Published : 09 Aug 2014 01:32 PM
Last Updated : 09 Aug 2014 01:32 PM

மக்களவையில் தமிழில் பதிலளித்த முதல் மத்திய அமைச்சர் அன்புமணி: ராமதாஸ் விளக்கம்

நாடாளுமன்றத்தில் சமீப காலத்தில், முதன்முதலாக தமிழில் பதிலளித்தவர் அன்புமணி ராமதாஸ் தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: " நாடாளுமன்ற மக்களவையில் விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தமிழில் வினா எழுப்பியதும், அதற்கு மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழில் பதிலளித்ததும், தமிழ் உணர்வாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வாகும்.

தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர் தமிழில் எழுப்பிய வினாவுக்கு தமிழிலேயே பதில் அளித்துள்ளார் என்பதையும் அண்மைக் காலங்களில் நாடாளுமன்றத்தில் தமிழில் பதிலளித்த முதல் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தான்.

கடந்த 2008-ஆம் ஆண்டு, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.அப்பாதுரை, புகையிலை பொருட்கள் மீதான எச்சரிக்கை படம் தொடர்பான துணை வினாவை தமிழில் எழுப்பினார். அதற்கு, அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், தமிழில் விடையளித்தார்.

தொடர்ந்து, அப்பாதுரை எழுப்பிய மற்றொரு துணை வினாவிற்கும், அன்புமணி ராமதாஸ், தமிழிலேயே விடையளித்தார். இதற்காக, அன்புமணி ராமதாஸை, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், மக்களவை உறுப்பினர்களும் பாராட்டினர்.

மக்களவையில், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் அப்பாதுரை, தமிழில் எழுப்பிய வினாக்களும், அதற்கு அன்புமணி ராமதாஸ் அளித்த பதில்களும் பின்வருமாறு:

அப்பாதுரை (தென்காசி):

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அளித்த பதிலில், எனது கேள்வி தொடர்பான விவரங்கள் இடம்பெறவில்லை. புகைப்பிடித்தல் உடல்நலனுக்கு தீங்கானது என்று நாம் கூறி வரும் போதிலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்டிக் கடைகளிலும் சிகரெட்களும், பீடிகளும் இன்னும் விற்பனை செய்வதைப் பார்க்கிறோம்.

புகைப்பிடித்தல் தொடர்பான ஒரு சட்டத்தை மத்திய அரசு, 2006- ம் ஆண்டு கொண்டு வந்தது. 2007- ம் ஆண்டின் முதல் பாதியில், அச்சட்டம் திருத்தப்பட்டது. அந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் மீண்டும் திருத்தப்பட்டது. பீடி பாக்கெட்களில் மட்டும் மண்டை ஓடு மற்றும் எலும்பு உள்ள எச்சரிக்கை படம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து வகையான சிகரெட்களும், பீடிகளும் கடைகளில் கிடைக்கின்றன. புகைப்பிடித்தல் உடல் நலனுக்குத் தீங்கானது என்று நீங்கள் கூறும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு, என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

புகையிலை கலக்காத பான் மசாலாக்கள் என்று உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறி, பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்.

அன்புமணி ராமதாஸ்:

மக்களிடையே சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும், புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டத்தை 2003- ம் ஆண்டில் நாம் நிறைவேற்றினோம்.

புகைப்பிடிக்கும்படி மக்களை ஈர்க்கும் நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களை அரசு தடை செய்துள்ளது. வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அருகில் புகையிலை தொடர்பான விளம்பரங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு செயல்படுத்தியுள்ளது. இத்தகைய இடங்களில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் தான் புகையிலை தொடர்பான விளம்பரப் பலகைகளை வைக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தியுள்ளோம்.

இது தொடர்பாக, மேலும் பல முடிவுகளும், நடவடிக்கைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அனைத்து வகையான புகையிலைப் பொருட்களிலும், புகைப்பிடிப்பதும், புகையிலையை உட்கொள்வதும் உடல் நலத்திற்கு தீங்கானது என்ற சட்டப்பூர்வ எச்சரிக்கை இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான அறிவிக்கை இம்மாதம் 18- ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நாடு முழுவதும் இது செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அனைத்து வகையான புகையிலை பொருட்களிலும் இத்தகைய சட்டப்பூர்வ எச்சரிக்கை கட்டாயமாக்கப்பட்டிருப்பதால், இனிவரும் காலங்களில் புகைப் பிடிப்பது மற்றும் புகையிலைப் பழக்கம் தொடர்பான நிலைமையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம்.

எம்.அப்பாதுரை (தென்காசி):

புகைப்பிடித்தல் தொடர்பாக சட்டப்பூர்வ எச்சரிக்கைகளை சில தொலைக்காட்சிகளிலும், சில செய்தித்தாள்களிலும் பார்க்க முடிகிறது. அனைத்து தொலைக்காட்சிகளிலும், அனைத்து செய்தித் தாள்களிலும் இத்தகைய சட்டப்பூர்வ எச்சரிக்கைகள் ஒரே மாதிரியாக வெளியாவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை அறிய விரும்புகிறேன்.

மது அருந்துவதும் உடல் நலனுக்கு தீங்கானது என்று கூறப்படுகிறது. ஆனால், அரசாங்கமே பொதுமக்களுக்கு மதுவை விற்பனை செய்கிறது. உடல் நலத்திற்கு தீங்கானதாகக் கருதப்படும் புகைப்பிடிக்கும் பழக்கத்துடன் சேர்த்து, மது அருந்தும் கொடுமையையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை அரசிடம் இருந்து அறிய விரும்புகிறேன்.

அன்புமணி ராமதாஸ்:

மது மற்றும் புகையிலை தொடர்பான நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டம், நாட்டில் நடைமுறையில் உள்ளது. புகை மற்றும் குடி பழக்கத்தை குறைப்பதற்காக இந்த சட்டத்தை பின்பற்றி நடக்கும்படியும், மது மற்றும் புகையிலை பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தவிர்க்கும்படியும், தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமின்றி, இப்பிரச்னையை, கடந்த பிப்ரவரி 24- ம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் எனது அமைச்சகம் கொண்டு சென்றுள்ளது. அதன் அடிப்படையில், புகையிலை மற்றும் மது தொடர்பான நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களைத் தவிர்க்கும்படி, ஊடகங்களிடம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது" என்று ராமதாஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x