Published : 31 May 2025 06:11 PM
Last Updated : 31 May 2025 06:11 PM
அலகாபாத்: “நம் நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம், அது ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளதற்கான பெருமை அரசியலமைப்புக்கு மட்டுமே உரியது” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அறைகள் மற்றும் பல நிலை வாகன நிறுத்துமிட திறப்பு விழாவுக்குப் பிறகு பேசிய தலைமை நீதிபதி கவாய், "அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் இறுதி வரைவு அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, சிலர் அரசியலமைப்பு மிகவும் கூட்டாட்சி சார்ந்தது என்று கூறினர்; சிலர் அது ஒற்றையாட்சி சார்ந்தது என்று கூறினர். பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் அரசியலமைப்பு முற்றிலும் கூட்டாட்சியானது அல்லது முற்றிலும் ஒற்றையாட்சியானது அல்ல என்று பதிலளித்தார்.
ஆனால், ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். நெருக்கடி மற்றும் போர்க் காலங்களில் இந்தியாவை ஒற்றுமையாகவும் வலுவாகவும் வைத்திருக்கும் ஓர் அரசியலமைப்பை நாம் வழங்கியுள்ளோம். இன்று நமது அண்டை நாடுகளின் நிலை என்ன என்பதைக் காண்கிறோம். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா வளர்ச்சியை நோக்கி ஒரு பயணத்தை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், அது ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளது. இதற்கான பெருமை நம் அரசியலமைப்புக்கு உண்டு.
நீதி தேவைப்படும் இந்த நாட்டின் கடைசி குடிமகனையும் சென்றடைய வேண்டியது நமது அடிப்படைக் கடமை. அது சட்டமன்றமாக இருந்தாலும் சரி, நிர்வாகமாக இருந்தாலும் சரி, நீதித் துறையாக இருந்தாலும் சரி, அனைவரும் அந்த குடிமகனை சென்றடைய வேண்டும்" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT