Published : 15 Aug 2018 08:03 AM
Last Updated : 15 Aug 2018 08:03 AM

கி.வீரமணி குறித்து விமர்சனம்: அழகிரி மகன் துரை தயாநிதிக்கு பெரியார் இயக்கத்தினர் கண்டனம்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குறித்து விமர்சித்த மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு பெரியார் இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள தொண்டர்கள் தன் பக்கம்தான் உள்ளனர் என்று மு.க.அழகிரி 13-ம் தேதி கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “துக்கம் தணியாத 6-வது நாளில் தூண்டிவிடப்பட்ட அம்புகள், வடக்கே இருந்து வந்த திட்டப்படி சில சத்தங்களை எழுப்பினால் சரித்திரம் மாறிவிடும் என்று நப்பாசை கொள்கின்றனர்” என்று அழகிரியை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அழகிரியின் மகன் துரை தயாநிதி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “காலம் காலமாக திமுகவிலும், அதிமுகவிலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி இதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு பெரியார் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி: அரசியல்வாதியாக இன்னும் அறியப்படாதவர் துரை தயாநிதி. எதிர்காலத்தில் அவர் அரசியலில் ஈடுபட்டாலும் அவரது வளர்ச்சிக்கு இதுபோன்ற கருத்துகள் தடையாக இருக்கும்.

திமுகவின் உட்கட்சி பிரச்சினை என்பதைத் தாண்டி தாய்க் கழகம் என்ற உரிமையோடு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், துரை தயாநிதி பதிவிட்டுள்ள கருத்து கண்டிக்கத் தக்கது. தன்னை நல்ல அரசியல் வாதியாக நினைத்திருந்தால் அவதூறான கருத்தை பதிவிட்டி ருக்க மாட்டார்.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி: மதவாத சக்திகள் தமிழகத்துக்குள் நுழைய தடையாக இருப்பது திமுக போன்ற கட்சிகள்தான். அப்படி இருக்கும்போது, அழகிரி மூலம் அவர்கள் நுழைய முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்நிலையில்தான், கி.வீரமணி தனது பொதுநல கருத்தை தெரிவித்தார்.

ஆனால், தங்கள் சுயநலத்துக் காக துரை தயாநிதி கருத்தை பதிவிட்டது கண்டிக்கத்தக்கது. மூத்த தலைவரான வீரமணியை பொதுவெளியில் அவதூறாக விமர்சிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x