Published : 25 Oct 2018 12:32 PM
Last Updated : 25 Oct 2018 12:32 PM

20 தொகுதிகளிலும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும்: ஸ்டாலின்

20 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் - மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

கூட்டம் முடிந்தபின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,  “ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நியமிக்கப்பட்டிருக்கும் பொறுப்பாளர்கள், அந்தந்த மாவட்டக் கழக செயலாளர்களுடன் இணைந்து தேர்தல் பணியை எப்படி முடுக்கிவிட வேண்டும் என்பதை விளக்கியுள்ளோம்” என தெரிவித்தார்.

இதையடுத்து 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்டாலின், “ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். ஜனநாயகத்தின் நெறிமுறைகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை. இந்தத் தீர்ப்பு அதிமுகவின் இரு அணிகளுக்கு சாதகமா? பாதகமா? என்பது அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினை. அதைப்பற்றி திமுக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும், ஏற்கெனவே திருவரங்கம், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ளன, அத்தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. மேலும், இந்தத் தீர்ப்பால் 18 தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. மொத்தமாக, 20 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். அந்த தேர்தலைப் பொறுத்தவரையில் திமுகவுக்கு பெருவாரியான ஆதரவளிக்க தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. எந்த நேரத்திலும் மக்களைச் சந்திக்க திமுக தயாராக இருக்கிறது”என ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x