Published : 12 Oct 2018 03:20 PM
Last Updated : 12 Oct 2018 03:20 PM

கண்ணகி காலத்திலிருந்து #me-too உள்ளது: கமல்

ஆளுநர் பன்வாரிலால் தன்மீது புகார் வரும் பட்சத்தில் பதவி விலகி சந்தேகத்தை நீக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

சேலம் செல்ல விமான நிலையம் வந்த மக்கள் நீதிமய்யம் நிறுவனர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:

மழை மற்றும் பேரிடரைக்காரணம் காட்டி இடைத்தேர்தல் தள்ளி வைப்பது பற்றி?

நாடகம் போடுபவர்கள் அடாது மழையிலும் விடாது நிகழ்ச்சி நடத்தும் தைரியம் சிறிய நாடகம் நடத்துபவர்களுக்குக்கூட உண்டு. ஒரு தேர்தலை அப்படி தள்ளிப்போடுவதற்கு முகாந்திரம் உள்ளதா? என்பதே கேள்வி.

ஆட்சிக்கு வரமாட்டோம் என்கிற நம்பிக்கையில்தான் நிறைவேற்றமுடியாத திட்டங்களை அறிவித்தோம் என்று நிதின் கட்கரி ஒப்புக்கொண்டுள்ளாரே?

உண்மையைச் சொல்லும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்களே என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸில் பெரிய அளவில் சிலைகள் காணாமல் போனது குறித்த நடவடிக்கைகள் வருகிறதே?

இது ரொம்ப நாளா நடந்துக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். இதை நான் முன்பே கூறி இதை மீட்டெடுப்பதற்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று கேட்டபோது, நீங்கள் ஒன்றும் உதவி செய்யவேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம். உங்கள் அறிவு வேறு, எங்க அறிவு வேறு என்றார்கள்.

இதில் கோவில் சம்பந்தப்பட்டவர்கள் உடந்தையாக இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே இதை பக்தி என்று பார்க்கிறார்களா?  பொதுமக்கள் என் நாடு, என் சொத்து என, தமிழகத்தின் சொத்தாக நினைத்து பார்க்கவேண்டும்.

மீ டூ மூமெண்ட் தமிழகத்திலும் வந்துள்ளதே? சின்மயி வைரமுத்து மீது குற்றம்சாட்டியுள்ளாரே? திரையுலகில் உள்ள முக்கிய நடிகர்கள் மவுனமாக இருப்பது சரியா?

இல்லை, குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் கருத்துச் சொல்லணும். நாம எல்லோரும் கருத்துச் சொன்னால் அது சரியாக இருக்காது. அது நியாயமும் கிடையாது. இந்த மீடூ மூமெண்ட்டில் நியாயமான முறையில் அவர்கள் குறைகளை பதிவு செய்வார்களேயானால் அதனால் தீங்கு ஒன்றுமில்லை.

பெண்ணுக்கான தீங்கு நிகழ்ந்துவிட்ட அந்த குற்றச்சாட்டை கண்ணகி காலத்திலிருந்து சொல்லிக்கொண்டுத்தான் இருக்கிறோம். ஆனால் சொல்லப்படுபவை நியாயமாக இருக்கவேண்டும்.

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பெயர் அடிபடுவதால் பதவி விலகணும் என்று ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்துகின்றனரே?

தவறு இருக்கும்பட்சத்தில் பதவி விலகவேண்டியது கவுரவமான அரசியல்வாதி செய்யவேண்டிய கடமை. குற்றம் என் பேரில் இல்லை என்று சொல்லணும், குற்றம் இருக்கு என்ற சந்தேகம் நீங்கும் வரையில் பதவியில் இருக்கமாட்டேன்னு சொல்லணும். இதெல்லாம் இதற்கு முன்னாடி இருந்த பெரியவர்கள் செய்ததுதான். இப்போது இவரும் செய்வார் என்று நம்புவோமாக.

ஆளுநரே ஏற்கெனவே விசாரணை கமிஷன் அமைத்தார், ஆனால் வெளியிடப்படாமல் இருக்கிறதே?

பல அறிக்கைகள் இதுபோன்று வெளியிடப்படாமல் இருக்கின்றன. ஆனால் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அவைகள் வெளியிடப்படவேண்டும். ஆளுநர் என்பதால் மிகவும் மரியாதையாக ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய ஒன்று.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x