Published : 12 Oct 2018 07:46 PM
Last Updated : 12 Oct 2018 07:46 PM

குரங்கிணி காட்டுத் தீ சம்பவம்: மலையேற்ற புதிய விதிமுறைகளை அறிவித்தது தமிழக அரசு

குரங்கிணி காட்டுத்தீ விபத்தில் பலர் உயிரிழந்ததை அடுத்து விதிமுறைகள் உருவாக்கப்பட்டு பரிந்துரைகள் அளிக்கப்பட்டது. அதை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

“தேனி மாவட்டம், கொட்டக்குடி காப்புக்காடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி அன்று ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிட்டது. அது தொடர்பாக, தமிழக முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதற்கான விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இனி வரும் காலங்களில் விபத்துக்களை தவிர்க்க பல்வேறு பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில், மலையேற்றம் மேற்கொள்பவர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், அதற்கான அனுமதி வழங்கியது குறித்தும் விதிகளை உருவாக்குதல் என்பது அப்பரிந்துரைகளில் ஒன்றாகும்.

மலையேற்றம் மேற்கொள்பவர்களது பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், வன வளங்களைப் பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், மலையேற்றத்திற்கான விதிகளை நெறிப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். அவ்வகையில், தமிழ்நாட்டின் அனைத்து காப்புக் காடுகளுக்கும் மற்றும் வன உயிரினப் பகுதிகளுக்கும் (சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள்) பொருந்தும் வகையில், மலையேற்றத்திற்கான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மலையேற்றம் மேற்கொள்ள விரும்பும் குழுவினர் அல்லது நபர்கள் அந்தந்த மாவட்ட வன அலுவலர் / வன உயிரினக் காப்பாளர் / துணை இயக்குநரின் முன்அனுமதியினை உரிய முறையில் பெற்றிடல் வேண்டும். மலையேற்றம் மேற்கொள்வதற்கான பாதைகள், எளிதான பாதை, மிதமான பாதை மற்றும் கடினமான பாதை என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

எளிதான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.200/- வீதமும், மிதமான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ350/- வீதமும், கடினமான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.500/- வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளைப் பொறுத்தமட்டில், எளிதான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.1500/- வீதமும், மிதமான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.3000/- வீதமும், கடினமான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.5000/- வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள விதிகளின்படி, எளிதான பாதை, மற்றும் மிதமான பாதைகளில் மலையேற்றம் மேற்கொள்ளும் குழுவினர் தங்களுடன், ஒரு வழிகாட்டியினையும், கடினப் பாதையில் மலையேற்றம் மேற்கொள்ளும் போது ஒரு வழிகாட்டி மற்றும் வன ஊழியர் ஒருவரையும் அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், வனத்துறையில் பதிவு செய்து கொள்ளாத எந்த ஒரு நிறுவனம் / சங்கம் / அமைப்பும் மலையேற்ற பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்ய இயலாது என்பதும் விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்கு தடை செய்யப்பட்ட காலம், வழித்தடப் பயன்பாடு, மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டிய நேரம் ஆகியவைகளையும் உள்ளடக்கி இவ்விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வோர், இவ்விதிகளை கடைபிடித்து வனத்துறைக்கும், அரசுக்கும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x