Published : 01 Aug 2018 08:23 PM
Last Updated : 01 Aug 2018 08:23 PM

சம்பா சாகுபடிக்கான ஆயத்தங்களை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் துரைக்கண்ணு

நெல் விதைகள் மற்றும் தேவையான உரங்களை உரிய காலத்தில் பெற்று சம்பா சாகுபடிக்கான ஆயத்தப்பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் துரைக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி குறித்து வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், வேளாண்மை இயக்குநர், தலைமைப் பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்மை இணை இயக்குநர்கள், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மேட்டூர் அணை வழக்கமாக திறக்கும் நாளான ஜூன் 12-ம் தேதியன்று போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் பாசனத்திற்காக நீர் திறந்திட இயலாத நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு ரூ.115.67 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்தது. இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் 3.074 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில், நெல் விதை விநியோகம், வேளாண் கருவிகள் விநியோகம், சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் விநியோகம், டீசல் இன்ஜின் விநியோகம், இயந்திர நடவு / திருந்திய நெல் சாகுபடிக்கான மானியம், நுண்ணூட்ட கலவை விநியோகம், துத்தநாக சல்பேட் விநியோகம் ஆகிய இனங்களில் முன்னேற்றம் குறித்து வேளாண்மைத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் குறைந்த நீரில் அதிக லாபம் தரக்கூடிய பயறு வகை பயிர்களை சாகுபடி செய்வதற்கு பயறு வகை விநியோகம், தெளிப்பு நீர் பாசன கருவிகள் விநியோகம், திரவ உயிர் உரங்கள் விநியோகம், பயறு நுண்ணூட்ட கலவை விநியோகம் மற்றும் டிஏபி உரத் தெளிப்பிற்கு மானியம் உள்ளிட்ட பணிகளையும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் பசுந்தாள் உர பயிர் விதைகள் விநியோகம் மற்றும் நீர் கடத்தும் குழாய்கள் விநியோகம் ஆகிய பணிகளையும் ஆய்வு செய்தார்.

டெல்டா பகுதி வேளாண் பெருமக்களின் நலன் கருதி பாசனத்திற்காக, கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி முதல்வர் பழனிசாமியால் மேட்டூர் அணை திறந்து வைக்கப்பட்டது.

தற்போது திறந்து விடப்பட்ட நீரினைப் பயன்படுத்தி பசுந்தாள் உர பயிர்கள் சாகுபடி, நெல் விதை விநியோகம் மற்றும் சம்பா சாகுபடிக்கான ஆயத்தப் பணிகள் குறித்து வேளாண்மைத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். ஆகஸ்டு மாதம் இரண்டாம் வாரத்தில் நீண்ட கால நெல் ரகங்களான சி.ஆர். 1009, சி.ஆர்.1009 சப் 1, ஏ.டி.டி.49 போன்ற ரகங்களை சாகுபடி செய்ய ஏதுவாக அதற்கு தேவையான விதைகளை போதிய அளவில் டெல்டா மாவட்டங்களில் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும், தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

சம்பா சாகுபடிக்கு தேவையான டி.ஏ.பி, யூரியா, காம்ப்ளெக்ஸ் மற்றும் பொட்டாஷ் போன்ற ரசாயன உரங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்களின் தரம், தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களால் ஆய்வு செய்து உறுதி செய்யப்படவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

விவசாயிகள் நெல் விதைகள் மற்றும் தேவையான உரங்களை உரிய காலத்தில் பெற்று சம்பா சாகுபடிக்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்குப் பின்னர் நீண்டகால நெல் ரகங்களை சாகுபடி செய்து, அதிக மகசூல் பெற வேண்டுமாய் விவசாயிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். வேளாண் பெருமக்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை அவ்வப்போது விவசாயிகளுக்கு வழங்கி, உயர் மகசூல் பெறுவதற்கு உதவுமாறு அனைத்து வேளாண் துறை அலுவலர்களையும் அறிவுறுத்தினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x