Published : 27 Jul 2018 12:19 PM
Last Updated : 27 Jul 2018 12:19 PM

சட்டக்கல்லூரி ஆசிரியர் பணி: தமிழில் படித்தோருக்கு இடஒதுக்கீடு மறுப்பதா? - ராமதாஸ் கண்டனம்

சட்டக்கல்லூரி ஆசிரியர் பணிகளுக்கு தமிழில் படித்தோருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு சட்டக்கல்லூரிகளில் 186 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி தமிழில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது கண்டிக்கத்தக்கது.

இதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ள காரணம் அபத்தமானது; ஏற்க முடியாதது. உதவி சட்டப் பேராசிரியர் பணிக்கு குறைந்தபட்சக் கல்வித்தகுதி சட்ட மேற்படிப்பு ஆகும். தமிழகத்தில் முதுநிலை சட்டப்படிப்பு தமிழ் மொழியில் இல்லை என்பதால், எவருமே தமிழ் மொழியில் படித்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த பணிக்கு தமிழில் படித்தோருக்கான இடஒதுக்கீடு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவது குறித்த 2010 ஆம் ஆண்டின் 145 ஆம் எண் கொண்ட அரசாணையில், அரசுப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை தமிழில் படித்தவர்கள் முன்னுரிமை அடிப்படையிலான 20% இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அரசாணையை நேரடியாகப் பார்க்கும்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது சரி தானே? என்ற எண்ணம் ஏற்படும். ஆனால், தமிழில் படிப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தான் இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தோருக்கு உதவிப் பேராசிரியர் பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 

தமிழக அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் எந்த பணியாக இருந்தாலும் அதில் தமிழில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாணை எண் 145 பிறப்பிக்கப்பட்டது. பெரும்பாலான அரசு வேலைகளுக்கு பட்டப்படிப்பு அல்லது அதற்கும் குறைவான படிப்பு தான் குறைந்தபட்ச கல்வித் தகுதி என்பதால் அப்படி ஓர் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதற்கும் கூடுதலான கல்வித்தகுதி கொண்ட வேலைவாய்ப்புகள் குறித்து அப்போது யாரும் சிந்திக்காததால் அதுபற்றி அரசாணையில் குறிப்பிடப்படவில்லை. இத்தகைய சூழல்களில் அதுகுறித்து சட்ட வல்லுநர்களிடம் கருத்துக் கேட்டு முடிவு எடுப்பது தான் சரியானதாகும்.

கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான ஆள்தேர்வின் போதும் இந்த சிக்கல் எழுந்தது. மொத்தம் 187 பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் தமிழில் படித்தவர்களுக்கு 38 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், பொறியியல் உதவிப் பேராசிரியர் பணிக்கான அடிப்படைத் தகுதியான முதுநிலை பொறியியல் படிப்பை எவரும் தமிழில் படிக்கவில்லை என்பதால், அப்பணியிடங்கள் அனைத்தும் ஆங்கில வழியில் படித்தவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டன.

அப்போதே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாமக, முதுநிலைப் படிப்பை தமிழில் படித்தவர்கள் எவருமே இருக்க வாய்ப்பில்லை என்பதால், இளநிலைப் பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டை வழங்கியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. அதற்கேற்றவாறு 145 ஆவது அரசாணையில் திருத்தம் செய்திருந்தால் இப்பிரச்சினை எழுந்திருக்காது. ஆனால், அரசாணையில் திருத்தம் செய்வதற்கு பதிலாக இட ஒதுக்கீட்டையே ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்துவிட்டது தான் இப்போது ஏற்பட்டுள்ள அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் தமிழ் இலக்கியம் தவிர வேறு எந்த முதுநிலைப் பட்டப்படிப்பும் தமிழ் வழியில் கற்பிக்கப்படுவதில்லை. இவ்வாறு இருக்கும் போது, பட்டப்படிப்புக்கும் கூடுதலாக கல்வித் தகுதி கொண்ட பணியிடங்களைப் பொறுத்தவரை, பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்திருந்தாலே தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை அனுபவிக்கலாம் என்று அரசாணையில் தமிழக அரசு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அரசாணையில் தெளிவான விவரங்கள் இல்லாத நிலையில், உதவிப் பேராசிரியர் பணிக்கான தமிழ் வழிக்கல்வி இட ஒதுக்கீட்டை எவ்வாறு நிரப்புவது? என பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதற்கு பதிலாக தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டையே ரத்து செய்யும் முடிவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் எப்படி வந்தது? அதற்கான அதிகாரத்தை அந்த அமைப்புக்கு யார் கொடுத்தது? கடந்த ஆண்டுக்கான பொறியியல் உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிக்கையில் தமிழில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு உண்டு என எந்த அடிப்படையில் அறிவிக்கப்பட்டது? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் விடையளிக்க வேண்டும்.

உதவி சட்டப் பேராசிரியர் பணி நியமனத்தில், பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால் தமிழில் படித்த 38 மாணவர்களுக்கு வேலை கிடைத்திருக்கக்கூடும். அவ்வாறு செய்யாததன் மூலம் தமிழுக்கு தமிழக அரசு பெருந்துரோகம் செய்திருக்கிறது. அதற்கு பரிகாரம் தேடும் வகையில், உதவிப் பேராசிரியர் நியமனங்களில் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்திருந்தாலே தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை அனுபவிக்கலாம் என அரசாணையை திருத்த வேண்டும். அதனடிப்படையில் உதவி சட்டப் பேராசிரியர் பணி நியமனத்தில் தமிழில் படித்தோருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x