Published : 17 Aug 2018 09:24 AM
Last Updated : 17 Aug 2018 09:24 AM

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு: தமிழக தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என்று தமிழக அரசி யல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை: இந்திய தலைவர்களால் மட்டுமல்லாமல் உலகத் தலைவர்களாலும் பெரிதும் விரும்பப்பட்ட தலைவர் வாஜ்பாய். அவர் ஒரு மாபெரும் ஜனநாயகவாதி. அவரது அமைச்சரவையில் நான் 13 மாதங்கள் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினேன். அவரது காலத்தில்தான் இந்தியா முழுவதும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. போக்குவரத்துத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தினார். அவரது மறைவு கட்சி மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே பேரிழப்பாகும்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: வாஜ்பாயின் மறைவுச் செய்தி கேட்டு பெரிதும் வேதனையடைந்தேன். கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கரு ணாநிதியிடம் அன்பும் நட்பும் பாராட்டியவர். ஈழத் தமிழர்கள் உரிமை காக்க மதுரையில் நடந்த டெசோ மாநாட்டில் பங்கேற்று தமிழி னத்துக்கு பெருமை சேர்த்தார். காவிரி நதி நீர் ஆணையத்தை உருவாக்கினார். தனது ஆட்சிக்கே ஆபத்து என்று தெரிந்தும் கூட திமுக ஆட்சியை கலைக்க மறுத்தவர். முரசொலி மாறன் மத்திய தொழில் அமைச் சராக இருந்தபோது, அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து ஊக்கமும் ஆக்க மும் அளித்தார் என்பதை எந்நாளும் மறப் பதற்கில்லை. மத்தியில் அமைந்த கூட்டணி ஆட்சிகளில் அவரது தலைமையிலான ஆட்சி குறிப்பிடத்தக்கதொரு மைல்கல். அவரது மறைவு நாட்டுக்கும், நாட்டின் பன்முகத்தன்மைக்கும் பேரிழப்பாகும்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: 1999 தேர்தலில் முதல் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக் கப்பட்டேன். அதன்பிறகு வாஜ்பாயுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் மறைந்த பிறகு என்னை மத்திய அமைச்சராக்கினார். எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் நேசித்த மகான் அவர். தேசத்துக்காக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தங்க நாற்கர சாலை, பொக்ரான் அணுகுண்டு சோதனை என நாட்டை நிமிர வைத்தவர். அவரது மறைவு பாஜகவுக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிறந்த அரசியல்வாதி. பாஜகவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இந்திய அரசியலில் முத்திரை பதித்த தலைவர். கட்சி பாகுபாடு இல்லாமல் அனை வரையும் ஒருங்கிணைத்து செல்கின்ற தலைவ ராக இருந்தார். சிறந்த வல்லமை பொருந்திய, பேச்சாற்றல் மிக்க தலைவர். அவருடைய இழப்பு நம் நாட்டுக்கு பேரிழப்பு.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக் கரசர்: பாஜகவின் தலைவராக இருந்தாலும் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர். சிறுபான்மை மக்கள் மீது அன்பு கொண்டவர். அவரால் ஈர்க்கப்பட்டுதான் நான் பாஜகவில் இணைந்தேன். என்னை மத்திய அமைச்சராக்கினார். மதம், ஜாதி, இனம், மொழி, கட்சி, மாநிலம் என எல்லைகளைக் கடந்து அனைவர் மீதும் அன்பு செலுத்திய மகத்தான தலைவர். அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அன்பு கொண்டவர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்த என்னைப் போன்றவர்களை பாஜகவை நோக்கி ஈர்த்த வாஜ்பாயின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒருவர் பிரதமர் பதவியில் 5 ஆண்டுகள் நீடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். வளர்ச்சியின் நாயகன். இன்றைய இந்தியாவின் வளர்ச் சிக்கு அவர் கொண்டு வந்த தங்க நாற்கரச் சாலை போன்ற திட்டங்களே காரணம். பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உணர்த்தியவர். அவரது மறைவு நாட்டுக்கும், பாஜகவுக்கும் பேரிழப்பு.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: கொள்கையால் மாறுபட்டாலும்கூட வாஜ் பாயின் இனிய பண்பு அனைவருக்கும் எடுத்துக்காட்டானது. கடந்த 2001-ல் டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப் பட்டபோது பிரதமராக இருந்த அவரை சக தலைவர்களுடன் சென்று சந்தித்தோம். அப்போது இடிக்கப்பட்டது தவறு என்பதை உணர்ந்து உடனடியாக மாற்று இடம் அளிக்க உத்தரவிட்ட பெருந்தன்மை குணம் கொண்டவர். திராவிடர் கழகம் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது. அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு.

நடிகர் ரஜினிகாந்த்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் மிகப்பெரிய தலைவரான அவரது ஆன்மா அமைதி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்: ஆர்எஸ்எஸ். முழுநேர ஊழியராக இருந்த நான் 1991-ல் பாஜகவுக்கு அனுப்பப்பட்டேன். அன்று முதல் வாஜ்பாயிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதனை வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். தமிழ் மொழி, கலாசாரம் மீதும், தமிழர்கள் மீதும் அன்பும், மரியாதையும் கொண்டவர். அண்ணா, கருணாநிதியோடு நட்பாக பழகியவர். அவர்களும் வாஜ்பாய் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். தேசத்தை உயிரென நேசித்த தலைவர் மறைந்தார் என்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: வாஜ்பாய் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற் பட்ட தலைவராகவும், நாட்டுக்காக தங்க நாற்கர சாலை திட்டத்தை கொண்டு வந்து, இந்தியா வளர்ந்த நாடாக மாறியதற்கு முக்கிய காரணமானவர். அவர் வழியில் என்று சொல்பவர்கள் உண்மையில் அவர் வழியில் லஞ்சம், ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா வல்லரசு நாடாக மாறும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: என்னை வளர்ப்பு மகன் என்று சொல்லி, என் மீது மிகவும் அன்பு காட்டினார். என் தகுதிக்கு அது அதிகம்தான். மனிதாபிமானம் மிக்கவர். அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர். சிறந்த பண்பாளர். தமிழகத்தில் சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பிரகடனம் செய்தார். கோடானுகோடி மக்களுக்காக வாழ்ந்த அந்த தலைவர், மதசார்பின்மையையும் காப்பாற்றினார். எனது 52 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பெரிதும் மதிக்கும் அண்ணா, கருணாநிதியைப் போல வடபுலத்தைச் சேர்ந்த தலைவர்களில் நான் பெரிதும் மதிக்கும் மாபெரும் தலைவர் வாஜ்பாய்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி உயர்ந்த இடத்தை அடைந்தவர் வாஜ் பாய். பாஜக இன்று மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருப்பதற்கு வாஜ்பாய் இட்ட அடித் தளமே காரணம். பிரதமராக இருந்தபோது நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங் களை தந்தவர். அவரது மறைவு பாஜகவுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் மிகப்பெரிய இழப்பு.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலை வர் திருமாவளவன்: மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் மதித்து நடந்த மகத்தான தலைவர் வாஜ்பாய். மாநில கட்சிகளின் உரிமைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்து நிறைவேற்றியுள்ளார். கவிஞர், பேச்சாளர், சிறந்த நிர்வாகி பன்முக திறமை கொண்ட அவரின் இழப்பு நாட்டுக்கு பேரிழப்பாகும். கூட்டணி கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி அதன்படி அனைவரையும் அரவணைத்து ஆட்சி நடத்தியவர்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. நெடிய அரசியல் வரலாற்றுக்கு சொந்தக்காரரான அவர், சிறந்த நாடாளுமன்றவாதி. நாட்டின் வளர்ச்சியை தனது நோக்கமாகக் கொண்டு திட்டங்களை கொண்டு வந்தவர். சகோதர நேசத்தை முன்னிறுத்திய மனிதநேயம் கொண்ட மாமனிதர். அவர் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு: கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்ட வாஜ்பாயின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது அமைச்சரவையில் நான் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் தங்க நாற்கர சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த கால கட்டத்தில் தமிழகத்தில் 1,300 கி.மீ. அளவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டன. அதனை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க முடியாது.

கவிஞர் வைரமுத்து: கவிதை மனம் கொண்ட ஒருவன் பொதுவாழ்வில் புகுந்தால் அவன் கடைசிவரை கண்ணியமாகவே இருப்பான் என்பதற்கு வாஜ்பாயின் வாழ்வே எடுத்துக்காட்டு.

அவர் பிரதமராக இருந்தபோது அவரது கவிதைகளின் தமிழ்ப் பதிப்பை பிரதமர் இல்லத்தில் வெளியிட்ட நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த அன்பு இப்போது என் கண்களில் ஈரமாகிறது. அகில இந்திய கவியரங்குக்கு என்னை அமெரிக்கா அழைத்துச் சென்ற பண்பும் நினைவில் கசிகிறது. கொள்கை வேறுபாடுகளுக்கு மத்தியிலும் மனிதநேயம் என்ற புள்ளியில் இதயங்கள் இளைப்பாற முடியும் என்று சொல்லிப் போகிறது வாஜ்பாயின் வாழ்க்கை. அதைத்தான் அரசியலின் நிகழ்காலம் நெஞ்சில் எழுதிக் கொள்ள வேண்டும்.

ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி: அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் சென்ற எளிமையான, அன்பான, உயர்ந்த சிந்தனை கொண்ட தலைவரான வாஜ்பாயின் மரணம் மன வேதனையைத் தருகிறது. சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு.

சமக தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x