Published : 16 Jul 2018 08:39 PM
Last Updated : 16 Jul 2018 08:39 PM

இன்று காமிக்ஸ் புத்தகம்; நாளை அனிமேஷன் திரைப்படம்: பொன்னியின் செல்வனை முன்வைத்து நனவாகி வரும் ஒரு கனவு

தமிழ் கூறும் நல்லுலகின் சமகால வாசகர்கள் எதை மறந்தாலும் கல்கியின் பொன்னியின் செல்வனை மறக்க மாட்டார்கள். அதன் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஓவியர்கள் மணியம், மணியம் செல்வம், பத்மவாசன் என பல்வேறுபட்ட தூரிகைகளின் சித்திரங்கள் மூலம் அவர்தம் மனதைக் கொள்ளைகொண்டு வியாபித்து நிற்பதை யாராலும் அழித்திட முடியாது. அந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு பொன்னியின் செல்வனை சலனப்படங்கள் (Animation) வரிசையில் கொண்டு வந்திருக்கிறார் சரவணராஜா.

முகப்பு பக்கத்திலேயே, ‘வாருங்கள் நண்பர்களே, எங்கள் காமிக்ஸைப் படித்து ரசியுங்கள்!’என வந்தியத்தேவன் கட்டியம் கூறுகிறார். அதற்கு பின்பாட்டு போல், ‘என்ன ஓய், வந்தியத்தேவரே, நீரே களத்தில இறங்கீட்டீரா?’என்று பட்டை நாமத்துடன், தடியை ஒய்யாரமாக நிறுத்தியபடி கேள்வி கேட்கிறார் ஆழ்வார்க்கடியான் நம்பி.

முதல் பக்கத்திலேயே ஆதிகாலத்து மின் விசிறி சுழல்கிறது. பழங்கால கடிகாரத்தில் ‘டிங்-டாங்’சத்தத்துடன் பெண்டுலம் ஆடுகிறது. அதன் முன்னே நாற்காலியில் அமர்ந்திருக்கும் மனிதரை எங்கோ பார்த்திருக்கிறோமே. அட, நம்ம எழுத்தாளர் கல்கி.

அவர் பேசுகிறார்: ‘வணக்கம். நான் கிருஷ்ணமூர்த்தி. பொன்னியின் செல்வனின் வாசகர்களுக்கு வணக்கம். உங்களை ஆயிரம் ஆண்டுகள் பின்னுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். அது எப்படி சாத்தியம் என்று நீங்கள் எண்ணலாம். என்னுடன் சில ஓவியர்களின் துணைகொண்டு அது சாத்தியப்படுமா என முயற்சித்து பார்க்கப்போகிறேன்...!’

ஆம், சரவணராஜா. தன் நிலா காமிக்ஸ் நிறுவனம் மூலம் 30 ஓவியர்களின் துணைகொண்டு பொன்னியின் செல்வன் பாத்திரங்களை ‘அனிமேஷன்’ ஓவியங்கள் வடிவில் நமக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். இதுவரை நான்கு அத்தியாயங்கள் (நான்கு புத்தகங்களாக) வெளிவந்து பல பதிப்புகள் கண்டு, பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் விற்றுத்தீர்ந்து விட்டன. அநேகமாக தமிழில் பிரபலப்பட்ட முக்கிய நீண்டதொரு நாவல் இப்படி அனிமேஷன் வடிவில் வருவது இதுவே முதல்முறை.

இத்தனைக்கும் சரவணராஜா பதிப்புத்துறை சார்ந்தவர் அல்ல. ‘எங்கோ, எதற்கோ புறப்படுகிறோம். வேறெங்கோ வந்து சேருகிறோம். தேடாத ஒன்றையும் கண்டடைகிறோம். அதுதான் இது!’ என்று யதார்த்தமாகப் பேசுகிறார். கோவை அரசு நூலகம் ஒன்றின் விழாவில் கலந்து கொண்ட அவரிடம் உரையாடியதிலிருந்து...

‘ஒரு கதை நல்லா இருக்கணும்னா அதில் அன்பு, பாசம், நேசம், காதல், கயமை, வீரம், பண்பு என வரும் அனைத்து பண்புநலன் பிம்பங்களும் சிறப்பாக இருக்க வேண்டும். அது கல்கியின் பொன்னியின் செல்வன் பாத்திரப் படைப்புகள் அத்தனையும் நிறைந்திருக்கும். இப்படியொரு கதை மாந்தர்களை அனிமேஷன் திரைப்படமாக தயாரித்தால் உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும். எனவே அதற்காகவே 2014-ல் திட்டமிட்டோம். அப்படி இதைத் திரைப்படம் எடுக்க 4 ஆண்டு காலம் பிடிக்கும். சுமார் ரூ.24 கோடி செலவு பிடிக்கும். அதற்கு பெரிய முதலீட்டாளர்கள் தேடினோம். எடுத்த எடுப்பில் அதற்கு முதலீட்டாளர்கள் கிடைப்பது அபூர்வத்திலும் அபூரவம் என்பதால் முதலில் இதை நாம் அணுகுவதை விட, அவர்களே தேடி வருவதுதான் சரியானதாக இருக்கும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தோம். முதலில் இதை காமிக்ஸ் வடிவில் கிராபிக்ஸ் புத்தகமாக வெளியிடலாமே. அப்படி புத்தகம் வரும்போது செலவு குறைவாக இருக்கும். மக்களின் வரவேற்பு எப்படி என்பதையும் அறிந்துகொள்ள முடியும். அதைப் பார்த்து அனிமேஷன் படம் எடுக்க முதலீட்டாளர்களும் வரக்கூடும் என்பதால் இந்த ஏற்பாட்டை 2016-ம் ஆண்டில் தொடங்கினோம்.

இந்த ஒரு வருடத்தில் நாங்கள் எதிர்பார்த்ததில் விற்பனையிலும் சரி, மக்களின் வரவேற்பிலும் 70 சதவீதம் வெற்றி இலக்கை அடைந்து விட்டோம். அந்த அளவுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்ப்பவர்கள் பிரமிக்கிறார்கள். அதைப் பற்றி மற்றவர்களிடமும் சொல்கிறார்கள். சென்னை புத்தகக் காட்சியில் இந்தப் புத்தகங்கள் மட்டும் பல்லாயிரக்கணக்கில் விற்றுத்தீர்ந்தன (10 நாட்களில் 15 ஆயிரம் புத்தகங்கள்). முந்தின நாள் இங்கே வந்து புத்தகம் வாங்கிப்போனவர்கள் ஆளுக்கு குறைந்தது 2 பேரையாவது அடுத்தநாள் கூட்டி வந்திருக்கிறார்கள். அவர்களும் இதை வாங்கிவிட்டுப் பாராட்டாமல் போவதில்லை. அடுத்த இதழ் எப்போது வரும் என்று ஆர்வமுடன் நேரில் கேட்பதோடு, போனிலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!’ என்றவர் உலகத்தில் இப்போது அனிமேஷன் படங்களுக்கு உள்ள வரவேற்பைப் பற்றிப் பேசலானார்.

அனிமேஷன் படங்கள், புத்தகங்கள் உலகத்தரத்தில் இருந்தால் மட்டுமே வெற்றியடைய முடியும். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அனிமேஷன் படங்களில் மனிதர்கள் வரமாட்டார்கள். வரைகலைகளே பேசும். அதன் மூலம் ரசிகர்களை, பார்வையாளர்களை ஒன்றரை மணி நேரம் உட்கார வைத்தாக வேண்டிய ரசிப்புடன் கூடிய விஷயங்கள், சலனங்களின் (நாகேஷ், வடிவேலு மாதிரி, ரஜினி மாதிரி புதுவகை உடல் மொழி சலனம்) ஊடாக இருப்பது அவசியம். இந்தப் படங்கள் வெளிநாடுகளிலும் விற்றாகவேண்டும் என்பதால் மொழி கடந்த விஷயமாகவும் இது இருத்தல் வேண்டும்.

தமிழ்நாட்டில் அனிமேஷன் திரைப்படங்கள் என்றால் உடனே ரஜினியின் கோச்சடையான் மட்டுமே பலருக்கும் நினைவுக்கு வருகிறது. அதன் தோல்வியும் கூடவே தொற்றிக்கொள்கிறது. உலகத்தரத்திலான அனிமேஷன் படங்களை அந்தக் கண்கொண்டு பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் ரஜினியின் மகள் அந்த படத்தை ஆர்வ மிகுதியால் எடுத்தார்.இயக்குநரான அவரிடம் அனிமேஷன் பணி புரிந்தவர்களுக்கும், அவருக்குமான புரிதலின் வெளிப்பாடே கோச்சடையான் தோல்வி. அதைப் பற்றி நிறைய விவாதிக்க முடியும். அது இங்கே அவசியமில்லை.

இன்றைக்கு ஹாலிவுட் படங்களில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என தேர்வு பெறும் முதல் பத்து படங்களில் குறைந்தபட்சம் 3 அல்லது 4 படங்கள் அனிமேஷன் படங்களாகவே இருக்கின்றன. அதன் மூலம் அவற்றின் தரம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட படங்கள் வெளியாகும்போதே, அதன் தயாரிப்பாளர் அந்த அனிமேஷன் காட்சிகளையே காமிக்ஸ் வடிவில் புத்தகங்களாக கொண்டு வந்து விடுகிறார். அதுவே வீடியோ கேம், டாய்ஸ், டிவி தொடர்கள் என மார்க்கெட்டுக்கு வந்து எல்லா முனைகளிலும் அதற்கு பிரபல்யம் தேடித் தந்து விடுகிறது. இதனால் அனிமேஷன் படங்கள், காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ கேம்கள், டாய்ஸ்கள் வர்த்தகத்தில் சக்கைப் போடு போடுகின்றன.

டிவி தொடர்களும் சூப்பர் ஹிட்டாகி ரேட்டிங்கிலும் உச்சத்திற்கு செல்கின்றன. ஒரு அனிமேஷன் படத்தை வெற்றியடைய வைக்க அங்கே எவரும் எதையும் விட்டு வைப்பதில்லை. ஆனால் இந்தியாவின் நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது. இங்கே பாகுபலி, கபாலி போன்ற சினிமா கதாநாயகர்களை முன்வைத்து ரசிப்பு வெளிப்படுவதால் அனிமேஷன் படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லாத சூழல் நீடிக்கிறது. அனிமேஷனைப் பொறுத்தவரை கதையும்யை விட கதை பாத்திரங்களும், கதை சொல்லப்பட்ட விதமும், அதை சலனப்படுத்தி காட்சிப்படுத்திய விதமும்தான் தரமாகக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒரு படம் எடுக்கப்பட்டால் அமெரிக்காவில், லண்டனில் வசிக்கும் வெளிநாட்டவர் பார்த்து ரசிக்க வேண்டும். அவர்களின் காட்சியில் கமலோ, ரஜினியோ, அமிதாப்போ தெரிய மாட்டார்கள். தெரியவும் கூடாது. அந்த வகையிலேயே நாங்கள் பொன்னியின் செல்வனை எடுக்க திட்டமிட்டிருக்கோம்!’ என்றவர் தான் இந்தத் துறைக்கு வந்ததன் சூழலைப் பற்றிச் சொன்னார்.

‘நான் கோவை சிஐடி கல்லூரியில் பொறியியல் சிவில் முடிச்சேன். மேற்கொண்டு கிண்டியில் எம்பிஏ படிச்சுட்டு ஆறுவருஷம் தனியார் நிறுவனத்தில் வேலை செஞ்சேன். பிறகு அனிமேஷன் சுயதொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் ஒன்றை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினேன். அதற்கு 15 வருஷம் கழிச்சு 2009-ல் திரைப்படங்களுக்கு ஸ்பெஷல் எஃபக்ட் வேலைகள் செய்யும் கூடுதல் மையத்தை ஆரம்பிச்சேன். இப்பவும் ஹாலிவுட் படங்களுக்கு ஸ்பெஷல் எஃபக்ட் செய்து கொடுக்கும் பணிகளை 120 பேர் கொண்ட எங்களது ஒரு குழு செய்து கொண்டிருக்கிறது. அதில் மற்றொரு முயற்சியாகவே 2014-ல் அனிமேஷன் திரைப்படம் எடுக்கும் பணியைத் திட்டமிட்டோம். அதற்கென தனி குழுவினரையும் ஏற்படுத்தினோம். அதை செய்வதற்கு முன்பு காமிக்ஸ் வடிவிலான பொன்னியின் செல்வன் கிராபிக்ஸ் புத்தகங்களை எங்களில் 30 ஓவியர்கள் உள்ள டீம் வடிவமைக்கிறது.

தலைமைப் படைப்பாளர் கார்த்திகேயன் இதில் வசனங்கள், சலன வடிவங்கள் போன்றவற்றை எப்படி அமைக்க வேண்டும் என்பதை மற்றவர்களுக்குச் சொல்லி வழிநடத்துவார். ஓவியர்கள் அதற்கான ஓவியத்தை வரைந்து கொள்வார்கள். அதன் அசைவுகளை அதில் ஒரு பிரிவு ஓவியர்கள் மென்பொருளைப் பயன்படுத்தி வடிவமைப்பார்கள். நானும் கல்கியின் கதையை முழுமையாகப் படித்து உள்வாங்கினவன் என்ற முறையில் இதை வாசகர்கள் இப்படியே விரும்புவார்கள். இப்படித்தான் வடிவம் செய்ய வேண்டும்; அப்போதுதான் எடுபடும் போன்ற யோசனைகளை கொடுக்கிறேன். இப்போது உள்ள இந்த 30 பேர் கொண்ட குழுவே பொன்னியின் செல்வன் அனிமேஷன் படம் எடுக்கும்போதும் அப்பணிக்கான மையக்கருவாக செயல்படும். என்ன அதில் 150 முதல் 200 பேர் வரை இடம் பெற்றிருப்பர்!’ என்றவரிடம், இதற்கான செலவுகளை எல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள். இதன் மூலம் வருவாய் போதுமானதாக இருக்கிறதா? என்று கேட்டோம்.

‘இப்போதைக்கு தமிழ்நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த நல்ல ஓவியர்களை ஒருங்கிணைத்தே இந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறோம். அதில் மிக முக்கியமான செலவே அவர்களுக்கான சம்பளம்தான். இப்போது பொன்னியின் செல்வன் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில்தான் வெளியாகியிருக்கிறது. அடுத்ததாக மராத்தி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் பெங்காலி ஆகிய மொழிகளிலும் கொண்டு வர உள்ளோம். அது நிச்சயம் கைகொடுக்கும்!’ என்கிறார் பெருத்த நம்பிக்கையோடு.

பொன்னியின் செல்வன் புதினத்தை தஞ்சாவூர்காரர் ஒருவர் படக்கதை வடிவில் கொண்டு வந்தாராம். அதை முழுக்க முழுக்க ஓவியர்களை கொண்டே வரைந்து வெளியிட்டாராம். குறிப்பிட்ட சில வெளியீடுகளுக்கு மேல் அவரால் அதை வெளிக்கொண்டு வர முடியவில்லையாம். இப்படியொரு நாங்கள் இந்தப் புத்தகம் பதிப்பித்த பிறகே சில பதிப்பாளர்கள் மூலம் அறிந்து கொண்டோம். அது போல இல்லாமல் இதை முழுமையாக அச்சிடாமல் விட மாட்டோம்!’ என்கிறார் சரவணராஜா. அவரின் எண்ணம் வெற்றியடைய வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x