Published : 23 Aug 2018 06:06 PM
Last Updated : 23 Aug 2018 06:06 PM

விசாகா கமிட்டி கண் துடைப்பு: உ.வாசுகி பேட்டி | சட்டப்படி நடவடிக்கை இருக்கும்: சீமா அகர்வால் உறுதி

 விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. வெளியிலிருந்து ஒரு உறுப்பினர் நியமனம் குறித்து உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ள நிலையில், சட்டப்படி நடவடிக்கை இருக்கும் என்று விசாகா கமிட்டி தலைவர் சீமா அகர்வால் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக இருக்கும் அதிகாரி ஒருவர் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும் இது குறித்துப் பலவேறு கட்டங்களில் தவிர்த்து, விலகி, எச்சரித்து, ஒதுங்கிச் சென்றும் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகரித்ததை அடுத்து அந்தப் பெண் அதிகாரி தற்போது வெளியில் துணிச்சலாக வந்து புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்டு- 1-ம் தேதி மேலதிகாரி உச்சகட்டமாக பாலியல் தொல்லை கொடுக்க, இனியும் பொறுத்தால் சரியல்ல என்று அந்தப் பெண் அதிகாரி ஆகஸ்டு 4-ம் தேதி அன்று முதல்வரின் அலுவலகம், டிஜிபி, உள்துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு மேலதிகாரி மீது புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் கவனத்திற்கு இந்த விவகாரம் வர, காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டால் அதை விசாரிக்கும் விசாகா கமிட்டி ஏன் செயல்படவில்லை என்று அதிர்ச்சியுடன் கருத்து தெரிவிக்க, அது பரபரப்பாக ஊடகங்களில் செய்தியானது.

இந்நிலையில் அரசு விசாகா கமிட்டியை அமைக்கிறது. விசாகா கமிட்டியின் தலைவராக மாநில குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபி சீமா அகர்வாலும், உறுப்பினர்களாக போக்குவரத்துக் கழக ஏடிஜிபி சு.அருணாச்சலம், காஞ்சிபுர சரக டிஐஜி தேன்மொழி, டிஜிபி அலுவலக மூத்த அதிகாரி ரமேஷ் மற்றும் வெளியிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினராக ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

விசாகா கமிட்டி பெண் எஸ்.பி.யின் புகாரை விசாரிக்கும் என்று கூறப்பட்டது. இதனிடையே விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதில் நடைமுறை சரியாக பின்பற்றப்படவில்லை என்று ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து உ.வாசுகியிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

காவல்துறையில் பெண் காவல் அதிகாரியே புகார் அளிக்கும் நிலை உள்ளதே?

பெண்கள் எந்தத் துறையில் இருந்தாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு விதிவிலக்காக ஆவதில்லை. காவல்துறை என்றால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக்கூடியது, குற்றவாளிகளைப் பிடித்து தண்டனை வாங்கித்தரக்கூடிய துறை என்று யோசிக்கிறோம். அது அவர்களின் தொழில்.

பிரச்சினை என்னவென்றால் அங்கும் ஆண்களும், பெண்களும் ஒன்றாக இணைந்து வேலை செய்யும்போது அவர்களுக்கும் பாலியல் துன்புறுத்தலும், பலாத்காரமும் நடக்கிறது.

புதுக்கோட்டையில் ஒரு திருமணமான பெண் போலீஸ் கான்ஸ்டபிளை இன்னொரு ஆண் கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்தபோது அவர் புகார் அளித்தும் அதைப் பதிவு செய்யவைக்க மாதர் சங்கம் பெரும்பாடுபட்டது.

ஆகவே, ஒரு ஆணும் பெண்ணும் வேலை செய்யும் துறையில் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் நடக்க வாய்ப்புண்டு. இதற்கு காவல்துறையும் விதிவிலக்கல்ல என்பதுதான் எங்கள் கருத்து.

காவல்துறையில் விசாகா கமிட்டி அமைக்க ஏன் இவ்வளவு தாமதம்?

அனைத்து துறைகளிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று 2013-லேயே சட்டமாக்கப்பட்டது. ஆகவே இப்படி ஒரு சம்பவம் நடந்த பின்னர்தான் ஒரு கமிட்டியே அமைக்க வேண்டும் என்று ஏன் அவர்கள் இவ்வளவு நாள் காத்திருந்தார்கள் என்று தெரியவில்லை.

விசாகா கமிட்டி என்ன செய்யும்?

கமிட்டி அமைக்க வேண்டும், அதுபற்றி வெளியில் விளம்பரப்படுத்த வேண்டும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கூட்டங்களில் இதுகுறித்துப் பேச வேண்டும். இதற்காகத்தான் விசாகா கமிட்டி உள்ளது.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு புகார் அளிக்கலாம், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுபவர்கள் தப்ப முடியாது என்று கூற வேண்டும் என்பதெல்லாம் சட்டத்தில் உள்ளது. இவை எதையுமே இதுவரை காவல்துறை செய்யவில்லையே.

தற்போது அமைக்கப்பட்டுள்ள கமிட்டியில் ஒரு என்.ஜி.ஓ பிரதிநிதி அடிப்படையில் காவல்துறையில் ஓய்வுபெற்ற பெண் அதிகாரியை நியமித்துள்ளார்கள். இது சரியா?

ஒரு சீனியர் பெண் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். 50 சதவிகிதத்துக்கும் மேல் கமிட்டியில் பெண்கள் இருக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை எடுத்துக் கையாண்ட அனுபவம் மிக்கவர் கமிட்டியில் இருக்க வேண்டும்.

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சரியான நபர் இல்லையா?

ஏன் இதைக் கூறுகிறோம் என்றால், உள்ளுக்குள்ளேயே அதிகாரி அல்லது ஓய்வு அதிகாரி இருந்தால் அவர் ஒருவகையில் குற்றவாளி, கமிட்டியின் தலைவரைவிட பெரிய ஆள் அல்லது செல்வாக்கு மிக்கவர் என்று வைத்துக்கொண்டால் ஏதாவது ஒரு கட்டத்தில் அனுசரித்துப் போக வாய்ப்பு உண்டு.

ஆனால் இதுபோன்ற விஷயங்களில் எடுத்துப் போராடி வருகின்ற என்.ஜி.ஓ பிரதிநிதி இருந்தால் அவர் அனுசரித்துப் போக வாய்ப்பில்லை. அதுவும் யாரோ ஒரு என்.ஜி.ஓ அல்ல பாலியல் புகார்களை கையிலெடுத்துப் போராடி அனுபவம் பெற்ற என்.ஜி.ஓ என்பதை எடுத்துச் சொல்லி அதன் அடிப்படையில்தான் சட்டத்தில் கொண்டு வரப்பட்டது.

துறையில் இருப்பவர்களோடு பெண்கள் அமைப்பின் பிரதிநிதியை அல்லது இப்பிரச்னைகளைக் கையாண்ட அனுபவம் மிக்க ஒரு நபரை இணைக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. அப்படி இந்தக் குழுவில் யார் இடம் பெற்றுள்ளார் என விசாரித்தால், காவல்துறையில் பணி செய்து ஓய்வுபெற்ற சரஸ்வதி கூடுதல் எஸ்.பி. என்கிறார்கள்.

இது சரியல்ல. அனைவரும் குறிப்பிட்ட துறைக்குள்ளாகவே இருக்கக் கூடாது என்பதால் தான், உச்ச நீதிமன்ற விசாகா தீர்ப்பில் மூன்றாம் நபர் பிரதிநிதி ( third party representative) என்ற முறை உருவாக்கப்பட்டது. 2013 சட்டத்திலும் முதலில், Non governmental organisation/association (என்.ஜி.ஓ) என்று தான் கூறப்படுகிறது. அல்லது என்று போட்டு தான், தனி நபர் குறிப்பிடப்படுகிறார்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள கமிட்டி எப்படி இருக்க வேண்டும்?

தமிழகத்தில் பெண்கள் அமைப்புகள் இல்லையா? இத்தகைய பிரச்சனைகளில் தலையீடு செய்த, போராடிய அமைப்புகள் எத்தனையோ உண்டு. தனிநபர்களும் உண்டு. ஆனால் இவர்களை எல்லாம் விட்டு விட்டு, துறையிலேயே வேலை பார்த்து ஓய்வு பெற்றவரை, இப்பிரச்சினைகளைக் கையாண்டு அனுபவம் மிக்க தனிநபர் என்று சேர்ப்பது என்ன நியாயம்?

காவல்துறை கையாளும் விதமும் இயக்கங்கள் கையாளும் விதமும் ஒன்றா? இப்படிப்பட்ட நடைமுறைகளில் ஏன் காவல்துறை ஒளிந்து கொள்ள வேண்டும்? மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் எதற்கு? இது விசாகா தீர்ப்பின் சாராம்சத்துக்கு எதிரானது. எனவே விசாகா கமிட்டியின் நோக்கத்துடன் ஒன்றியதாக குழுவின் அமைப்பு இருக்க வேண்டும் என டிஜிபியை வற்புறுத்துகிறோம்.

காவல்துறை போல் ஊடகம், தனியார் நிறுவனம் உள்ளிட்ட மற்ற துறைகளிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படவேண்டும் அல்லவா?

இது சட்டத்திலேயே இருக்கிறது.  மதுரையில் மாதர் சங்கத்திற்காக இன்சூரன்ஸ் துறையில் தீபிகா என்ற அமைப்பு 100 தனியார் அமைப்புகளில் ஒரு ஆய்வு நடத்தியபோது 50 நிறுவனங்களுக்கும் மேல் விசாகா கமிட்டி அமைக்கப்படவில்லை என்று தகவல் கிடைத்தது.

ஆகவே அனைத்து நிறுவனங்களுக்கும் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். அவ்வாறு அமைக்காவிட்டால் வழக்குத் தொடரவும் உத்தேசித்துள்ளோம்.

ஆகவே தனியார் நிறுவனங்களுக்கு முன் மாதிரியாக அரசுத்துறை அமைக்கவேண்டும், அரசுத்துறை என்றால் அதில் காவல்துறையும் அடங்கும். தனியார் துறை என்றால் அதில் சினிமாத்துறையும் அடங்கும். கடந்த காலத்தில் சரத்குமார், ராதாரவி நிர்வாகிகளாக இருந்தபோது மாதர் சங்கம் சார்பாக சந்தித்து விசாகா கமிட்டி அமைக்கச் சொன்னோம்.

அப்போது விசாக கமிட்டி அமைக்கப்பட்டது. ஸ்ரீபிரியா தலைமையில் இயங்கியது. ஆனால் அது செயல்படவில்லை. அனைத்துப் புகார்களையும் நடிகர் சங்கம் பார்த்துக் கொள்ளும் என்றார்கள். அதன் பின்னர் கமிட்டியைப் புனரமைக்கவில்லை.

விசாகா கமிட்டி எப்படி அமைக்கப்படவேண்டும்?

சட்டப்படி 10 பெண் ஊழியர்களுக்கு மேலிருந்தால் அந்த நிறுவனத்துக்கு உள்ளாக இன்டர்னல் கமிட்டி அமைக்க வேண்டும். இது தவிர மாவட்டங்களுக்குள் எல்சிபி (லோக்கல் கம்ப்ளைன்ட் கமிட்டி) அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

தமிழக அரசுக்கு இதுபோன்ற பெண்களுக்கான சட்டங்களை அமல்படுத்துவதில் அக்கறை இல்லை என்பதைத்தான் இதுபோன்ற தகவல்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒருபக்கம் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அரசுத்தரப்பில் எவ்வித முயற்சியும் இல்லை. இதற்காக ஒரு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டக்கூடாதா? பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை முக்கியமான அரசியல் பிரச்சினை அல்லவா?, இது குறித்து ஏராளமான பெண்கள் அமைப்புகளை, என்.ஜி.ஓக்களை அழைத்து என்ன செய்யலாம் என்று கலந்து பேசலாம்.

தமிழக அரசு இதை ஒரு பிரச்சனையாகவே பார்க்கவில்லை. அந்த அளவுக்கு பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான மிகப்பெரிய பிரச்சினை புறக்கணிக்கப்படுகிறது. இது வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

இத்தனை பாலியல் துன்புறுத்தல், வல்லுறவு அச்சத்தில் எப்படி அவர்கள் வளர்ச்சியை நோக்கி பணியாற்ற முடியும். வளர்ச்சி வருவதில் தடைதானே. ஆகவே இதை வளர்ச்சியைப் பாதிக்கும் விஷயமாகத்தான் பார்க்க முடியும்.

இவ்வாறு உ.வாசுகி தெரிவித்தார்.

இதுகுறித்து விசாகா கமிட்டி தலைவர் சீமா அகர்வாலிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பாக பேசியபோது அவர் கூறியதாவது:

விசாகா கமிட்டி அமைக்கப்பட்ட தகவல் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லையே?

இல்லை. அனைத்து யூனிட்டுகளுக்கும் சர்க்குலராக அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதியே அமைக்கப்பட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. இதில் ரகசியம் எதுவுமில்லை.

கமிட்டியில் மூன்றாவதாக வெளி நபர் இணைக்கப்பட்டுள்ளாரா?

ஓய்வுபெற்ற பெண் காவல் அதிகாரி சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரே துறையில் வேலை செய்து ஓய்வுபெற்ற நபர் அல்லவா அவர்?

அது எனக்குத் தெரியவில்லை, எனக்கு கமிட்டி சட்டப்படி கொடுத்துள்ளார்கள். நான் அதற்குத் தலைமை ஏற்றுள்ளேன். அதில்தான் நான் வேலை செய்ய முடியும். கமிட்டியை மாற்றிக் கொடுங்கள் என்று நான் சொல்ல முடியாது அல்லவா?

அது மாதிரி நடைமுறை உள்ளதா?

சட்டப்படி ஒரு நபர் என்.ஜி.ஓ அல்லது அதில் திறமைபெற்ற கையாளத் தெரிந்த ஒரு நபர். சரஸ்வதி தொடர்ச்சியாக இதில் அனுபவம் பெற்றவர்.

எஸ்.பி.யின் புகார் எந்த நிலையில் உள்ளது?

இப்போதுதான் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி விரைவில் கூட உள்ளது. சட்டப்படி கமிட்டி அதன் வேலையைச் செய்யும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டரில் புகாருக்கு உள்ளான அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை, அவர் அத்துறையிலிருந்துகூட மாற்றப்படவில்லை என தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளார்.

விசாகா கமிட்டி முறையாக செயல்பட வேண்டும், அதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றால் வெளிநபராக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கு பதில் என்.ஜி.ஓ ஒருவர் நியமிக்கப்பட்டால் தான் அது முறையான கமிட்டியாக இருக்க முடியும் என்ற வாதம் வலுத்து வருகிறது.

இந்நிலையில் விசாகா கமிட்டியின் முதல் சம்பிரதாயப்பூர்வமான கூட்டம் இன்று எம்.ஆர்.சி நகரில் உள்ள மாநில குற்ற ஆவணக் காப்பக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விசாகா கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் எஸ்.பி.யின் புகார் குறித்தும், அடுத்து கூட்டம் நடத்துவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x