புதுச்சேரி பாகூர் கிராமங்களில் குப்பை அகற்றும் பணியில் நூதன மோசடி - வீடியோவில் அம்பலம்

புதுச்சேரி பாகூர் கிராமங்களில் குப்பை அகற்றும் பணியில் நூதன மோசடி - வீடியோவில் அம்பலம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி பாகூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் குப்பை அகற்றும் பணியில் நூதன முறையில் நடைபெறும் மோசடி குறித்தான‌ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குப்பை அகற்றும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் குப்பைகளை அள்ளுவதற்குப் பதிலாக, ஊரின் சில பகுதிகளில் மணல், கல், மண்ணை அள்ளிச்சென்று, அவற்றைக் குப்பையாக எடுத்து எடை போட்டு அரசிடம் பணம் பெற்று வருவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகூர் சிவன் கோயில் எதிரே உள்ள பழுதடைந்த கட்டிடத்தை இடித்துக் கிடந்த கற்களை, அந்த நிறுவனம் வாரிச் சென்றதாகப் புகார் எழுந்த நிலையில், பொதுமக்கள் அதனைத் தடுத்து நிறுத்தினர். தற்போது அந்த தனியார் நிறுவனம் மீண்டும் பாகூர் பகுதியில் பல இடங்களில் மண், கல் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.‌

அந்த வீடியோவில் தனியார் நிறுவனத்தில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள், சாலையோரம் உள்ள‌ மண்ணை வாரி வேனில் ஏற்றுவதும், அதனை அங்கிருந்த மக்கள் வீடியோ எடுத்ததும், தாங்கள் தெரியாமல் செய்துவிட்டதாகக் கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன‌.

இதனிடையே, புதுச்சேரி அரசு உடனடியாக இதுபோன்ற நூதன மோசடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, உண்மையான குப்பையை மட்டும் அகற்றி, ஊரைத் தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை வேண்டுமெனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in