Published : 23 Aug 2018 10:36 AM
Last Updated : 23 Aug 2018 10:36 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.25 லட்சத்துக்கு நிவாரணப் பொருட்கள்:தமிழக ஐயப்பா சேவா சங்கம் அனுப்பி வைத்தது

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஐயப்ப சேவா சங்கத்தின் தமிழ் மாநில பிரிவு இதுவரை ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

கடுமையான மழை வெள்ளத் தால் கேரள மக்கள் தங்களின் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக் கணக்கானோர் நிவாரண முகாம் களில் உள்ளனர். வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு தவிக்கும் கேரள மக்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவிகள் சென்று கொண்டிருக்கின்றன. அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் தமிழ் மாநில பிரிவும் உணவு, உடை, மருந்துகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக் கிறது.

மதுரை அருகே கள்ளந்திரி கிராமத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில்தான் இந்த சேவை முதன்முதலில் தொடங்கியுள்ளது. அதுகுறித்து அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் கூறும் போது, ‘‘எங்கள் கோயிலின் பொறுப்பில் சாஸ்தா முதியோர் இல்லம் இருக்கிறது. அங்குள்ள முதியவர்களுக்காக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை அறிந்ததும் முதியவர்களுக்காக வைத்திருந்த 30 மூட்டை அரிசி, 100 கிலோ சர்க்கரை, 5 மூட்டை ரவை, 3 மூட்டை பால் பவுடர், 2 பண்டல்களில் வேட்டி, சேலை, மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்களை உடனடியாக அனுப்பினோம். திருச்சி கிளையில் இருந்து 10 ஆயிரம் சப்பாத்தி, 2,500 ஜாம் பாக்கெட்கள், 10 ஆயிரம் பிஸ்கட்கள், 5 ஆயிரம் பிரட் பாக்கெட்கள், 2,500 பிரஷ் - பேஸ்ட் செட்கள் உள்ளிட்ட பொருட்களைக் கடந்த 18-ம் தேதி அனுப்பி வைத்தார்கள். அடுத்தகட்டமாக சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் 28-ம் தேதி இன்னொரு வண்டியும் அங்கிருந்து கேரளா புறப்படுகிறது. இதேபோல் தென் மாவட்டங்களில் இருந்தும் அடுத்தகட்ட நிவாரணப் பொருட்களை எங்கள் சங்கத்தினர் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அவையும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.

இதற்கிடையே, திருப்பூர் கிளையில் இருந்து 3 பாத்திரங்கள், ஒரு பிளாஸ்டிக் வாளி, ஒரு குடம், நைட்டி, லுங்கி, துண்டு அடங்கிய பேக் தயாரிக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக கொண்டுபோய் சேர்க்கப்பட்டன. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாலக்காடு மாவட்டத்தின் கொல்லங்கோடு, நிலக்கல் அருகே அட்டத்தோடு, நெல்லிப்பள்ளி உள்ளிட்ட குக்கிராமங்களுக்கு ஐயப்பா சேவா சங்கத்தின் கேரள மாநில கிளையுடன் இணைந்து நிவாரண உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் தமிழ் மாநில கிளை.

நிவாரணப் பொருட்களைச் சேகரித்து அனுப்புவது தொடர்பாக கோவையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஐயப்பா சேவா சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் ஐயப்பனிடம் கேட்டபோது, ‘‘சென்னை கிளைகள் மூலமாகவும் சுமார் ரூ.4 லட்சம் அளவுக்கு உணவுப் பொருட்கள், துணி மணிகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி இருக்கிறோம். இதுவரை சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள், ஐயப்பா சேவா சங்கத்தின் மூலம் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எங்கள் சேவை மேலும் தொடரும். கேரளாவில் நிலைமை கொஞ்சம் சரியானதும் எங்கள் சங்கத்தினர் அங்கு சென்று, களப்பணியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளேம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x