Published : 05 Jul 2018 05:29 PM
Last Updated : 05 Jul 2018 05:29 PM

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் அவல நிலைக்கு மருத்துவர்களை தள்ளிய தமிழக அரசு: மருத்துவர் சங்கம் வேதனை

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அவல நிலைக்கு அரசு டாக்டர்களை தமிழக அரசு தள்ளியுள்ளது வருத்தமளிக்கிறது என மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரேசன், பொதுச் செயலாளர் நவீன்ராஜா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் முன்னிலையில் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர், அதன் விபரம் வருமாறு:

“தமிழக அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம், பதவி உயர்வு,படிகள் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என தமிழக அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டுள்ளன.

பல முறை உயர் அதிகாரிகளை சந்தித்து இது குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு கட்டப் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

# அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கூடாது.

# அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

# பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சி கால பயிற்சி ஊதியத்தை ,மத்திய அரசுக்கு இணையாக உயர்த்திட வேண்டும்.

இக் கோரிக்கைகளை நிறை வேற்றிட தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளுக்காக சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ள அரசு மருத்துவர்களையும்,

அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் தலைவர்களையும் தமிழக அரசு உடனடியாக அழைத்துப் பேசவேண்டும்.

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அவல நிலைக்கு அரசு டாக்டர்களை தமிழக அரசு தள்ளியுள்ளது வருத்தமளிக்கிறது” இவ்வாறு அந்த அறிக்கையில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x