Published : 23 Jul 2018 08:12 AM
Last Updated : 23 Jul 2018 08:12 AM

மதுரை அருகே சினிமா பாணியில் கேரள தொழில் அதிபர் கடத்தல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சினிமா பாணியில் கேரள தொழில் அதிபர், தனது உதவியாளருடன் காரில் கடத்திச் செல்லப்பட்டார். கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களில் ஒருவர் சிக்கினார்.

மேலூர் அருகே அரிட்டாபட்டியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் ‘சூப்பர் ரப்பர்’ என்ற பெயரில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இது கேரளாவைச் சேர்ந்த ஜோஸ் மேத்யூ என்பவருக்குச் சொந்தமானது. இவர் மதுரையில் வசித்து வருகிறார்.

ஜோஸ் மேத்யூ தனது தொழிற்சாலையை பார்ப்பதற்காக உதவியாளர் மத்தாகி என்பவருடன் காரில் நேற்று காலை அரிட்டாபட்டிக்குச் சென்றார். கேரளாவைச் சேர்ந்த ஜேம்ஸ் பாஸ் காரை ஓட்டினார்.

அரிட்டாபட்டி அருகே சென்றபோது, இவர்களைப் பின்தொடர்ந்து வந்த இரு கார்களில் ஒன்று திடீரென ஜேம்ஸ் மேத்யூவின் காரை முந்திச் சென்றது. பின்னால் வந்த மற்றொரு கார் மேத்யூவின் கார் மீது மோதியது. உடனே ஜேம்ஸ் பாஸ் காரை நிறுத்தினார்.

அப்போது முன்னால் சென்ற காரில் இருந்து 2 பேரும், பின்னால் வந்த காரில் இருந்து 2 பேரும் இறங்கி வந்தனர். இவர்கள் ஓட்டுநர் ஜேம்ஸ்பாஸை கடுமையாகத் தாக்கினர்.

பின்னர் 4 பேரில் ஒருவர் மட்டும் மாத்யூவின் காரில் ஏறினார். அதில் இருந்த மேத்யூ, அவரது உதவியாளரை கடத்திச் சென்றனர். மற்ற 3 பேரும் பின்னால் வந்த காரில் ஏறி பின்தொடர்ந்தனர்.

அப்போது மேத்யூவின் கார் ஓட்டுநர் திடீரென உதவி கேட்டு சப்தமிட்டார். இதைக் கேட்டு அவ்வழியாக அரிட்டாபட்டிக்குச் சென்ற அரசு நகர் பேருந்து நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகள் இறங்கி வந்து கடத்தல்காரர்களின் ஒரு காரை பிடித்தனர். அதில் இருந்த ஓட்டுநர் மட்டும் சிக்கினார். விசாரணையில், அவர் மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் எனத் தெரிய வந்தது.

இந்த கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து மேலூர் பகுதியில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். இதற்கிடையில் பகல் 12 மணி அளவில் மேத்யூ காரை சிவகங்கை அருகே நிறுத்திவிட்டு, அவரையும், அவரது உதவியாளரையும் கடத்தல் கும்பல் தங்களது காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. இக்கும்பல் ஏற்கெனவே பல்வேறு கடத்தல் உட்பட குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. கும்பலை பிடித்தால் பல தகவல்கள் வெளி வரலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x