Published : 08 Oct 2018 12:13 PM
Last Updated : 08 Oct 2018 12:13 PM

ஓட்டை உடைசல் பிரேக் இல்லாத பேருந்து: குறைகூறி காணொலி வெளியிட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்

அரசுப் பேருந்து சரியாக பராமரிக்காதது பற்றி காணொலி காட்சியையை வாட்ஸ் அப்பில் பதிவிட்டு பேசிய பேருந்து ஓட்டுநரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

பொதுவாக அரசு பேருந்துகள் பராமரிப்பில் அலட்சியம் காட்டுவது குறித்து அடிக்கடி புகார்கள் எழுவது வாடிக்கை. சில மாவட்டங்களில் பேருந்து ஓடும்போது மேற்கூரையே பெயர்ந்து பறந்துச் சென்ற சம்பவங்களும், பேருந்துக்குள் மழைக்காலத்தில் கடுமையாக ஒழுகுவதும் பயணிகள் நனைந்துக்கொண்டு செல்வதும் வாடிக்கையான விஷயமாக பயணிகளால் வாட்ஸ் அப்பில் பதிவிடுவதை காணலாம்.

இதுதவிர போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தில் சம்பள உயர்வு, போனஸ் போன்ற அவர்களது பிரச்சினை இல்லாமல் பேருந்து பராமரிப்பு போன்ற விஷயங்களும் இருக்கும். இதை யாரும் கண்டுக்கொள்ளாமல் சாதாரணமாக கடந்துச்செல்வர். ஆனால் அந்த கோரிக்கையில் பல நியாயங்கள் அடங்கியுள்ளதும், பொதுமக்களின் நலன் அடங்கியுள்ளதும் எத்தனை பேர் அறிவார்கள் என்பது தெரியாது.

பொதுவாக பராமரிக்கப்படாத பேருந்துகள் விபத்தில் சிக்க அதிக வாய்ப்புண்டு. அதை இயக்கும் ஓட்டுநர்கள் படும் துயரம் வெளியில் சொல்ல முடியாத ஒன்று. பராமரிப்பு இல்லாத பேருந்து இயக்கப்படும்போது அது பொதுமக்களின் உயிருக்கே எமனாக மாறும் வாய்ப்பு அதிகம்.

இதனால் உயிரிழப்பால் பணியாளர் பாதிக்கப்படுவது போன்ற பல காரணங்கள் உண்டு. ஆகவே போக்குவரத்து தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கைக்கு அதிகாரிகள் காது கொடுக்க வேண்டும், தரமில்லாத ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கி போடக்கூடாது என்ற கோரிக்கை எப்போதும் உண்டு.

இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகள் காசு கொடுத்து பயணிக்கும் பயணிகளின் நுகர்வோர் உரிமையையும் காக்கும் வகையில் தரமாக இயக்கப்பட வேண்டும். இது போன்று தரமில்லாத பராமரிக்கப்படாத பேருந்து குறித்து துணிச்சலாக பதிவிட்ட ஓட்டுநர் ஒருவரின் காணொலி வலைதளங்களில் வேகமாக பரவியது.

பழனியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (34). திருச்சி பழனி சரகத்தில் அரசு போக்குவரத்து பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார். அவர் வெளியிட்டுள்ள காணொலியில், கடுமையான மழையில் நின்றபடி பேசும் அவர் தன்னை பழனி கிளை ஓட்டுநர் விஜயகுமார் என்று கூறுகிறார். திருச்சி பாதையில் ஓடுவதாக கூறும் அவர் காலை 7 மணிக்கு பேருந்தை திருச்சியிலிருந்து பழனி நோக்கி ஓட்டி வந்தேன். மழையில் நனையாமல் இருக்க பக்கவாட்டில் ஷட்டர் இல்லாததை சுட்டிக்காட்டுகிறார்.

பக்கவாட்டு ஷட்டர் இல்லாததால் தெப்பலாக நனைந்துள்ள அவர் 4 மணி நேரமாக பேருந்தை இயக்கி வருகிறேன். இதேபோன்று நனைந்தப்படி ஓட்டி வருகிறேன். எனக்கு காய்ச்சல் வந்து படுத்தால் யார் பொறுப்பு. இதுபோன்றுதான் பராமரிப்பில்லாத பேருந்துகளை தருகிறார்கள், பிரேக் பிடிப்பதில்லை, ஷட்டர் இல்லை, பேருந்து முழுவதும் ஒழுகுகிறது இதுபோன்ற பேருந்தை கொடுத்து ஓட்டச்சொல்கிறார்கள் என்று ஆதங்கப்படுகிறார்.

ஆனாலும் நிறுத்தாமல் ஓட்டிவந்து பயணிகளை இறக்கி விட்டதாக கூறும் அவர் பேருந்தின் அவல நிலையை காணொலியாக வெளியிட அது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. இதையடுத்து ஆத்திரமடைந்த அதிகாரிகள் அரசுப் பேருந்து ஓட்டுனர் விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

விஜயகுமார் நியாயமான விஷயத்தைத்தானே கூறினார் அவரை எப்படி சஸ்பெண்ட் செய்யலாம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போர்க்கொடி துக்கியுள்ளன. உண்மையை சொன்ன ஓட்டுனரை சஸ்பெண்ட் செய்ததற்கு போக்குவரத்து ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x