Last Updated : 08 Aug, 2014 08:40 AM

 

Published : 08 Aug 2014 08:40 AM
Last Updated : 08 Aug 2014 08:40 AM

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம்களில் விதிமீறல்கள்?: மருத்துவர்களின் வேதனைக் குரல்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மூலம் கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்த கலைவாணி குறித்த செய்தி `தி இந்து' உங்கள் குரல் மூலம் பதிவாகி வாசகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதைப் பற்றி நேரிலும், தொலைபேசியிலும் நிறைய விசாரிப்புகள், கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன.

குறிப்பாக இறந்த பெண் முழுக்க, முழுக்க வலிப்பு நோய் காரணமாகவே இறந்தார் என்று சுகாதாரத் துறையினர் தெரிவிக் கும் விளக்கத்தில் சில நெருடல்கள் இருப்பதாகவே பலர் தெரிவித்த னர். இதில் உள்ளீடாக இருக்கும் விஷயங்களை மருத்துவத் துறையி லேயே விசாரித்து எழுதுமாறு சிலர் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மருத்துவ வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் வருமாறு: கோவை மாவட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம்களில் நடக்கும் விதிமீறல்கள் குறித்து தாங்களே மனவேதனையடைந்து வருவதாக சில மருத்துவர்கள் தெரிவித்தனர். சுகாதாரத் துறை சார்பில் அடிப்படை மருத்துவ வசதிகள்கூட இல்லாமல் முகாம் நடத்தப்படுவதால், என்ன நடக் குமோ என்ற பயத்தில் சிகிச்சை அளிக்க வேண்டி இருப்பதாகவும், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சிறப்பு முகாம்கள் நடத்த அனுமதிக்கவே கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர் ஒருவர் கூறியதாவது: ‘கிராமப்புறங்களில் சுகாதாரத் துறை சார்பில் நடத்தப்படும் அறுவை சிகிச்சை முகாம் ஒன்றுக்கு குறைந்தது 20 முதல் 30 பேர் தங்கள் பெயரைப் பதிவு செய்கின்றனர். அறுவை சிகிச்சைக்காக பயனாளிகளை அழைத்து வருவது எல்லாம் கிராம சுகாதார செவிலியர்கள்தான். ஒரு செவிலியர் 5 பேரையாவது சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும். இது மாவட்ட சுகாதாரத் துறை விதிக்கும் நிபந்தனை. அறுவை சிகிச்சைக்கு ஒரு பெண்ணை அழைத்து வந்தால் ரூ.300 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. ஊக்கத் தொகைக்காகவும், சரியான விழிப்புணர்வு வழங்காமலும், சில நேரங்களில் தவறான தகவல்களை கொடுத்தும் பெண்களை அழைத்து வருகின்றனர்.

அதில், அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறிது நேரத்தில் வழக்கம்போல் வேலைகளைச் செய்யலாம் எனக் கூறி அழைத்து வருகின்றனர். ஆனால், உண்மையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் கட்டாயம் குறைந்தபட்சம் ஒரு நாளாவது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். ஆனால், முகாம்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுமாறு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அறுவை சிகிச்சை பெற்ற கிராமப்புற ஏழை பெண்கள் சரியான விழிப்புணர்வு இல்லாமலும், போதிய மருத்துவப் பராமரிப்பு இல்லாமலும் வழக்கம்போல வேலைகளைச் செய்வதால் பிற்காலத்தில் கர்ப்பப்பை பாதிக்கப்படுகிறது. வயிறு, குடல் பாதிப்பு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. ஆனால், இது குறித்து அதிகாரிகள் கவலைப்படுவது இல்லை.

முகாம்களில் அறுவைசிகிச்சை செய்துகொண்ட பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியில் தெரிந்தது கலைவாணி போன்ற பெண் மட்டுமே. ஒரு உண்மை என்னவெனில், ஒரு பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தால் மருத்துவருக்கு ரூ.75, உதவி மருத்துவருக்கு ரூ.50, செவிலியருக்கு ரூ.25, உதவியாளருக்கு ரூ.15 என வழங்கப்படுகிறது. ஆதி காலத்து நடைமுறையான இதனை இப்போது வரையிலும் கடைபிடிக்கின்றனர். எங்களால் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் அதிகபட்சம் 5 நிமிடம்கூட ஒதுக்க முடியாது என்றார்.

இது குறித்து ஈர நெஞ்சம் அமைப்பின் நிறுவனர் மகேந்திரன் கூறியது:

முந்தைய காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த சிகிச்சையை மக்களிடம் கொண்டு செல்லவும் முகாம்கள் நடத்தப்பட்டன. அது இப்போது வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

தற்போது, குழந்தைபேற்றின் போதே குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் பொதுமக்களிடம் எடுத்துக் கூறுகின்றனர். இதன்படி பார்த்தால் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையை முகாம்களில் நடத்த தேவையில்லை. அனைத்து வசதிகளும் நிரம்பிய அரசு மருத்துவமனைகளிலேயே நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்வது இல்லை. ஆனால் முகாம் என்ற பெயரில் 30 பேருக்கு ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்வதை அரசு உடனே நிறுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x