Published : 17 Aug 2018 09:21 AM
Last Updated : 17 Aug 2018 09:21 AM

கலைஞர்... ஒரு வாழ்வியல் பேராசிரியர்

கலைஞர் 2013-ல் உடன்பிறப்புக்கு கடிதத் தில் இவ்வாறு எழுதுகிறார்: மறைந்த அண்ணா விடம் பேசுவதுபோல இதை எழுதுகிறார் - ‘‘எனக்கு அகவை 90 ஆகிவிட்டதே அண்ணா’’ என்றேன். அதற்கு, ‘‘அப்படி என்ன வயதாகிவிட்டது? 1969-ல் நான் உங்களை எல்லாம் விட்டு வரும்பொழுது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணி இன்னும் 50 ஆண்டு காலத்துக்கு தேவைப்படுகிறது என்று சொன் னேனே... அந்த ஞாபகம் வரவில் லையா? அந்த 50 ஆண்டு 2019-ல் தானே வருகிறது’’ என்றார் அண்ணா.

இறப்பிலும்கூட அண்ணா இட்ட ஆணையை நிறைவேற்றுகின்ற வகையில், 1969-ல் இருந்து 50 ஆண்டுகளுக்கு திராவிட முன் னேற்றக் கழகத்தின் பணிகளைச் செய்து முடித்துவிட்டுத்தான் கலைஞர் விடைபெற்றுள்ளார்.

கலைஞரின் சட்டப்பேரவை பொன்விழா நிகழ்ச்சியில் அவரை வாழ்த்தியபோது நான் பேசினேன். ‘‘வாழ்த்த எனக்கு வயதும் தகுதியும் இல்லை. உங்கள் பணி இருக்கின்றவரை உங்கள் வாழ்வு இருக்க வேண் டும். உங்கள் வாழ்வு இருக்கின்ற வரை உங்கள் பணி இருக்க வேண்டும்’’ என்றேன்.

வாழ்வும் பணியும் ஒன்றாக முடி வது என்பது ஓர் வரலாற்று அதி சயம். வாழ்வின் காலம் முழுவ தும் பணி செய்து வாழ்வதென்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதிலும் 94 ஆண்டுகள், காலச் சக்கரத்தின் சுழற்சியில் மிதிபடாமல், மாற்றங்களின் சூறாவளிக்கு உட் பட்டு மறக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்ந்துவிடாமல், வாழ்ந்த ஒவ்வொரு நாளும் நாடும் சமூகமும் தன்னைச் சுற் றியே வாழ்வதென்பது அரிதினும் அரிது.

வாழ்வில் அவரைப் பற்றி பொறாமை கொண்டோர் அநேகர். அவரது திறமைகளைப் பார்த்து, எழுத்தாற்றலைப் பார்த்து, அவர் வகித்த பதவிகளைப் பார்த்து, அவரது தேர்தல் வெற்றிகளைப் பார்த்து, அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கைப் பார்த்து, அசைத்துப் பார்க்க முடியாத அவரது தலைமைத்துவத்தைப் பார்த்து பொறாமைப்பட்டவர்கள் ஏராளம் உண்டு. ஆனால், அவரது மரணம்கூட பலரை பொறாமைப்பட வைத்ததுதான் ஆச்சரியம். தங்க ளுக்கும் அதைப்போன்ற மரணம் வேண்டும் என்று ஆசைப்பட வைத் தது.

அமெரிக்க பத்திரிகைகள் செய் திக் கட்டுரைகள் வெளியிட்டதும், சர்வதேச ஊடகங்கள் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்பியதும், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப் பட்டதும், தேசம் துயரம் கொண்டதும், பிரதமரும் பெருந் தலைவர்களும் முதல்வர்களும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தியதும், கோடிக்கணக் கானவர்கள் கண்கள் கலங்கி நின் றதும் தற்செயலாக நடந்துவிட்ட தல்ல. அவர் வாழ்க்கை முழுவதும் உழைத்து போராடிப் பெற்றது.

கலைஞர் இறந்த அன்று இரவில் கோபாலபுரத்தில் அவரது சடலத்தின் முன் நிற்கின்றபோது அழுத முகங்களைப் பார்த்தேன். பெற்ற பிள்ளைகளும் அவர்க ளது பிள்ளைகளும் மட்டும் அழ வில்லை. வாசலில் முண்டியடித்துக் கொண்டு அவர் இறந்த பின் பும் ‘கலைஞர் வாழ்க’ என்று அடிவயிற்றில் இருந்து கலங் கிய கண்களோடு கத்தும் ஏதுமற்ற வர்களை ஏராளமாகப் பார்த் தேன். ராஜாஜி அரங்கின் முன் பாக மனிதக் கடலாக திரண்டிருந் தவர்களின் கூட்டத்தில் எத்தனை விதமான மனிதர்கள். அரசியல், ஜாதி, மதம், மொழி என்ற அத்தனை கரைகளையும் தகர்த்து அக்கூட்டம் ஒரு மனித மகாநதியாக திரண்டு நின்றதைப் பார்த்து அகமெல்லாம் வியந்து போனேன். ஆட்சியிலும் அதிகாரத்திலும் இல் லாத ஒருவருக்கு எப்படி இந் தக் கூட்டம் திரண்டது என்று அதிசயித்தேன்.

ஒரு அரசியல் தலைவரின் சராசரிப் பணிகளோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. வாழ்வு முழுவதும் ஒரு மனிதநேயராகச் சிந்தித்திருக்கிறார். தன் கட்சி வெற்றி பெறவேண்டும் என்பதை விட சமூகநீதி வெற்றி பெற வேண் டும் என்று அதிகமாக ஆசைப்பட்டி ருக்கிறார். ஒரு இனத்தின் விடு தலையை நோக்கிப் போராடும் தளபதியாக தனது அரசு நிர்வா கத்தை அமைத்துக் கொண்டார்.

மத்திய அரசு, மாநில அரசு, நாடாளுமன்றம், சட்டப்பேரவை, கழகத்தின் பொதுக்குழு, செயற் குழு, பொதுக்கூட்டங்கள், மாநாடு கள், தேர்தல் பிரச்சாரம், கூட்டணி வியூகங்கள், தேர்தல் வெற்றி தோல்விகள் என்ற புள்ளிகளுக்கு இடையே மட்டும் அவரது சிந்தனைக் களம் முடிந்து விடவில்லை. மாநில சுயாட்சி பற்றி சிந்தித்த அதே வேளையில் உயிரியல் தொழில் நுட்பத்தைப் பற்றியும் (biotech nology) சிந்தித்திருக்கிறார். தேர்தல் அறிக்கைகளை மட்டும் அவர் நெஞ்சத்தில் இருத்திக் கொள்ள வில்லை. பெண்களுக்கான உயிரியல் தொழில்நுட்பப் பூங்கா வளாகம் அமைக்க வேண்டும் என்றும் கனவு கண்டார். வள்ளுவர் கோட்டத்தை மட்டும் அவர் வடிவமைக்கவில்லை. தரமணியில் M.S.சுவாமிநாதன் ஆய்வு மையம் (M.S.Swaminathan research foundation) என்ற உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனம் அமையவும் இடம் தந்தார்.

கட்டபொம்மனுக்கு கோட்டை கட்டிய கைகள், அன்னை தெரசா மாளிகை அமைக்கவும் தவறவில்லை. கம்யூனிசம் பயி ரான மண்ணில் கை ரிக் ஷாவை ஒழிப்பதற்கு 2 தலைமுறைக்கு முன்பே தமிழகத்தில் அதை கலைஞர் ஒழித்துவிட்டார். வரலாறு எழுதப்படுவதற்கு முன்பாக எழுதப்பட்ட தொல்காப்பியத்தை தமிழனுக்கு அறிமுகம் செய்த அதே கைகள், அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தையும் வடிவமைத்தது. குறளோவியம் எழுதிய அதே கைகள்தாம் சென்னை நகரில் வளைந்து நெளியும் மெட்ரோ ரயிலை ஓட விட்டது.

நெருக்கடி நிலை காலகட்டத்தில் வேதனையில் வெடித்த நெஞ்சம் தான், ‘நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக’ என்று வாய் குளிர வரவேற்றது. கடந்த காலங்கள் தன்னைச் சிறைப்படுத்த அவர் ஒருநாளும் அனுமதிக்க வில்லை. தரம் குறைந்த விமர் சனங்களும், தகுதியற்றவர்களின் விஷமங்களும் அவரை ஒருநாளும் முடக்கவில்லை.

பொது நலனுக்காக தனது நிலைப்பாட்டில் விட்டுக்கொடுக்க எப்போதும் தயாராக இருந்தார். மாநில உரிமைகளுக்காக போரா டிய அதேவேளையில் தேச நலனுக் காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். பொதுவாழ்வில் இருக் கின்ற எல்லோருக்கும் கலைஞர் ஒரு வாழ்வியல் பேராசிரியர். எப்படி பேசுவது? எப்படி எழுது வது? எப்படி போராடுவது? எப்படி உழைப்பது? எப்படி தோல்வி களை எதிர்கொள்வது? எப்படி வெற்றியை கையாளுவது? எப்படி வியூகங்களை வகுப்பது? மொத்தத் தில் எப்படி ஒரு தலைவராக வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய கலைஞர், இறுதியில் எப்படி மரணிக்க வேண்டும் என்ப தையும் காண்பித்துவிட்டார்.

ஆம்! நாடும் சமூகமும் கொடுத்த வர்களைத்தான் கொண்டாடு கின்றன. பெற்றுக்கொண்டவர் களை அல்ல!

-பீட்டர் அல்போன்ஸ்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x