Published : 19 Jul 2018 02:19 PM
Last Updated : 19 Jul 2018 02:19 PM

காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம்; தமிழக மக்களுக்காக இறுதி மூச்சுவரை உழைத்தவர் ஜெயலலிதா: முதல்வர் பழனிசாமி

காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி தமிழக மக்களுக்காக இறுதி மூச்சுவரை உழைத்தவர் ஜெயலலிதா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து விட்டு, தண்ணீருக்கு மலர் தூவி வரவேற்றார்.

அதன்பின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

''மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலிதா ஆகியோருடன் விவசாயிகளும், பொதுமக்களும் இணைந்து, கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் காவிரி நீரினுடைய உரிமையைப் பெறுவதற்காக போராடி மிகப்பெரிய வெற்றியை தமிழக அரசு பெற்றுத் தந்திருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சாதனை. உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் 177.25 டிஎம்சி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசுவழங்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி தமிழக மக்களுக்காக இறுதி மூச்சுவரை உழைத்தவர் ஜெயலலிதா. அவர் மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாகவே காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டும் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கிடைக்க வேண்டிய பங்கு நீரை இந்த இரண்டு அமைப்புகளும் முறைப்படி பெற்றுத்தருவதற்காக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மத்திய அரசு அமைத்திருக்கின்றது.

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டும் கூடி, விவாதிக்கப்பட்டு, முதற்கட்டமாக நமக்கு ஜூன் மாதத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டது. ஜூலை மாதம், கர்நாடக அரசால் வழங்க வேண்டிய நீரின் அளவு 31.24 டிஎம்சி தண்ணீர். மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. கடந்த மாதம் மேட்டூர் அணை வறண்டு கிடந்தது. ஒரே மாதத்தில் 1 லட்சம் கன அடிக்கு மேற்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து, 109 அடி உயர்ந்திருக்கிறது. இன்னும் 3 நாட்களில் 120 அடியை எட்டும்.

ஒவ்வொரு மாதமும் கர்நாடகத்திலிருந்து ஆகஸ்டு மாதம் 45.95 டிஎம்சி, செப்டம்பர் மாதம் 36.76 டிஎம்சி, அக்டோபர் மாதம் 20.22 டிஎம்சி, நவம்பர் மாதம் 13.78 டிஎம்சி, டிசம்பர் மாதம் 7.35 டிஎம்சி, ஜனவரி மாதம் 2.7 டிஎம்சி பிப்ரவரி முதல் மே மாதம் வரை 2.50 டிஎம்சி தண்ணீரும் கர்நாடக அரசு மேட்டூர் அணைக்கு வழங்க வேண்டும்.

விவசாயிகள் பயன்பெற வேண்டுமென்பதற்காக தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் முன்பருவம், காரிப்பருவம் மற்றும் பின்பருவம் ராபி முதலான சாகுபடி பருவத்தில் பயிரிடும் பயிர்களுக்கு உபயோகித்திட 20 முதல் 25 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இந்த ஆண்டிற்கு பயன்படுத்தப்படவிருக்கிறது.

டெல்டா பாசன விவசாயிகளுக்குத் தேவையான நீர் இன்றைய தினத்திலிருந்து திறக்கப்படுகின்றது. படிப்படியாக நீரின் அளவை அதிகரித்து, விவசாயிகளுக்கு பாசனத்திற்கு எவ்வளவு நீர் தேவைப்படுகிறதோ அந்தளவுக்கு முழுமையாக கடைக்கோடியிலிருக்கின்ற விவசாயிகளுக்குக்கூட பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கு தமிழக அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதோடு, காவிரிப் படுகையில் இருக்கின்ற கிழக்குக் கரை , மேற்குக் கரை பாசன விவசாயிகளுக்கும் குறித்த காலத்திலே தண்ணீர் திறந்துவிடப்படும்.

சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்கு வெற்றியினை நினைவுகூறும் வகையில், மேட்டூர் அணை பூங்கா பகுதியில் நினைவு ஸ்தூபி அமைத்தல் மற்றும் மேட்டூர் அணைப் பூங்காவை மேம்பாடு செய்வதற்கான மதிப்பீடான ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மேட்டூர் அணை பூங்கா பகுதியில் நினைவு ஸ்தூபி அமைப்பதற்காக ரூபாய் 1.25 லட்சம் கோடியும், மேட்டூர் அணைப் பூங்காவை மேம்பாடு செய்வதற்காக 0.75 கோடியும், ஆகமொத்தம் ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேட்டூர் அணை கட்டப்பட்டு சுமார் 83 ஆண்டு காலம் ஆகிறது. இந்த 83 ஆண்டு காலத்திலே மேட்டூர் அணை தூர்வாராமல் இருந்தது. இந்தப் பகுதியில் இருக்கின்ற விவசாயிகளும், டெல்டா பாசன விவசாயிகளும் நீண்டகாலமாக இருக்கின்ற மேட்டூர் அணையிலே வண்டல் மண் படிந்து அதனுடைய நீரின் கொள்ளளவு குறைந்திருக்கிறது. ஆகவே, வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள கோரிக்கை வைத்தார்கள். அதன்படி, மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்வதற்கு ஆணையிட்டு, நாள்தோறும் 3000 லாரியில் மேட்டூர் அணையிலிருந்து வண்டல்மண் எடுக்கப்பட்டு விவசாயிகளுடைய நிலங்களுக்கு இயற்கை உரமாக பயன்படுத்தினார்கள்.

மேட்டூர் அணையைச் சுற்றிலும்  உள்ள விவசாயிகள் இந்த வண்டல் மண்ணை அள்ளி, அவர்களுடைய நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் தண்ணீர் வடிந்த பிறகு, அந்த அணைப் பகுதியில் இருக்கின்ற வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளிக்கொள்ளலாம்.

இந்த அரசு விவசாயிகளுடைய அரசு, விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை அளிக்கின்ற அரசு. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி, டெல்டா பாசனத்தில் இருக்கின்ற குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுவோம். ஆனால் ஜூன் 12 ஆம் தேதி போதிய நீர் அணையிலே இல்லாத காரணத்தால், குறுவை சாகுபடிக்கு உரியநேரத்தில் தண்ணீர் திறக்க முடியவில்லை. இருந்தாலும், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, டெல்டா பாசனத்தில் இருக்கின்ற விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யவேண்டும், இல்லையென்றால் அந்த விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதி, குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார்.

குறிப்பிட்ட காலத்திலே மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கமுடியாத ஒரு சூழ்நிலை இருந்தபொழுது, மூத்த அமைச்சர்களோடு கலந்து பேசி, இன்றைக்கு டெல்டா பாசன விவசாயிகளுக்கு, அங்கே இருக்கின்ற நிலத்தடி நீரை பயன்படுத்தி, குறுவை சாகுபடி செய்யலாம் என்ற ஒரு அறிவிப்பை கொடுத்து அதற்குத் தேவையான உதவிகளையும் செய்வதற்காக, குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்து, அதற்காக ரூபாய் 115 கோடி தமிழக அரசு விவசாயிகளிக்கு அளித்து விவசாயிகளை ஊக்கப்படுத்தி, விவசாயிகள் குறுவை சாகுபடி திட்டத்தை மேற்கொண்டிருக்கின்றார். ஆகவே தண்ணீர் இல்லாவிட்டாலும்கூட, இருக்கின்ற நிலத்தடி நீரை வைத்து விவசாயிகள் அந்த பயிரை நடவு செய்ய வேண்டுமென்ற ஒரு நோக்கத்தில், இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

வரலாற்று சாதனையாக பவானி சாகர் அணைக்கு கிட்டத்தட்ட 24 டிஎம்சி தண்ணீர் வந்துவிட்டது, கடந்தகாலம் வெறும் 3 டிஎம்சி தண்ணீர்தான் இந்த காலக்கட்டத்தில் இருந்தது. அமராவதி அணை நிரம்பிவிட்டது. முல்லை பெரியாறு அணை நிரம்பிக் கொண்டிருக்கிறது. கோயம்புத்தூரில் இருக்கின்ற சிறுவாணி அணை நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. சிறுவாணியில் இருந்துதான் கோவை மாநகர மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்யமுடியும். அது வறண்டு இருந்த காரணத்தால் கடுமையான குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. அதுமட்டுமல்ல, பெரும்பாலான அணைகள், பரம்பிக்குளம், ஆழியாறு, மணிமுத்தாறு, பாபநாசம் என பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்ற அணைகள் எல்லாம் இன்றைக்கு நல்ல பருவமழை பெய்ததன் காரணமாக அந்த அணைகளுடைய நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. எல்லா அணைகளிலிருந்தும் குறித்த காலத்தில் விவசாயிகளுக்கு பாசன வசதிக்காக, விவசாயம் செய்வதற்காக தண்ணீர் திறக்கப்படும்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களெல்லாம் போராட்டம் நடத்தினார்கள். சரியாக உச்ச நீதிமன்றத்திலே வாதாடவில்லை, ஆகவே நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லையென்ற தவறான, அவதூறான கருத்தையெல்லாம் தமிழகத்திலே பரப்பி வந்தார்கள். தமிழக அரசு சட்டப் போராட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நிலையான தீர்ப்பை பெற்றுத் தந்திருக்கின்றோம். ஆகவே, இன்றைக்கு அவர்களெல்லாம் எதுவும் பேசமுடியாத அளவுக்கு, நல்ல மழைபொழிந்து, அணைகளெல்லாம் நிரம்பிக் கொண்டிருக்கின்றது.

மறைந்த ராமசாமி படையாச்சியார் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தேன். கடலூர் மாவட்டத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவுமண்டபம் அரசின் சார்பாக கட்டப்படும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறேன்” என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x