Published : 25 Jul 2018 09:24 PM
Last Updated : 25 Jul 2018 09:24 PM

பரங்கிமலை ரயில் விபத்தில் தீரத்துடன் செயல்பட்ட ரியல் ஹீரோ இளைஞர்கள்: பொதுமக்கள் பாராட்டு

பரங்கிமலை ரயில் விபத்தில் போலீஸார் மற்றும் ரயில்வே ஊழியர்களே உடல்களைத் தொடத்  தயங்கியபோது சக மனிதர்களாய் களத்தில் இறங்கி காயம்பட்டவர்களுக்கு உதவிய ரியல் ஹீரோக்களான மூன்று இளைஞர்களுக்குப் பாராட்டு குவிகிறது.

இளைய தலைமுறையின் வேகம் கட்டுக்கடங்காதது. அதை முறைப்படுத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சக்தி சமுதாயத்திற்கு உதவும் விதத்தில் மாறும். இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. சமீப காலமாக முக்கியமான பேரிடர் நேரங்களில் இளைஞர்களின் உதவும் மனப்பான்மை பாராட்டும் விதமாகவும் நெகிழும் விதமாகவும் உள்ளது.

2015-ம் ஆண்டு சென்னையை விழுங்கிய பெருவெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காக்கவும், நிவாரணப் பணிகளிலும், பின்னர் உதவும் பணியிலும் இளம் தலைமுறையினர் ஆற்றிய பணி ஈடு இணையில்லாதது. இதைப் பல சந்தர்ப்பங்களில் சென்னை கண்டுள்ளது. சமீபத்திய நிகழ்வு பரங்கிமலை ரயில் விபத்து.

அன்று காலை வழக்கம் போல் பரபரப்புடன் விடிந்தது. நேற்று பரங்கிமலையில் தண்டவாளத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி இரண்டு பயணிகள் உயிரிழந்து விட்டார்களாம் என்று பேசியபடி கடற்கரை ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அதில் இருப்பவர்களுக்குத் தெரியாது நாமே செய்தியாகப் போகிறோம் என்று.

அன்று பல குடும்பங்களின் நிம்மதியை வாழ்நாள் முழுவதும் தொலைக்கும் அந்த சம்பவத்துக்கு முன்னோடியாக மாம்பலம் கோடம்பாக்கம் இடையே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ரயில் சேவை பாதித்து காலை 6 மணியிலிருந்து 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

7.45 வரை ரயில்கள் கிளம்பாததால் அத்தனை ரயிலிலும் செல்ல வேண்டிய மொத்த பயணிகளின் எண்ணிக்கையும் கூடியது. மாணவர், இளைஞர், வேலைக்குச் செல்வோர், உறவினர்களை பார்க்கச் செல்வோர் என ஆணும் பெண்ணுமாய் கூட்டம் நிரம்பி வழிய 7.45 ரெயிலில் அத்தனை கூட்டமும் முண்டியடித்தது.

தொங்கியபடியாவது பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள், பயனிகள் தொங்கியபடி செல்ல எழும்பூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் டிராக்கில் ரயிலை மாற்றிவிட்டனர், குறிப்பிட்ட சில ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும் திருமால்பூர் அதிவிரைவு பாசஞ்சர் ரயில் பரங்கிமலை வந்தபோது வேகமாக அந்த ரயில் நிலையத்தைக் கடந்தது.

அப்போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது. அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் அந்தப் பாதையில் பயணிகள் ரயில் பெட்டியின் கதவுகள் மூடியிருக்கும் என்பதால் பெட்டிக்கு நெருக்கத்தில் பக்கவாட்டுச் சுவர் இருந்தும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் அதே பாதையில் சாதாரண பாசஞ்சர் ரயில் அதுவும் முழுதாகப் பயணிகள் தொங்கியபடி சென்ற ரயில் அந்தப்பக்கவாட்டுச் சுவரை கடந்தபோது கொத்து கொத்தாக சுவரில் மோதி சுவருக்கும் பெட்டிக்கும் இடையில் சிக்கி தண்டவாளத்தில் விழுந்து உடலுறுப்புகள் சிதைந்து 4 பேர் உயிரிழந்தனர்.

இருவர் தலை துண்டாகி மரணத்தின் வலிகூட உணரும் முன் உயிரிழந்தனர். போர்க்களம் போல் காட்சி அளித்த அந்தக் காட்சியை கண்டு பயணிகள் அலறினர். ஆனால் யாரும் அவர்கள் அருகில் செல்லவில்லை.

4 பேர் உயிரிழந்து கிடக்க, அதில் இருவர் தலைவேறு உடல் வேறாக கிடக்க 6 பேர் உடல் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அதில் ஒருவர் இரண்டு கால்களும் துண்டாகிக் கிடந்தார்.

அந்த நேரத்தில் ஒருவர்கூட அவர்கள் பக்கம் செல்லவில்லை. அனைவரும் கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சதீஷ், சலீம் மற்றும் கபீர் என்ற 3 இளைஞர்கள் உடனடியாக களத்தில் இறங்கி காயமடைந்தவர்களை தூக்கி பிளாட்பாரத்தில் கிடத்தினர். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து தைரியமூட்டினர்.

தலை வேறு உடல் வேறாகக் கிடந்தவர் தலையை எடுத்து உடலோடு வைத்தனர். சிதறிக்கிடந்த பொருட்களைச் சேகரித்தனர். பலரை அடையாளம் காண அவர்களது நோட்டுப்புத்தகங்கள் தான் உபயோகமாக இருந்தன. அதை சேகரித்து எடுத்து வைத்தனர். தாமதமாக வந்த மீட்புப் படையினரும் மெத்தனமாக செயல்பட மூன்று இளைஞர்களும் தங்களை மீட்புப்படையினராகவே மாற்றிக்கொண்டனர்.

கடகடவென்று காயமடைந்தவர்களை தூக்கி ஸ்ட்ரெச்சரில் ஏற்ற உதவி செய்தனர். இதில் அவர்கள் உடையெங்கும் காயம்பட்டவர்களின் ரத்தம் படிந்தது. அதைப்பற்றி கவலைப்படவில்லை. உதவி செய்து ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்புவதில் குறியாக இருந்தனர்.

பின்னர் உயிரிழந்தவர்களின் உடலை வண்டியில் ஏற்ற ஸ்ட்ரெச்சரை தூக்கக்கூட ஆள் இல்லை. அந்த மூன்று இளைஞர்களும் பிணத்தை தூக்கி வந்து ஸ்ட்ரெச்சரில் கிடத்த அதிகாரிகள் வேடிக்கை பார்க்கும் நிகழ்வுதான் அங்கு நடந்தது. தலையையும் அதே இளைஞர் எடுத்து உடலோடு ஒட்டவைத்தார்.

அதிகாரிகளிடம் உயிரிழந்தவர்கள், காயம்பட்டவர்களின் பொருட்களை ஒப்படைத்தனர். சிலரை அடையாளம் காண அவர்களது நோட்டுப் புத்தகங்களை தேடி எடுத்துக் கொடுத்தனர். இதை அங்குள்ள பலரும் பாராட்டினர்.

மூன்று இளைஞர்களின் இந்தச் செயலை நேரில் பார்த்த செய்தியாளர் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x