Published : 09 Jun 2025 02:58 PM
Last Updated : 09 Jun 2025 02:58 PM
கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடலூர் நகராட்சியில் உள்ள 20, 26, 27 ஆகிய வார்டுகளில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த வார்டு பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வந்தனர். இது குறித்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நகரமன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் இதுகுறித்து முறையிட்டனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று (ஜூன் 9) காலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் சென்னை - கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த நகரமன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, “தற்சமயம் குடிதண்ணீர் டேங்கரில் கொடுக்க சொல்கின்றேன். மேலும் ஓரிரு தினங்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மின்மோட்டார் சரி செய்யப்பட்டு விரைவில் தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT