Published : 02 Aug 2018 07:27 AM
Last Updated : 02 Aug 2018 07:27 AM

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி: பொதுப்பிரிவு மாணவர்களின் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் உத்தரவு

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரி களில் மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவு அல்லாதோருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை கடந்த 1994-ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்காக  தமிழக அரசு இயற்றிய சட்டம்,  அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது

அட்டவணையிலும் சேர்க்கப் பட்டுள்ளது.

இந்த 69 சதவீத இடஒதுக் கீட்டின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதமும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதமும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவீதமும் பழங்குடியின வகுப்பினருக்கு ஒரு சதவீதமும் என மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எஞ்சிய 31 சதவீதம் பொதுப்பிரிவு வகுப்பினருக்கு வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என 9 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற முழு

அமர்வு கடந்த 1992-ல் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 1994-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து கடந்த 2012 முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இடைக்கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடம் வழங்கக் கோரி பொதுப்பிரிவு மாணவர்களான முத்துராமகிருஷ்ணன், சத்திய நாராயணன் உள்ளிட்டோர்  உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தனர். அதில்,

‘மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த 1992-ல் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான உரிமை பாதிக்கப்படுகிறது. எனவே கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை சட்டவிரோத மானது என்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனவும் அறிவிக்க வேண்டும். அத்துடன் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-19 கல்வியாண்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டை கடை பிடித்து பொதுப்பிரிவு மாணவர் களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நஜீர் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து நேற்று தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் பொதுப் பிரிவு மாணவர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்த மூத்த வழக்கறிஞரான கே.எம்.விஜயன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

கடந்த 1994-ம் ஆண்டு தமிழக அரசு நிறைவேற்றிய ஒரு சட்டத்தை எதிர்த்து 25 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் சட்டப்போராட்டம் நடத்திதான் உத்தரவுகளை பெற்று வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் பொதுப்பிரிவு  மாணவர்களுக்காக ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்து இடைக்கால உத்தரவுகளை பெறுவோம். உச்ச நீதிமன்றமும் மறுக்காமல் வழங்கி வந்தது. இந்த ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனு கடந்த ஜூலை 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக ரிட் மனுவாக தாக்கல் செய்யாமல், ஏற்கெனவே கடந்த 2012 முதல் நிலுவையில் உள்ள ஒரிஜினல்   வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி இடையீட்டு மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதன்படி, நிவாரணம் கோரியும் இதுதொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தோம். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 69 சதவீத இடஒதுக்கீட்டு உத்தரவுக்கு எதிராக ஏன் தடை கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினர்.

அதற்கு நாங்கள், ‘கடந்த 25 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரிட் மூலமாகத்தான் நிவாரணம் தந்து கொண்டிருக்கிறது. ஆகவே, நாங்கள் தடை கோரி மனு தாக்கல் செய்யவில்லை’ என தெரிவித்தோம்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘உங்களது கோரிக்கையுடன் சேர்த்து தடை கோரியும் மனு தாக்கல் செய்யுங்கள்’ என்றனர். மனுவை வாபஸ் பெறுவதாக நாங்கள் கூறியதையடுத்து அந்த இடைக்கால மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

ஆனால், 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பிரதான மனு இன்னும் நிலுவையில்தான் இருந்து வருகிறது. பொதுவாக ஒரு சட்டத்தை எதிர்த்து தடை கோரி மனுத் தாக்கல் செய்தால் அதில் ஒரு தீர்வு காணும்வரை பாதிக்கப்படுபவர்களுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் தமிழக அரசு முறையாக பதில் மனு தாக்கல்  செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. தற்போதும் இந்த சட்டத்துக்கு எதிராக தடை கோரி மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கறிஞர் கே.எம்.விஜயன் போன்றோர் தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது பாராட் டுக்குரியது. இது சமூக நீதிக்கு கிடைத்த, பெரியார் பூமிக்கு கிடைத்த வெற்றியாகும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x