Published : 12 Jul 2018 07:45 PM
Last Updated : 12 Jul 2018 07:45 PM

காவல் துறையினர் வாரம் ஒருமுறை தனது குடும்பத்தினருடன் செலவழிக்க அனுமதிக்க வேண்டும்: நீதிபதி கிருபாகரன்

 காவல் துறையினருக்கு வார விடுப்பு என்பது ஏட்டில் மட்டுமே உள்ளது, காவல் துறையினர் வாரம் ஒருமுறை குடும்பத்தினருடன் செலவழிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள நீதிபதி கிருபாகரன் வார விடுமுறை குறித்து அரசின் விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறையினரின் நலன், பணி குறைப்பு, ஆர்டர்லிகள் தொடர்பான வழக்குகள் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கடந்த முறை நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்த போது காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் ஏன் விடுப்பு வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி அதற்கு அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இன்று விசாரணையின் போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அவர் போலீஸ் நடைமுறை உத்தரவில் உள்ள விதிமுறைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தார். அதில் காவல் துறையினர் ஒவ்வொருவருக்கும் வார விடுப்பு வழங்கப்படுவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் வார விடுப்பு நாளில் பணிக்கு வரும் காவலர்களுக்கு 200 ரூபாய் கூடுதல் பணி நேர ஊதியம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன் “ஒவ்வொரு வாரமும் 200 ரூபாய் தருகிறார்கள் என்றால் யாரும் விடுப்பு எடுக்க மாட்டார்கள், பணிக்கு வரத்தான் செய்வார்கள். அரசு ஊழியர்கள் மாதத்தில் இரண்டு நாள் விடுப்பு எடுக்கும் நிலையில் காவலர்களுக்கு ஏன் ஒரு நாள் சுழற்சி முறையில் வார விடுப்பு அளிக்கக்கூடாது? அதுகுறித்து விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

காவல் பணியில் ஈடுபடும் காவலர்களை வாரத்தில் ஒரு நாளாவது தங்கள் குடும்பத்துடன் செலவிட அரசு அனுமதிக்க வேண்டும். காவல்துறையின் பணி என்பது மிகவும் அவசியமானது. காவல் துறையினர் இல்லையென்றால் ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்ற நிலை உருவாகி விடும்.

அதேபோல் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு மூல காரணமே மதுபானம் அருந்துவதுதான். காவல்துறை மீதும், அரசு மீதும் தான் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர், அந்த நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

கடந்தாண்டு 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற காவல் துறையினரின் குழந்தைகள் பெரும்பாலானோர் போக்குவரத்து காவலர்களின் வாரிசுகளாக இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் சட்டம் ஒழுங்கு காவல் துறை மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் வீட்டிற்கு செல்வது சிரமமாக இருந்ததும் ஒரு காரணம்.

மாறாக, போக்குவரத்து காவல்துறையினர் குடும்பத்திடம் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பிருந்தது. அதனால் அவர்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு என்பது ஆவணங்களில் மட்டுமே உள்ளது. அதை நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது? என்பதை விளக்கமாக தெரிவிக்க வேண்டும்.

இதுதவிர காவல்துறையின் நலஆணையம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவது, எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

விடுப்பு நேரத்தில் பணிக்கு வரும் காவலர்களுக்கு ரூ.200 வழங்கப்படும் என்ற விதியை மாதத்தில் ஒரு வாரத்திற்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று மாற்ற முடியுமா? என்பதையும் அரசிடம் விளக்கம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கு ஜுலை 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x