Published : 12 Oct 2018 11:18 AM
Last Updated : 12 Oct 2018 11:18 AM

நீங்கள் எங்களுடன் தொடர்ந்து வாழ்வீர்கள்: சங்கர் மறைவால் வாடும் மாணவர்கள் உருக்கம்

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் மறைவின் அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவரது மாணவர்கள் தங்கள் கருத்துகளை முகநூலில் பதிவிட்டு வருகின்றனர். அது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சங்கர் ஐஏஸ் அகாடமியின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில், ''சக்தி வாய்ந்த நமக்கெல்லாம் தூண் போன்று விளங்கிய சங்கர் சாரின் சோகமான முடிவுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். அவர் ஒரு ஆசிரியருக்கும் அதிகமாக எங்களை வழிநடத்தினார். ஐ.ஏ.எஸ் கனவைக் கொண்ட பலருக்கு அவர் ஒரு உத்வேகம் அளித்தார். அவர் நம் அனைவரையும் வழிநடத்துவார். அவர் இல்லாத நாட்களைப் பற்றி சிந்திப்பது மிகவும் கடினமாக உள்ளது. நீங்கள் எங்களுடன் தொடர்ந்து வாழ்வீர்கள் சார்'' என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரவி அபிராம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''அன்புக்குரிய சங்கர் சார். நீங்கள் இனி இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நீங்கள்தான் என் கெரியரை செதுக்கினீர்கள். 2011 ஆம் ஆண்டில் என் சிவில் சர்வீசஸ் தயாரிப்பின் ஆரம்ப கட்டங்களில் என்னை வழிநடத்தினீர்கள். ஆரம்பத்தில் தேர்வுகளில் நான் வெற்றிபெறாத போது வெற்றிபெறும் வரை எந்தக் கட்டணமும் செலுத்தக்கூடாது என்று சொன்னீர்கள். (மற்ற அகாடமிகளில் இப்படி யாரும் நடந்துகொள்வதில்லை). 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நான் இருந்த நாட்கள் என் வாழ்க்கையில் சிறந்த நாட்கள். கடைசியாக நாம் பேசினோம். கலைஞரின் மறைவின்போது அவர் மீதான அன்பைப் பகிர்ந்து கொண்டார். சில வருடங்களுக்கு முன்னால், அவரை சார் என அழைத்த போது அன்புடன் அண்ணா என்று அழைக்கச் சொன்னார். சங்கர் சார், நீங்கள் எங்கள் இதயத்தில் இருக்கிறீர்கள். சென்னையில் இருந்து யுபிஎஸ்சி தயாரிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு அடி! (ஃப்ரண்ட்ஸ்ஸ்ஸ் - மாணவர்களிடம் உரையாற்ற அவர் பயன்படுத்தும் வார்த்தை, முடியல...)

டாக்டர் பார்த்திபன் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழகத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்று நாட்டின் உயர் பதவிகளுக்கு தன் சங்கர் ஐஏஸ் அகாடமி மூலம் கடந்த 14 வருடங்களாக ஆயிரக்கணக்கான அதிகாரிகளை உருவாக்கிய மதிப்பிற்குரிய சங்கரின் இறப்புச் செய்தி மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

கல்லூரிப் படிப்பு முடித்து 2013-ம் ஆண்டு நான் சங்கர் அகாடமியில் சேர்த்த நாள் தொட்டே வியக்கும் மனிதர். உங்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் டெல்லிக்குச் சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தன் நிறுவனத்தின் மூலம் தரமான பயிற்சியை தந்த உங்கள் பங்களிப்புக்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

1000க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், 900க்கும் மேற்பட்ட ஐபிஏஸ்- ஐபிஎஸ் அதிகாரிகளை தன் அகாடமி மூலம் உருவாக்கியவர் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x