Published : 14 Aug 2014 11:09 AM
Last Updated : 14 Aug 2014 11:09 AM

இந்து அமைப்பு நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்ட 6 பேர் கைது: கோவை போலீஸ் அதிரடி நடவடிக்கை

கோவையில், இந்து அமைப்புகளைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத், மூகாம்பிகை மணி ஆகிய இரு நிர்வாகிகளை கொலை செய்து, மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சித்ததாக 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சுரேஷ்குமார் ஜுலை மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையை சேர்ந்த காஜா மொய்தீன், திருப்பூரை சேர்ந்த அத்தாவுல்லா உட்பட சிலரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவையில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்து முன்னணியின் மாநிலப் பேச்சாளர் மூகாம்பிகை மணி ஆகியோரை கொலை செய்து மதக் கலவரத்தை தூண்ட சதித் திட்டம் தீட்டி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் சந்திரமோகன், ரவிக்குமார் அடங்கிய தனிப்படை விசாரணை நடத்தியது.

இந் நிலையில், செல்வபுரத்தை சேர்ந்த சையது அப்துல் ரகுமான் உமரி(30), என்.எச். சாலை மானியத் தோட்டத்தைச் சேர்ந்த என்.சதாம் உசேன்(24), சுக்ரவார்பேட்டை பட்டுநூல்கார சாலையைச் சேர்ந்த எ.நவ்சாத் (30), ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்த ஒய்.ரகமத்துல்லா(24), சாரமேடு, மதீனா நகரைச் சேர்ந்த எம்.அப்துல் ரசீத்(26), பாத்திமா நகரைச் சேர்ந்த எச்.முகமது அசாருதின்(27) ஆகியோரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

இது குறித்து தனிப்படை போலீஸார் கூறியதாவது:

‘‘இந்த 6 பேரும் `வகாதி இ இஸ்லாம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் இந்து அமைப்பின் முக்கிய நிர்வாகிகளைக் கொலை செய்யத் திட்டம் வகுத்துள்ளனர்.

சுரேஷ்குமார் கொலைக்குப் பின்னர் தேடப்பட்டு வந்த காஜா மொய்தீன், வகாதி இ இஸ்லாம் அமைப்பின் திருப்பூர் மாவட்டப் பிரதிநிதியான அத்தாவுல்லா வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளார். அங்கிருந்தபடி, தங்களது சதித் திட்டங்களை தீட்டியுள்ளனர்.

அதன்படி, அர்ஜுன் சம்பத், மூகாம்பிகை மணி ஆகியோரை கொலை செய்யத் திட்டம் வகுத்துள்ளனர். இதற்காக, ஜுன் கடைசி வாரத்தில் செல்வபுரத்தில் உள்ள சையது அப்துல் ரகுமான் உமரி வீட்டில் இளைஞர்களை காஜா மொய்தின் சந்தித்துள்ளார். தொடர்ந்து, திருப்பூர், கோவை பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை சந்தித்து தங்களது அமைப்பில் சேர்த்துள்ளனர். தற்போது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் சையது அப்துல் ரகுமான் உமரி, பழைய சிமி அமைப்பின் முன்னாள் கோவை மாவட்ட நிர்வாகி.

கைது செய்யப்பட்டவர்கள் மீது கூட்டுச் சதி, மதரீதியான பிரிவை ஊக்குவித்தல், பொதுமக்களிடம் கலகம் உண்டாக்கும் நோக்கில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x