Published : 09 Oct 2018 11:22 AM
Last Updated : 09 Oct 2018 11:22 AM

நக்கீரன் கோபால் கைது திட்டமிட்ட சதி; மார்க்சிஸ்ட் கண்டனம்

நக்கீரன் கோபாலைக் கைது செய்திருப்பது பல உண்மைகளை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதி என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

அருப்புக்கோட்டை, கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் வற்புறுத்தல் செய்தது தொடர்பாக ஆடியோ வெளிவருவதற்கு முன்னரே இத்தகைய சம்பவத்தை வெளியுலகத்திற்கு தெரிவித்தது நக்கீரன் பத்திரிகையாகும். அதன் பிறகு அது தொடர்பான வழக்கு விசாரணை சம்பந்தமாக பல்வேறு கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு முறையான விசாரணை நடைபெற வேண்டுமென நக்கீரன் பத்திரிகை எழுதி வந்தது. இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகத்திலிருந்து புகார் வந்த அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்னரே அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான புகார்கள், குற்றச்சாட்டுகள் எழும் போது அதை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதும், அதன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதும் பத்திரிகை சுதந்திரத்தின் உயிர் நாடியாகும். அதைப் பறிக்கும் வகையில் இன்று நக்கீரன் கோபால் கைது செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இந்தப் பிரச்சினையில் ஆளுநர் பெயரும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பாரபட்சமற்ற சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே வலியுறுத்தியிருக்கிறது. உயர் பொறுப்புகளில் இருப்போர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் வரும்போது நியாயமான விசாரணை மூலம் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் குற்றச்சாட்டுகளை முன்வைப்போர் மீது இத்தகைய தாக்குதல்கள் தொடுப்பது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும். எனவே, ஆளுநர் தமிழகத்திலிருந்து திரும்ப அழைக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

மாணவிகளைப் பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பிரச்சினையில் உயர் பொறுப்புகளில் இருக்கிற அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும் வற்புறுத்திய நிலையில் இதற்கு நேர்மாறாக, சிபிசிஐடி போலீஸார் நிர்மலா தேவி மற்றும் அவருக்கு கீழே பணியாற்றிய இரண்டு துணை பேராசிரியர்களோடு இந்த வழக்கை முடித்துவிட்டிருப்பது எண்ணற்ற கேள்விகளுக்கு இடமளித்துள்ளது. இந்நிலையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது பல உண்மைகளை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதியாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் உரிமைகளுக்காக போராடுகிற பல அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அலைக்கழிக்கப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது அன்றாட நடவடிக்கைகளாக மாறியுள்ளது. மேலும் பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய தாக்குதல்களின் மூலம் தமிழக மக்களின் உரிமை போராட்டங்களை முடக்கி விட நினைப்பது பகல் கனவாகவே முடியும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் தமிழக அரசின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து அனைத்து கட்சிகளும், பொதுமக்களும் வலுவான கண்டனக் குரலெழுப்ப வேண்டும்” என பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x