Published : 15 Aug 2018 08:00 AM
Last Updated : 15 Aug 2018 08:00 AM

கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டு முதல்வரின் கையை பிடித்து கெஞ்சினேன்: திமுக செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கம்

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டு முதல்வர் பழனிசாமியின் கையைப் பிடித்து கெஞ்சினேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.

கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது மறை வுக்கு இரங்கல் தீர்மானம் நிறை வேற்றுவதற்காக திமுக தலைமை செயற்குழுவின் அவசரக் கூட் டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது.

காலை 10.20 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக செய்தித் தொடர்பு செயலாளருமான டிகேஎஸ் இளங்கோவன், இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அதில், கருணாநிதியின் சாதனைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. ‘உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் இறுதிவரை எதற்கும் அசைந்து கொடுக்காமல் கொள்கைவழி நின்று அயராது உழைத்தவர் கருணாநிதி. வானளாவிய அவர் புகழை குறையாமல் காத்து, அவரது லட்சியங்களை என்றும் கடைபிடித்து நிறைவேற்ற உறுதியேற்போம். கருணாநிதிக்கு திமுக தலைமை செயற்குழு தனது இதயப்பூர்வமான இரங்கலை கண்ணீருடன் பதிவு செய்கிறது’ என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

தீர்மானத்துக்கு பிறகு அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, சுப.தங்கவேலன், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.

கூட்டத்தின் நிறைவாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தலைவர் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நீங்களெல்லாம் தலைவரை இழந்து இருக்கிறீர்கள். நான் தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நின்று கொண்டிருக்கிறேன்.

கருணாநிதியின் உடலை அவரை உருவாக்கிய அண்ணாவின் கல்லறைக்குப் பக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். அது அவருடைய ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு எவ்வளவோ முயற்சிகளில் ஈடுபட்டோம். இதற்காக எதை யும் இழக்கத் தயார் என்ற நிலை யில்தான் முதல்வர் பழனிசாமியை சந்திக்கச் சென்றோம். அப்போது, முதல்வரிின் கைகளை பிடித்துக் கொண்டு, ‘எங்கள் தலைவரின் ஆசையை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுகிறோம், அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்’ என்று கெஞ்சிக் கேட்டேன். அப்போதுகூட அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியாக ‘பார்ப்போம்’ என்று ஒரு வார்த்தை சொன்னார்.

பின்னர், முறையாக கேட்க வேண்டும் என்பதற்காக முதல்வர் வீட்டுக்கு கடிதம் அனுப்பினோம். எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். அதன்பிறகு மூத்த வழக்கறிஞர் பி.வில்சனின் தீவிர முயற்சியின் காரணமாக ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கு இடம் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. அந்தச் செய்தியைக் கேட்டு எனக்கு நன்றி சொன்னார்கள்.

இதற்காக திமுக வழக்கறிஞர் குழுவுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். வழக்கறிஞர் அணிக்குத்தான் இந்தப் பெருமை சேரும்.

ஒருவேளை தீர்ப்பு நமக்கு சாதகமாக வராமல் போயிருந்தால், கருணாநிதிக்கு பக்கத்திலேயே என்னை புதைக்கக்கூடிய சூழ்நிலைதான் நிச்சயமாக உருவாகியிருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அந்த நிலை வரவில்லை. தலைவரின் எண்ணம், அவர் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. அவர் மறைந்தும் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

திமுகவில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்பினர்களுக்கும் கருணாநிதி சார்பில் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, இந்த இயக்கத்தைக் காப்போம். கருணாநிதியின் வழி நின்று நம் கடமையை ஆற்றுவோம். அவரது எண்ணங்களை காப்பாற்ற உறுதி ஏற்போம் என்பதுதான்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசும்போது, “ஸ்டாலின் என்ற பெரும் ஆற்றலை கருணாநிதி விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். அவரிடம் காட்டிய அதே பாசத்தையும், நேசத்தையும் விரைவில் தலைவராக உள்ள ஸ்டாலினுக்கும் காட்டுவோம். இனி உன் (ஸ்டாலின்) ஆணைக்கு கட்டுப்படுகிறோம். எங்களை வழிநடத்து’’ என்றார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சமி ஜெகதீசன் பேசும்போது, “மத்திய அரசு ஒரு பக்கம் திமுகவை பிளப்பதற்கு திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறது. நம் எதிரிகள் ஒருபக்கம் பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு நடந்த முதல் செயற்குழு கூட்டம் என்பதால் பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்கள் பலர் அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். வழக்கமாக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் நடக்கும்போது தொடக்கத்தில் புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் சில நிமிடங்கள் அரங்க நிகழ்வுகளை படம் பிடிக்க அனுமதி அளிக்கப்படும். ஆனால், நேற்று நடந்த கூட்டத்தில் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் யாரும் அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x