Published : 28 Oct 2018 08:50 AM
Last Updated : 28 Oct 2018 08:50 AM

குமரியில் கட்டுப்பாடு இன்றி கொள்ளை போகும் கனிமவளங்கள்: ஆவணப்படம் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பத்மநாபபுரம் திமுக எம்எல்ஏ

கன்னியாகுமரி மாவட்டத்தில் திரும்பிய திசையெல்லாம் கம்பீரமாக நிற்கும் மலைகளில் கனிமவளங்கள் கட்டுப்பாடு இன்றி கபளீகரம் செய்யப்படுகின்றன. இதனை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் மனோதங்கராஜ் எம்எல்ஏ முயற்சியால் ஆவணப்படம் (வீடீயோ) ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. பத்து நிமிடம் ஓடும் இந்த ஆவணப்படம் குமரியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் விதைக்கிறது.

பாலை நீங்கலாக நான்கு வகை நிலங்களை கொண்ட மாவட்டம் கன்னியாகுமரி. இம்மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்த காலக்கட்டத்தில் இங்கு இருந்த நீராதாரங்கள் பலவும் இப்போது இல்லை.நாகர்கோவில் அண்ணா, கிறிஸ்டோபர்பேருந்து நிலையங்கள், அண்ணாவிளையாட்டு அரங்கம், வணிகப்பகுதியான செட்டிக்குளம், நாகராஜா கோவில்திடல் எல்லாம் முன்பு நீராதாரங்களாக இருந்தவையே! இதெல்லாம் நகரப் பகுதியில் மட்டும் அழிந்துபோன நீராதாரங்கள். மாவட்ட அளவில் வரிசைப்படுத்தினால் பெரும் பட்டியலே வரும்.

மலைவளம் சூறை

நீராதாரங்களுக்கு இணையாக குமரிக்கு பெருமை சேர்ப்பது இங்குள்ளமலை வளங்கள். மேற்குத் தொடர்ச்சி மலையுடன், பல பகுதிகளிலும் குட்டி,குட்டி மலைகளும் இருந்து மாவட்டத்தின் இயற்கை சூழலுக்கு ரம்மியம் சேர்க்கின்றன. கடந்த 2012-ம் ஆண்டு உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி புதிதாக கல் குவாரிகளுக்கு அனுமதி பெற வேண்டுமானால், மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இந்த நீதிமன்ற வழிகாட்டுதலை சுட்டிக்காட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி பெற்று இயங்கி வந்த 28 குவாரிகளுக்கு அப்போதைய ஆட்சியர் நாகராஜன் தடை விதித்தார். பல்வேறு விதிமீறல்களை சுட்டிக்காட்டி இந்த குவாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் இந்த அபராதத் தொகை இன்று வரை முழுமையாக வசூலிக்கப்படவில்லை.

மீண்டும் திறந்த குவாரிகள்

ஆனால் அடுத்தடுத்து ஆட்சியர்கள் மாற்றத்துக்கு பின்பு மலைகளில் குவாரிகளுக்கு மீண்டும்

அனுமதியளிக்கப்பட்டது. அப்போது முதலே குமரியின் இயற்கை வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு சாலைமார்க்கமாக கேரளம் நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. இதனை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருபவரும், இயற்கையைஅழிக்கக் கூடாது என போராடி வருபவருமான பத்மநாபபுரம் எம்எல்ஏமனோதங்கராஜ் தன் தொகுதிக்குட்பட்ட இளைஞர்களின் முயற்சியால் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

அதில் இயற்கை வளங்கள் தொடர்ந்து இதேபோல் கபளீகரம் செய்யப்பட்டால் ‘குமரி இன்னொரு சோமாலியா ஆகும்’ என வார்த்தைகளில் அபாயத்தை உடைக்கின்றனர். மேலும் கல்குவாரிகளையும், அவை உண்டாக்கிய சேதங்களையும் ஹெலிகேம் மூலம் படப்பதிவு செய்து, வான்வரைபடம் போல் காட்டி, பிரச்சினையின் வீரியத்தை கண்முன்பு கொண்டு வந்து நிறுத்துகிறது அந்த ஆவணப்படம்.

குமரியில் இயங்கும் 49 குவாரிகள்

கல்குவாரிகள் குமரியின் இயற்கையை சிதைப்பதை சுட்டிக்காட்டி வரும் 29-ம் தேதி சித்திரங்கோட்டில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். அதேநாளில் இந்த ஆவணப்படத்தை வெளியிடவும் தயாராகி வருகின்றனர். திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளரும், பத்மநாபபுரம் எம்எல்ஏவுமான மனோதங்கராஜ் இதுகுறித்து இந்து தமிழிடம் கூறுகையில், “கன்னியாகுமரிமாவட்டத்தில் இப்போது 49 குவாரிகள் இயங்கி வருகின்றன. குமரி மாவட்டம் அடிப்படையிலேயே சூழியல் உணர்ச்சிமிகுபகுதி, இங்குள்ள 20 இடங்கள் அதன்கீழ் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. குமரி மாவட்டம் வன சரணாலயமாகவும், மேற்குத் தொடர்ச்சிமலையின் குமரி மாவட்ட பகுதி பல்லுயிர்பெருக்கத்துக்கு ஏற்ற பகுதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரியில் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்துள்ள பகுதிகள் வெறுமனே பாறை அல்ல. அதில் மண்ணும், மரமும் உண்டு. அவை பறவைகளும், விலங்குகளும் குடியிருக்கும் இடம். அதிலும் பல குவாரிகள் அமைந்துள்ள இடங்கள் தனியார் காடுகள் என வரையறை செய்யப்பட்ட பகுதியின் கீழ் வருகின்றன. இதற்கும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இப்படி குவாரிகள் அனுமதி நிலையிலேயே ஏராளமான விதிமீறல்கள் நடக்கின்றன. அதன் பின்னர் குவாரிகள் செய்யும் முறைகேடுகள் அதிர்ச்சியூட்டுபவை. 20 அடி உயரத்துக்கு மட்டுமே மலையின் வெளிப்பகுதியை குவாரிக்காக உடைக்க முடியும். மற்றவற்றை பூமிக்குள் புதைந்து இருக்கும் பகுதிகளைத் தோண்டித் தான் பாறைகளை உடைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நிலத்தின் மேற்பரப்பிலேயே பலநூறு அடிக்கு உடைக்கின்றனர்.

கேரளத்துக்கு கடத்தல்

கேரளத்துக்கு மணலை கொண்டுசெல்ல தடை இருக்கிறது. ஆனால் இங்கிருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான டன் கனிம மணல் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. குமரியில் இருந்து கேரளத்துக்கு செல்லும் வழியில் 36 சோதனைச் சாவடிகள் இருக்கின்றன. இங்கெல்லாம் பணி செய்வதற்கு போட்டா போட்டி நடத்தும் அளவுக்கு முறைகேடுகள் நடக்கின்றன. கருங்கல் மலை, ஆனைபாறை பொற்றை எனகுமரியில் பலகுன்றுகள் உண்டு. இவையெல்லாம் இயற்கை பேரிடர்களின் போது பாதுகாப்பு அரணாக இருந்தன. அவைகளையும் குவாரிக்காக விட்டுவைக்கவில்லை.

வாழ்வச்சகோஷ்டம் கிராமத்தில் முருங்கவிளை பகுதியில், அப்பகுதியின் பாதுகாப்பை பற்றியெல்லாம் கவலைப்படாமல் பன்னாட்டு நிறுவனம்ஒன்று கல்லும், மண்ணும் எடுக்கிறது. கேரளத்தில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைப்பணி செய்யும் இந்தநிறுவனம் அதற்காக இங்கிருந்து பலலட்சம் டன் கனிமவளங்களை கொண்டு செல்கிறது. கனிமவளத் துறையில் 50 டன்னுக்கு கடவுச்சீட்டு வாங்கிவிட்டு 5 ஆயிரம் டன்னை கொண்டு சென்று விடுகிறார்கள். தமிழக, கேரள எல்லையோரப் பகுதியான பனிச்சமூடு பகுதியில் உள்ள ஒரு கும்பல் செக்போஸ்ட்களை வளைத்துக் கொடுக்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மலைகள் வெறும் பாறைகள்தான்.  அங்கு ஓணான் மட்டும் தான் உண்டு. ஆனால் குமரி மாவட்ட மலைகள் அப்படிப்பட்டவையல்ல. முருங்கவிளை பகுதியில் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையும், சமூக தாக்க அறிக்கையும் கொடுக்காத நிலையிலேயே மலையை சிதைத்துள்ளனர்.

இதேபோல் கருங்கல் மலையைஉடைத்தனர். மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடை வாங்கினேன். அப்படி இருந்தும் அதே மலையில் புதிதாக ஒரு குவாரிக்கு முந்தைய மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கிவிட்டு சென்று விட்டார். இப்படிஇங்குள்ள ஒவ்வொரு குவாரியின் விதிமீறல்கள் குறித்தும் பட்டியல் தயாரித்து தமிழக அரசின் முதன்மைசெயலர் தொடங்கி, குமரி ஆட்சியர்வரை அனைவருக்கும் கொடுத்துள்ளேன். குமரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளை யுனெஸ்கோவே பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.

வெடியால் வீடுகள் சேதம்முன்பெல்லாம் மனித உழைப்பை நம்பியே குவாரிகள் நடந்து வந்தன.

அப்போது சிலருக்கு வேலைவாய்ப்பாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாகவும் இருந்தன. இன்றுஜெர்மன் தொழில்நுட்பத்தில் குவாரிகள் நவீனமயமாகி விட்டன. இறக்குமதிசெய்யப்பட்ட மிஷின்களை கொண்டுவந்து போர் வைத்து ஓட்டை போட்டு,எலக்ட்ரானிக் வெடி வைத்து தகர்க்கின்றனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு சேதம் தொடங்கி பலப்பல பிரச்சினைகள்.

இதையெல்லாம் பொதுவெளியில் உணர்த்தி, போராட அழைக்கவே இந்த ஆவணப்படம்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x