Published : 02 Oct 2018 03:39 PM
Last Updated : 02 Oct 2018 03:39 PM

சிலைகளைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும்: ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கோவில் சிலைகளை பதுக்கிவைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டுமென சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான பண்ணைவீட்டில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு இன்று ஏராளமான சிலைகளும், கல்தூண்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அப்போது செய்தியாளர்களிடம் பொன். மாணிக்கவேல் தெரிவித்ததாவது:

''ஒரு பெருமாள் கோயிலிலிருந்து மொத்த சிலைகளையும் கடத்தியுள்ளனர். ஏராளமான பெருமாள் சிலைகள் இங்கு உள்ளன. இது போக சிவன் கோயில் சிலைகளும் நந்திகளும் இங்கு உள்ளன. சிவன் கோயிலிலிருந்து ஒரு பகுதி சிலைகள் இங்கு கடத்தப்பட்டுள்ளன.

கோயிலில் இருக்கவேண்டிய இவ்வளவு சிலைகளும் இங்கு எப்படி வந்தது. யார் கொடுத்தது என்பது பற்றியெல்லாம் ரன்வீர் ஷாவிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் விவரங்கள் தெரியவரும். சிலைக்கடத்தல் தொடர்பாக 9 நிர்வாக அலுவலர்களை காவலில் எடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுபோன்ற சிலைகளை யார் எல்லாம் பதுக்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டு சரணடைந்து சிலைகளை ஒப்படைக்க முன்வந்தால் பாதிப்பின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே கடைசி எச்சரிக்கை.

சிலைகள் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது. சிலை பதுக்கி வைத்திருப்பது குறித்து தகவல் தர விரும்புவோர் 96000 43442 என்ற என்னுடைய எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவிக்கவும்.''

இவ்வாறு பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் தொழிலதிபரும் நடிகருமான ரன்வீர் ஷா வீட்டில் சில தினங்களுக்குமுன் ஏராளமான சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x