:07 PM

கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்தவர் பரிதி இளம்வழுதி: ஸ்டாலின் புகழாஞ்சலி

கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்தவர் பரிதி இளம்வழுதி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதி. திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்கிய அவர் 1991-ம் ஆண்டு அதிமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது, திமுக சார்பில் ஒரே எம்எல்ஏவாக இருந்தார். அப்போது சட்டப்பேரவையில் ஒரே திமுக எம்எல்ஏவாக இருந்து பணியாற்றினார்.

2006 - 2011-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். திமுகவில் இருந்து 2013-ம் ஆண்டு விலகிய அவர் அதிமுகவில் இணைந்தார். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கட்சியை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த பிறகு, ஓபிஎஸ் அணியில் இணைந்தார். பின்னர் தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்தநிலையில், அடையாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். பரிதி இளம்வழுதி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “பரிதி இளம்வழுதி மறைவு ஒரு மிகப்பெரிய துயரத்தை எனக்கு மட்டுமல்ல, திமுகவுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

சிறுவயதிலேயே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு என்னோடு நெருங்கிப் பழகி அனைத்துப் போராட்டங்களிலும் ஈடுபட்டு என்னோடு ஒவ்வொரு முறையும் சிறைக்கு வந்தவர் நண்பர் பரிதி இளம்வழுதி. சட்டப்பேரவையிலும் அவரை தேர்ந்தெடுத்த தொகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றி நற்பெயரை எடுத்தவர்.

அதுமட்டுமல்ல, தன்னந்தனியாக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய வல்லமை படைத்தவர். கருணாநிதியால் இந்திரஜித் என்றும் வீர அபிமன்யு என்றும் பாராட்டைப் பெற்றவர் பரிதி இளம்வழுதி.

சில நேரங்களில் அரசியல் சூழ்நிலையின் காரணமாக அல்லது குடும்பச் சூழ்நிலை காரணமாக தடுமாறிய நேரத்தில் கூட கருணாநிதி அவர் மீது வைத்திருந்த அன்பை பாசத்தை நாங்கள் என்றைக்கும் மறந்துவிடமாட்டோம். பரிதி இளம்வழுதியை அவர் ஒரு செல்லப்பிள்ளையாகவே வைத்திருந்தார்.

அவர் மறைந்து விட்டார் என்கிற செய்தி அறிந்து வேதனைப்படுகிறேன், அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். அவரை இழந்து வாடிக்கொண்டிருக்கக்கூடிய அவருடைய குடும்பத்தாருக்கு, சகோதரர்களுக்கு, பிள்ளைகளுக்கு திமுக சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x