Published : 16 Jul 2018 08:28 AM
Last Updated : 16 Jul 2018 08:28 AM

பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாள் விழா: அமைச்சர்கள், தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கும் படத்துக்கும் அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 116-வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சரோஜா, பா.பெஞ்சமின், எம்.பி.க் கள் ஜெயவர்தன், விஜயகுமார், மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தியாகராய நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள காமராஜர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தேசிய செயலாளர் ஏ.செல்லக்குமார், சென்னை வடக்கு மாவட்டத் தலைவர் ரூபி மனோகரன், கிழக்கு மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன், மாநில மகளிரணித் தலைவர் ஜான்சிராணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு திருநாவுக்கரசர், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

மெரினாவில் உள்ள காமராஜர் சிலைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திலும் காமராஜர் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன், துணைத் தலைவர் விடியல் சேகர், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, தேமுதிக மாநில வர்த்தக அணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யு. சந்திரன், அமமுக தேர்தல் பிரிவு செயலாளர் ஜி.செந்தமிழன், சமக தலைவர் ஆர்.சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி கலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை ஜிம்கானா கிளப் வாயிலில் உள்ள காமராஜர் சிலைக்கு தி.க. தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் முன் னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் பொருளாளர் நாசே ராமச்சந்திரன்,கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் உளளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x