சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியா? - நடிகை கவுதமி பதில்

நடிகை கவுதமி
நடிகை கவுதமி
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த நடிகையும், அதிமுக நிர்வாகியுமான கவுதமி, தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி முடிவு செய்வார் என தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கவுதமி திங்கள்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தார். கவுதமியை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர். ஆண்டாள் சந்நிதி, பெரிய பெருமாள் சந்நிதி, நரசிம்மர் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி, ஆண்டாள் அவதரித்த நந்தவனம் ஆகியவற்றில் கவுதமி சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் நடிகை கவுதமி கூறும்போது, “2026-ல் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான நியாயமான ஆட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. ஆண்டாள் தாயாரிடம் அதையே வேண்டி உள்ளேன். திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு எனது பணியை சிறப்பாக செய்தேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

2026 தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ளேன். புற்றுநோய் விழிப்புணர்வு, கல்வி என பல்வேறு விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துள்ளது. தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in