Published : 02 Jul 2018 10:03 AM
Last Updated : 02 Jul 2018 10:03 AM

8 வழிச்சாலைக்கு எதிராக போராடியதாக விவசாயிகள் யாரும் கைது செய்யப்படவில்லை: முதல்வர் பழனிசாமி தகவல்

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் யாரையும், போலீஸார் கைது செய்யவில்லை என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியிலிருந்து, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை நோக்கி சென்ற முதல்வருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான பொன்னேரிக்கரையில் அதிமுகவினர் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

அப்போது, அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசியதாவது:

உச்ச நீதிமன்ற ஆணைப்படி, காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும். மேலும், சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக விவசாயிகள் யாரையும், போலீஸார் கைது செய்யவில்லை.

சுமார் 3 கோடியே 27 லட்சம் வாகனங்கள் தமிழகத்தில் உள்ளன. அதனால், வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது. வாகன விபத்து தடுப்பதற்காகவும், எரிபொருள் செலவை குறைப்பதற்காக சேலம்-சென்னை 8 வழிச்சாலை அவசியம் தேவை.

வேலூரிலிருந்து, சென்னை வரையில் உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x