தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கொடி கம்பங்களை அகற்ற தடை கோரிய மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கொடி கம்பங்களை அகற்ற தடை கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

மதுரை: தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை அகற்ற தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எங்களது கொடிக் கம்பங்களை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிறுவி உள்ளோம். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் எங்களது கட்சி கொடிக் கம்பங்களை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

உரிமைகள் பறிப்பு: ஒரு சில இடங்களில் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி கொடிக் கம்பங்களை அகற்றி வருகின்றனர். இது எங்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது. எனவே, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை அகற்ற தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி சி.சரவணன் விசாரித்தார். அரசு தரப்பில், பொது இடங்களில் உள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது எனக் கூறப்பட்டது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in