Published : 10 Oct 2018 05:27 PM
Last Updated : 10 Oct 2018 05:27 PM

சிசி டிவி அதிகரிப்பால் செயின், செல்போன் பறிப்பு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன: காவல் ஆணையர்

சென்னை முழுவதும் சிசி டிவி வருவதற்கு முன் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர். தற்போது சிசி டிவி அதிகரிப்பால் சென்னையில் செயின் பறிப்பு , மொபைல் பறிப்பு ஆகியவை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.

சிசிடிவி சென்னை என்பது காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் கனவு. இதற்காக மூன்றாவது கண் என்ற தலைப்பில் தொடர்ந்து மாநகர் முழுவதும் இந்தக் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் ஏதுவாக சென்னை மாநகர காவல் ஆணையர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

யானைக்கவுனி காவல் நிலையத்துக்கு அடுத்து சென்னையில் செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அகரம், மூலக்கடை, பெரம்பூர் பகுதிகளில் 200க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அனைத்து மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் பொருத்தப்படும் கேமராக்கள் மூலமாக பொதுமக்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

செம்பியம் ,பெரம்பூர் உள்ளிட்ட 40 முக்கிய சந்திப்புகளில் 15 அடி உயரத்தில் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக செயின் மற்றும் செல்போன் பறிப்பு நடைபெறும் இடங்கள் கண்டறிந்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என போலீஸார்  தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிசி டிவிகேமராக்களின் பதிவுகள் 2 மாதம் காட்சிகளை சேமித்து வைக்கும் வசதிகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டு அறையில் தெரியும் சிசி டிவி காட்சிகளை ஆய்வாளர் செல்போன் மூலமாகவும் பார்த்துக் கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிசி டிவி கேமராக்கள் மூலமாக 50 மீட்டர் அளவில் கூட காட்சிகளைப் பெரிதுபடுத்தி பார்க்கலாம்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் ஆணையர தினகரன், வடக்கு மண்டலத்தில் மட்டும் 20 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சென்னையில் இரண்டாவது முழு சிசிடிவி கண்காணிப்புக்குட்பட்ட காவல் நிலையம் இது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கேமராக்கள் பராமரிப்பதற்கு தனியாக டெண்டர்கள் ஒப்பந்தம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

மேலும், சென்னை மாநகர காவல் நிலையங்களில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசுகையில், ''சென்னையில் இரண்டாவது காவல் நிலையமாக செம்பியம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதி முழுமையான சிசி டிவி கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் பொதுமக்களுக்கு நன்றி.

சிசி டிவி வருவதற்கு முன் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர். சென்னையில் செயின் பறிப்பு , மொபைல் பறிப்பு ஆகியவை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் சிசிடிவி கேமராக்கள்தான். பாதுகாப்பிற்கான மூலதனம் சிசிடிவி கேமராக்கள். எனவே ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும''  என வேண்டுகோள் விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x