சைபர் க்ரைம் ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்டு அடம்பிடித்த புதுச்சேரி சிறுவன்!

புதுச்சேரியில் சைபர் க்ரைம் ஹெல்ப் லைனில் தொடர்பு கொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்ட சிறுவனின் பெற்றோரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
புதுச்சேரியில் சைபர் க்ரைம் ஹெல்ப் லைனில் தொடர்பு கொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்ட சிறுவனின் பெற்றோரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்ணான 1930-ஐ தொடர்பு கொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்டு அடம்பிடித்த சிறுவனின் பெற்றோருக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்ணான 1930-ஐ தொடர்பு கொண்டு யாரோ ஒருநபர் பானிபூரி, சாக்லேட் வேண்டும் என்று தொந்தரவு செய்து கொண்டே இருந்துள்ளார். இதையடுத்து, சைபர் க்ரைம் போலீஸார் சம்மந்தப்பட்ட எண்ணை அழைத்தபோது தொடர்பு கொள்ள முடியவிலை. இதையடுத்து அந்த எண்ணை கொண்டு போலீஸார் முகவரியை கண்டறிந்தனர். உடனே அந்த முகவரியில் உள்ள வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது சைபர் க்ரைம் காவல் நிலையத்தின் இலவச எண்ணை தொடர்பு கொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்டது 7 வயது சிறுவன் என்பதும், தற்போது பள்ளி விடுமுறைக்கு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து புதுச்சேரியில் தனது உறவினர் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளதும், அடிக்கடி தனது அம்மாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது சைபர் க்ரைம் தொடர்பான விழிப்புணர்வு விளம்பரத்தை கேட்டு, அதில் வரும் 1930 இலவச எண்ணை அறிந்து, அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசியதும் தெரியவந்தது.

இதைத் தெடார்ந்து எஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் சைபர் க்ரைம் போலீஸார் சம்மந்தப்பட்ட சிறுவனிடம் பேசினர். அவரிடம் எப்படி சைபர் க்ரைம் தொடர்பான இலவச எண் தெரியும் என்று கேட்டுள்ளனர். அப்போது அந்த சிறுவன், எனது அம்மாவுக்கு போன் செய்யும்போது அடிக்கடி 1930 இலவச எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆகவே, அந்த எண்ணை அழைத்து பானிபூரி, சாக்லேட் கேட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுவனின் குழந்தைத் தனத்தை புரிந்துகொண்ட போலீஸார், பெற்றோரை அழைத்து குழந்தைகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரண்டு நாட்களில் 8-க்கும் மேற்பட்ட முறை சிறுவன் அழைத்துள்ளார். இதுபோன்ற தொந்தரவு இனி நடந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துவிட்டு சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in