Published : 13 Oct 2018 06:55 PM
Last Updated : 13 Oct 2018 06:55 PM

லோக் ஆயுக்தாவுக்கு முதல் கையெழுத்து: சட்டம் அமலானது தெரியாமல் பேசும் கமல்

முதல்வரானால் முதல் கையெழுத்து என்ன போடுவீர்கள் என்கிற கேள்விக்கு லோக் ஆயுக்தாவுக்காக கையெழுத்து போடுவேன் என்று கமல் கூறியுள்ளார். லோக்ஆயுக்தா மசோதாவே தாக்கல் செய்யப்பட்டு மூன்று மாதம் ஆகிறது என்பதை அறியாமல் இவ்வாறு பேசினாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

நாமக்கல் ராசிபுரத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் கலந்துக்கொண்டு மாணவர்களிடையே பேசிய கமல் அவர்களது கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் நீங்கள் முதல்வரானால் முதல் கையெழுத்து எதற்கு போடுவீர்கள்? என்கிற கேள்விக்கு பதிலளித்தார். அவரது பதில்:

ஊழலை ஒழிப்பது மக்களின் கையில்தான் உள்ளது. முதலமைச்சர் ஆனதும் முதலில் என் உடம்பை நன்றாக பார்த்துக்கொள்வேன். ஏனென்றால் செய்யவேண்டிய வேலை நிறைய இருக்கிறது. இரண்டாவது இந்த அரசியல் சூழல் அனுமதித்தால் லோக் ஆயுக்தாவுக்காக கையெழுத்து போடுவேன்.

ஏனென்றால் என் தலைக்குமேல் கத்தி தொங்கிக்கொண்டே இருக்கணும். அந்த நேர்மை வந்துவிட்டால் போதும். ஊழல் அங்கு இருக்கிறது தூரத்தில் இருக்கிறது என்று நினைக்கக்கூடாது. இங்கேயும் இருக்கலாம். அதை அகழ்வராய்ச்சி செய்து வெளியே எடுக்கணும் அதுதான் முதல் கட்டளை.” என்று பேசினார்.

லோக் ஆயுக்தா தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி சட்டப்பேரவையில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆகவே லோக் ஆயுக்தாவுக்காக முதல் கையெழுத்தை மீண்டும் கமல் போடமுடியுமா? என்பது கேள்விக்குறியே.

கடந்த ஏப்ரல்மாதம் உச்சநீதிமன்றம் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த கெடுவிதித்தபோது அதை வரவேற்று கமல் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் “உச்ச நீதிமன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி. இந்த அரசு, உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும். லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து” என தெரிவித்திருந்தார்.

மேலும் ஏப். 19-ம் தேதி லோக் ஆயுக்தாவை வரவேற்று மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் லோக் ஆயுக்தாவை வரவேற்று மார்ச் 27-ம் தேதி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் உரையாற்றிய கமலிடம் முதல்வரானால் முதல் கையெழுத்து எதற்காக போடுவீர்கள் என்கிற கேள்விக்கு லோக் ஆயுக்தாவிற்காக என்று பதிலளித்தார் என குறிப்பிட்டு தமிழக அரசு மேல்முறையீடு செய்யாமல் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால அதன்பின்னர் தமிழக அரசு கடந்த ஜூலை 9 அன்று லோக் ஆயுக்தா சட்டத்தை தாக்கல் செய்தது அதன் பின்னரும் பழைய பதிலையே கமல் கூறிவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x