Published : 22 Aug 2018 09:18 AM
Last Updated : 22 Aug 2018 09:18 AM

தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படும்: பாஜக அறிவிப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் வரும் 26-ம் தேதி ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படுகிறது.

இதுகுறித்து பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தி, புதன்கிழமை (இன்று) டெல்லி மத்திய தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கியத் தலைவர்களால் அனைத்து மாநில தலைவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதனை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக் கொண்டு, பகல் 2 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வருகிறார். பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு அஸ்தி எடுத்து வரப்படுகிறது.

வியாழக்கிழமையன்று பொது மக்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, மாலையில் தமிழகத்தில் 6 இடங் களில் அஸ்தியைக் கரைப்பதற் காக பாஜக மூத்த தலைவர்கள் தலைமையில் அஸ்தி எடுத்துச் செல்லப்படுகிறது. அதன்படி, கன்னியாகுமரி, ராமேசுவரம், மதுரை, திருச்சி, ஈரோடு (பவானி), சென்னை ஆகிய 6 இடங்களில் அஸ்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் இல.கணேசன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் கே.என்.லட்சுமணன், எம்.ஆர்.காந்தி ஆகியோர் தலைமையில் இந்த ஊர்வலங்கள் நடக்கின் றன. பொதுமக்கள், கட்சித் தொண் டர்கள் அனைவரும் ஆங்காங்கே அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 26-ம் தேதி காலை 11 மணிக்கு வாஜ்பாயின் அஸ்தி 6 இடங்களிலும் ஒரே நேரத்தில் கரைக்கப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x